தோக்தமிசு
தோக்தமிசு (இறப்பு 1406) என்பவர் நீல ஹோர்டேயின் ஒரு முக்கியமான கான் ஆவார். இவர் கோல்டன் ஹோர்டேயின் வெள்ளை ஹோர்டே மற்றும் நீல ஹோர்டே பிரிவுகளை சிறிது காலத்திற்கு ஒருங்கிணைத்தார். இவர் செங்கிஸ் கானின் பேரன் துகா-திமுரின் வழித்தோன்றல் ஆவார்.
தோக்தமிசு | |
---|---|
கான் ஷாஹின்ஷா | |
தோக்தமிசு மற்றும் கோல்டன் ஹோர்டேயின் இராணுவம் 1382ல் மாஸ்கோ முன் பேரணி செல்கிறது. | |
ஆட்சி | 1380-1395 |
முடிசூட்டு விழா | 1378 |
முன்னிருந்தவர் | உருஸ் கான், மாமை |
பின்வந்தவர் | எதிகு |
மரபு | போர்சிசின் |
அரச குலம் | கோல்டன் ஹோர்டே |
பிறப்பு | வெள்ளை ஹோர்டே |
இறப்பு | 1406 தியுமன் |
சமயம் | இசுலாம் |
ஆரம்பகால படையெடுப்புகள்
தொகு1376ம் ஆண்டில் தோக்தமிசு முதன் முதலில் வரலாற்றுப் பதிவுகளில் தோன்றுகிறார். இவர் தன் தந்தையின் சகோதரரான உருஸ் கானை பதவியில் இருந்து வெளியேற்ற முயற்சித்தார். பின்னர் பெரிய தைமூரிடம் ஓடினார். இவர் உருஸ் மற்றும் அவரது இரு மகன்களையும் விட அதிக காலம் உயிர்வாழ்ந்தார். இவர் 1378ம் ஆண்டில் தைமூரின் ஆதரவுடன் வெள்ளை ஹோர்டேயின் கான் ஆக்கப்பட்டார்.
தோக்தமிசு தனது மூதாதையர்களின் அரசைப் போன்றதொன்றை நிறுவ விரும்பினார். கோல்டன் ஹோர்டேயை ஒன்றாக இணைக்க விரும்பினார். இவர் 1380ம் ஆண்டில், வோல்கா ஆற்றைக் கடந்து நீல ஹோர்டேயைத் தாக்கினார். இரண்டாம் கல்கா ஆற்று யுத்தத்தில் மமையைத் தோற்கடித்தார். நீல ஹோர்டேயின் ஆட்சியாளரான மமை குலிகோவா போருக்குப் பிறகு கொல்லப்பட்டார். இதன் பிறகு கோல்டன் ஹோர்டே மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.
1382ல் நீல மற்றும் வெள்ளை ஹோர்டேகளை மீண்டும் கோல்டன் ஹோர்டேவாக இணைத்த பின், குலிகோவா யுத்தத் தோல்விக்குப் பழிவாங்குவதற்காக தோக்தமிசு உருசியாவிற்கு எதிராகப் படையெடுத்தார். இப்போரில் உருசியா தோற்றது. இதனால் உருசியர்களின் கனவான தாதர் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுயாட்சி ஏற்படுத்துதல் சிறிது காலம் தாமதப்படுத்தப்பட்டது. ஆறே ஆண்டுகளில், தோக்தமிசு கிரிமியாவிலிருந்து பால்கசு ஏரி வரை இருந்த கோல்டன் ஹோர்டேயின் பகுதிகளை மீண்டும் இணைத்தார் .
மாஸ்கோவுக்கு எதிரான படையெடுப்பு
தொகுதிமித்ரி தோன்சுகோய் என்பவர் குலிகோவா யுத்தத்தில் ஒரு பெரும் இராணுவத்துடன் மமை தலைமையிலான மங்கோலிய-தாதர் ஹோர்டேயைத் தோற்கடித்தார். இதன் பிறகு அவரால் தோக்தமிசுக்கு எதிராக மீண்டும் ஒரு படையைத் திரட்ட இயலவில்லை. திமித்ரி கட்டவிழ்த்து விட்ட பகைமையை உணர்ந்த தோக்தமிசு மாஸ்கோவிற்கு எதிராக இராணுவத்தை அணிவகுத்தார். மூன்று நாட்கள் முற்றுகைக்குப் பிறகு இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி போர் நகர்ந்தது. தோன்சுகோயின் மைத்துனர்கள் ஒரு நாள் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டனர். நகர மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[1] மாஸ்கோவின் அழிவு திமித்ரியை தோக்தமிசிடம் 1382ல் சரணடைய வழிவகுத்தது. தோன்சுகோயின் மகனைப் பணையக்கைதியாக தோக்தமிசு பிடித்தார்.
-
தோக்தமிசின் மாஸ்கோ முற்றுகை, 1382.
-
1382ல் மாஸ்கோ முற்றுகையின்போது.
-
கோல்டன் ஹோர்டேயின் போர்வீரர்கள் மாஸ்கோவை தாக்கியபோது.
