தோட்டத் தொழிலாளி

தோட்டத் தொழிலாளி என்பது, பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியைக் குறிக்கும். குடியேற்றவாதக் காலத்தில், ஐரோப்பியக் குடியேற்றவாத வல்லரசுகள் தாம் கைப்பற்றிக்கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெருந்தோட்டங்களை உருவாக்கினர். இப்பெருந்தோட்டங்களில், பெரிய பரப்பளவில் வணிக முக்கியத்துவம் கொண்ட தேயிலை, இறப்பர், கரும்பு, காப்பி, போன்றவை பயிரிடப்பட்டன. இத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். பெரும்பாலும், இத்தேவைக்கு உள்ளூரில் தொழிலாளர்களைத் திரட்டாமல், வேறு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டதைக் காண முடிகிறது. தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும், தோட்டத்துக்கு உள்ளேயே வாழ்ந்தனர். இது தொழிலாளர்களைத் தமது இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவியது.

இலங்கையின் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் இந்திய வம்சாவழித் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் மலாயா, இலங்கை, மொரீசியசு, போன்ற நாடுகளுக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். இத்தொழிலாளர்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததுடன், குறைந்த வசதிகளுடனேயே வாழவேண்டியும் இருந்தது. இவ்வகையான பிணைப்பில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் எதுவும் இன்றிக் குடும்பம் குடும்பமாகப் பல தலைமுறைகள் தோட்டங்களுக்குள்ளேயே கூலிகளாக வாழ வேண்டியிருந்தது. இவர்களது உழைப்பு, தோட்டங்கள் இலாபமீட்ட உதவியது மட்டுமன்றி அவர்கள் பணிபுரிந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது.

குடியேற்றவாத முறை வீழ்ச்சியடைந்து, குடியேற்றவாத ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகள் விடுதலை அடைந்தபோது, பல நாடுகளில் தோட்டத் தொழிலாளர்களின் நிலை மேலும் சிக்கலடைந்தது. இவர்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியவர்கள் ஆனார்கள். இலங்கை போன்ற நாடுகளில் இவர்கள் நாடற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

குறிப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டத்_தொழிலாளி&oldid=1806156" இலிருந்து மீள்விக்கப்பட்டது