மதுரை சுங்குடி சேலை

மதுரை சுங்குடி சேலைகள் மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குபவை ஆகும். சுங்கு என்ற தெலுங்கு சொல்லுக்குப் "புடவையின் மடிப்பு" எனப் பொருள்படும். மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு பல வண்ணப் பின் புலங்களில் வெண்மையான புள்ளிகளுடன் காணப்படுவதே இச்சேலைகளின் சிறப்பம்சமாகும் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தயாரிக்கப்படும் இச்சேலைகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகச் சந்தையில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளன.

வரலாறு

தொகு

சுமார் 400 வருடங்களுக்கு முன் ஆந்திராவின் மசூலிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த செளராட்டிரர்கள் "மஸ்லின்" எனச் சொல்லப்படும் துணிவகைகளை நெய்வதில் கை தேர்ந்தவர்களாய் இருந்தனர். பட்டு மற்றும் ஜரிகை ஆடைகளில் மிகவும் விருப்பம் கொண்ட திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட போது இவ்வகை கலைஞர்களை தமிழ்நாட்டின் மதுரைக்கு அழைத்து இவர்களுக்கு ஆதரவு தந்தார். இவர்கள் தமிழ்நாட்டின் பருத்தி இழைகளுடன் பட்டு ஜரிகை இழைகளையும் சேர்த்து சுங்குடி என்ற புதிய துணிவகையை அறிமுகம் செய்தனர். பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பிடித்த இச் சேலைகள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் துணி வகைகளான "பாந்தினி" அல்லது "பந்தேஜி" புடவைகளுடன் ஒத்துள்ளவை.

தயாரிப்பு முறை.

தொகு

மென்மையான பருத்தியினால் தயாரிக்கப்பட்ட துணிகள் முதலில் நன்றாக சலவை செய்யப்பட்டு வெளுக்கப்படுகின்றன. பின்பு அத்துணிகளில் இயற்கை சாயமேற்று முறையில் கட்டங்கள் வரையப்படுகின்றன. அவைகளில் வேலைப்பாடுகளுக்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டங்களில் முடிச்சுகள் இடப்படுகின்றன. பின்பு அவை சாயமேற்றப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட சேலைகளில் முடிச்சிடப்பட்ட பகுதிகள் சாயங்களில் நனைவதில்லை. ஆதலால் வட்டமான வெள்ளைப் புள்ளிகளாக அம்முடிச்சுகள் தோற்றம் அளிக்கும். பல்வேறு வண்ணப் பின்புலங்களுடன் உருவான பின்பு முந்தானை மற்றும் அடிப்பகுதிகளுக்கு தனிச் சாயம் ஏற்றப்படுகிறது.[1]

வளர்ச்சி

தொகு

தற்காலத்தில் பழைமையான கட்டுதல் மற்றும் சாயமேற்று முறைகள் அரிதாகி நவீன முறையில் சாயம் ஏற்றப்பட்ட சேலைகளில் மெழுகு அச்சுகள் இடப்படுகின்றன. சுங்குடிச் சேலைகளுக்கு புவிக்குறியீட்டு எண் தரப்பட்டு அவை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]நபார்டு வங்கி இந்த கலைஞர்களுக்கு கடனுதவி மற்றும் சந்தைகளுக்கான உதவிகளை அளித்துவருகிறது.

மேற்கோள்

தொகு
  1. சுண்டியிழுக்கும் மதுரை சுங்குடி சேலைகள்!
  2. http://articles.timesofindia.indiatimes.com/2009-01-12/chennai/28041022_1_gi-protection-geographical-indication-gi-mark[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_சுங்குடி_சேலை&oldid=3406025" இலிருந்து மீள்விக்கப்பட்டது