-
1382ல் மாஸ்கோ மக்கள் முற்றுகைக்குத் தயாரானபோது.
தைமூருக்கு எதிரான போர்கள்
தொகுதோக்தமிசு இல்கானேட்டின் கோபனிடுகளை வெல்ல முடியும் என்று நம்பினார். காக்கேசியாவின் சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று நம்பினார். இவை பெர்கே கான் காலத்திலிருந்தே பிரச்சினைக்குரிய பகுதிகளாக இருந்தன. 1385ல் தோக்தமிசு 50,000 (5 தியுமன்) இராணுவ வீரர்களுடன் பாரசீகத்தின் மீது படையெடுத்தார். தப்ரீசு நகரைக் கைப்பற்றினார். வடக்கு நோக்கித் திரும்பும்போது 2,00,000 அடிமைகளைப் பிடித்துக் கொண்டுவந்தார். இவர்களில் பல்லாயிரக்கணக்கான ஆர்மீனியர்களும் அடங்குவர். இவர்கள் பர்ச்கஹயக், சையுனிக் மற்றும் அர்த்சக் மாவட்டங்களில் இருந்து பிடிக்கப்பட்டனர்.[2] ஆனால் இது தோக்தமிசு செய்த பெரும் தவறாகும். ஏனெனில் இல்கானேட்டைச் சேர்ந்தவர்கள் தைமூரின் பக்கம் இணைந்தனர். தைமூர் பாரசீகத்தைத் தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். ஆத்திரமடைந்த தோக்தமிசு மீண்டும் திரும்பி தனது முன்னாள் கூட்டாளி மீது போர் தொடுத்தார்.
இறுதியில், தோக்தமிசு தோல்வியுற்றார். தனது புல்வெளிப் பகுதிக்குத் திரும்பினார். எனினும், 1387ம் ஆண்டில் இவர் திடீரென்று திரான்சோக்சியானா மீது படையெடுத்தார். இது தைமூரின் பேரரசின் மையப்பகுதியாகும். துரதிர்ஷ்டவசமாக கடுமையான பனிப்பொழிவு தோக்தமிசை புல்வெளிக்கு மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது.
1395ல் பிரச்சினை இறுதிக்கட்டத்தை எட்டியது. தைமூர் கோல்டன் ஹோர்டேயைத் தாக்கினார். தரக் ஆற்றினருகே நடந்த போரில் தோக்தமிசைத் தோற்கடித்தார். தைமூர் கோல்டன் ஹோர்டேயின் முக்கிய நகரங்களான அசோவ் (தனா), அசத்ரகான்[3] மற்றும் தோக்தமிசின் தலைநகரான சராய் பெர்கே ஆகியவற்றைச் சூறையாடினார். தைமூர் கோல்டன் ஹோர்டேயின் கலைஞர்களையும் கைவினைஞர்களையும் பிடித்தார். வெள்ளை ஹோர்டேயின் கைப்பாவை அரசராக கொயிரிசக்கை நியமித்தார். தெமுர் குத்லுக்கை ஹோர்டேயின் கானாக நியமித்தார்.
தோக்தமிசு உக்ரைனியப் புல்வெளிகளுக்குத் தப்பினார். லித்துவேனியாவின் பெரிய சீமான் வைதவுதசின் உதவியைக் கேட்டார். 1399ல் ஒர்சக்லா நதியினருகே நடந்த பெரிய போரில் தோக்தமிசு மற்றும் வைதவுதசு ஆகியோரின் கூட்டுப்படைகள் தைமூரின் தளபதிகளான கான் தெமுர் குத்லுக் மற்றும் எதிகு ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டன. 1406ல் தோக்தமிசு எதிகுவின் வீரர்களால் தியுமன் எனுமிடத்தில் கொல்லப்பட்டார்.
இவரே மங்கோலிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை தயாரித்த கடைசி கான் ஆவார்.
குடும்பம்
தொகுஇவருக்கு 8 மகன்கள்;
- சலால் அல்-தின் கான் இபின் தோக்தமிசு
- கரிம் பெர்தி
- கெபக் கான்
- சப்பார் பெர்தி
- கதீர் பெர்தி கான்
- அபு சயித் கான்
- இசுகாந்தர் கான்
- கோசா கான்
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ https://books.google.com/books?id=kPwX2dW-V6sC&pg=PA57&dq=Tokhtamysh&hl=en&sa=X&ei=QZdwU7u1Au-IyAOE7ICwAw&ved=0CFUQ6AEwBw#v=onepage&q=Tokhtamysh&f=false
- ↑ The Turco-Mongol Invasions IV, Medieval Armenian History, Turkish History, Turkey
- ↑ https://books.google.com/books?id=9JHwVtL7qDcC&pg=PA224&dq=Tokhtamysh&hl=en&sa=X&ei=QZdwU7u1Au-IyAOE7ICwAw&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=Tokhtamysh&f=false
நூற்பட்டியல்
தொகு- Kołodziejczyk, Dariusz (2011). The Crimean Khanate and Poland-Lithuania: International Diplomacy on the European Periphery (15th-18th Century). A Study of Peace Treaties Followed by Annotated Documents. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004191907. Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-10-30.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)