கே. எஸ். ராமகிருஷ்ணன்
கே. எஸ். ராமகிருஷ்ணன் (K. S. Ramakrishnan), தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1971ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் எல். கே. டி. முத்துராம் என்பவரை, 2412 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.[1][2]
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை கிழக்குத் தொகுதியின் பெயர், மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வரலாறு
தொகுகே. எஸ். இராமகிருஷ்ணன் துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர். மதுரை நகராட்சி மன்ற உறுப்பினராகவும், பின்னர் 1967 - 71களில் மதுரை நகராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் மேயர் முத்துவின் முயற்சியால், கே. எஸ். இராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
கே. எஸ். இராமகிருஷ்ணன், மதுரை இராமகிருஷ்ணா கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருக்கையில், மதுரையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நெசவாளர்களுக்கு திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புள்ள நிலையூர் பகுதியில் 1985ல் கைத்தறி நகர் நிறுவுவதற்கு பாடுபட்டவர்.
இவரது மகள் வழி பேரன் எஸ். எஸ். சரவணன், 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.