பெரியகுளம்
பெரியகுளம் (Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகராட்சி ஆகும். மேலும் , தேனி மாவட்டத்தின் முதல் 'நூற்றாண்டுகளைக்' கடந்த நகராட்சி ஆகும். இருப்பினும் தொழில் வளம் இல்லாத காரணத்தினால் நகராட்சிக்குரிய வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. பெரியகுளம் நகரம் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் நெருக்கமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை கண்டறிந்து உருவாக்க ஒரு முக்கியமான வழித்தடமாக ஒரு காலத்தில் பெரியகுளம் இருந்தது. பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருக்கும்போது மதுரை , திண்டுக்கலுக்கு அடுத்து புகழ் பெற்ற நகரமாக விளங்கியது . கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் பெரியகுளம் இயற்கையாகவே ஒரு நீர்வளம் மிகுந்த ஊராக உள்ளது.இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. நீதிமன்ற வளாகம், டவுன் யூனியன் கிளப், எட்வர்ட் பிரம்ம ஞான மந்திரம் பள்ளி, தென்கரை நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட மேலும் சில நூற்றாண்டுகள் கடந்த முக்கிய கட்டிடங்கள் உள்ளன. [சான்று தேவை]
பெரியகுளம் | |||||||
ஆள்கூறு | 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தேனி | ||||||
வட்டம் | பெரியகுளம் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். வி. ஷஜுவனா, இ. ஆ. ப [3] | ||||||
நகர்மன்றத் தலைவர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | பெரியகுளம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 42,976 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 282 மீட்டர்கள் (925 அடி) | ||||||
குறியீடுகள்
|
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
தொகுபாண்டியர்களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கன்னடம், மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் . [5] பெரியகுளம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,401 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 42,976 ஆகும். அதில் 21,345 ஆண்களும், 21,631 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.2%மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4095 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,457 மற்றும் 6 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.57%, இசுலாமியர்கள் 16.01%, கிறித்தவர்கள் 5.25% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[6]
கோயில்கள்
தொகு- அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. [சான்று தேவை]
- அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
- வரதராஜப் பெருமாள் கோயில்
- காளஸ்திரி கோயில்
- பகவதி அம்மன் கோயில்
- பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவில்
போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது.
மேலும் பெரியகுளம் நகரில், வைத்தியநாதசாமி மலைக் கோவில், வீச்சுக்கருப்பண்ண சாமி கோவில் , நகருக்கு அருகில் கைலாசப்பட்டி கைலாசநாதர் மலைக் கோவில் , ஈச்சமலை மகாலட்சுமி கோவில் உள்ளிட்ட காணத்தக்க கோவில்களும் உள்ளன.
சோத்துப்பாறை அணை
தொகுபெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலையில் உள்ள பேரிஜம் ஏரியிலிருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த அணையிலிருந்து சுமார் 8 கி .மீ தூரத்தில் கண்ணக்கரை என்ற மலை கிராமமும் , கண்ணக்கரையில் இருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் அகமலை என்ற மலை கிராமமும் உள்ளது. சோத்துப்பாறை அணையில் இருந்து கண்ணக்கரை வழியாக அகமலை செல்வதற்கு மலைச்சாலை உள்ளது.
வராக நதி
தொகுவராக நதி பெரியகுளம் நகரை, வடகரை மற்றும் தென்கரை என இரண்டாகப் பிரிக்கிறது. இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இந்த நதியில் எப்பொழுதும் நீர் இருப்பதால் இது வற்றாத நதி எனப்படுகிறது. புராணக் கதைகள் காரணமாக வராகநதி என்று அழைக்கப்படுகிறது.. இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.
தீர்த்த தொட்டி
தொகுநகரின் மேற்குப் பகுதியில் பாலசுப்ரமணியர் கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் இருந்து பூமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது.[சான்று தேவை]
கும்பக்கரை அருவி
தொகுஇங்கு கும்பக்கரை அருவி எனும் பிரபல அருவி உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 8 கி.மீ தூரத்தில் உள்ளது.கொடைக்கானல் வட்டக்கானல் என்னும் இடத்திலிருந்து இந்த அருவிக்கு தண்ணீர் வருகிறது. உயரம் குறைந்த சிறிய அருவியாக இருந்தாலும் கூட விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த அருவியை ஒட்டி கொடைக்கானலுக்கு வெள்ளகவி வழியாக செல்லும் மலையேற்றப் பாதை உள்ளது. வனத்துறை அனுமதி பெற்றவர்கள் மட்டும் மலையேற்றம் செய்ய முடியும். அருவியின் ஒரு கிலோமீட்டருக்கு முன்னால் பிரிந்து செல்லும் சாலையிலிருந்து அடுக்கம், பெருமாள் மலை வழியாக இருசக்கர மற்றும் சிறிய நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானல் செல்ல முடியும். எனினும், அந்த சாலையில் பயணிக்கும் முன் சாலையின் தற்போதைய நிலை குறித்த விசாரணைகள் தேவை .[சான்று தேவை]
புகழ் பெற்றவர்கள்
தொகு- இந்த ஊரைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் அறியப்படும் ஒரு முக்கிய அரசியல் தலைவராவார்.
- பழம்பெரும் மறைந்த திரைப்பட நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
- பழைய நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
- புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாலா அவர்கள் வளர்ந்த ஊர் பெரியகுளம்.
- தற்போதைய திரைப்படங்களின் நகைச்சுவை , குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குநர் சிங்கம் புலி அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
- பழம்பெரும் மறைந்த நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் அவர் குடும்பத்தினர் வாழ்ந்த ஊராகவும் பெரியகுளம் உள்ளது.
- தமிழக அரசின் விருதுகள் பெற்ற பிரபல கவிஞர் மு.மேத்தா அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Periyakulam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
- ↑ பெரியகுளம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்