த இடாக்கு நைற்று இறிற்றேண்சு

த இடாக்கு நைற்று இறிற்றேண்சு (ஆங்கிலம்: The Dark Knight Returns, தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட வரைகதைச் சிறுதொடராகும். பேட்மேனைக் கதாநாயகனாகக் கொண்டு, பிராங்கு மில்லரால் (Frank Miller) எழுதப்பட்டு, மில்லர், கிளாசு சான்சன் (Klaus Janson) ஆகியோரின் சித்திரத்தில் வெளிவந்த இக்கதை இடீசீ காமிக்சினால் வெளியிடப்பட்டது. அவ்வாண்டின் இறுதியில் இத்தொடர்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகையில் முதற்கதையின் பெயரானது தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இது ஐம்பத்தைந்து வயதான புறூசு வெயின் (Bruce Wayne), ஓய்விலிருந்து மீண்டு குற்றங்களைத் தடுக்கும் தனது பணிக்கு மீளத்திரும்புவது பற்றியும் அதற்காகக் கோதம் நகரின் காவற்படையினர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்புகளைச் சந்திப்பது பற்றிய கதையாகும்.

த இடாக்கு நைற்று இறிற்றேண்சு
முதலாவது இதழின் அட்டைப் படம் (பெப்ரவரி 1986). பிராங்கு மில்லரால் வரையப்பட்ட இப்படத்திற்கு இலின் வாளீ வண்ணமூட்டியுள்ளார்.
வெளியீட்டுத் தகவல்கள்
வெளியீட்டுத் திகதிபெப்ரவரி - சூன் 1986
இதழ்களின் எண்ணிக்கை4
முக்கியமான கதாபாத்திரங்(கள்)பேட்மேன்
சேம்சு கோடன்
காரீ கெல்லி
த சோக்கர்
சூப்பர்மேன்
உருவாக்கக் குழு
எழுத்தாளர்(கள்)பிராங்கு மில்லர்
ஓவியர்(கள்)பிராங்கு மில்லர்
எழுத்து வடிவமைப்பாளர்(கள்)சோன் கொசுற்றான்சா
வண்ணந்தீட்டுனர்(கள்)இலின் வாளீ
ஆசிரியர்(கள்)இடிக்கு சியோடானோ
இடெனிசு ஓ'நீல்

த இடாக்கு நைற்று சுரிறைக்சு அகென் (ஆங்கிலம்: The Dark Knight Strike Again, தமிழ்: இருண்ட மறவன் மீளத்தாக்குகிறான்) என்று தலைப்பிடப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட இக்கதையின் தொடர்ச்சி பிராங்கு மில்லரால் எழுதப்பட்டு 2001இல் வெளிவந்தது. இதன் மூன்றாவது பாகமாக, த இடாக்கு நைற்று III: த மாசுரர் இறேசு,(ஆங்கிலம்: The Dark Knight III: Master Race, தமிழ்: இருண்ட மறவன் 3: சிறந்த சாதி) மாதம் இருமுறை வெளிவரும் என்று 2015 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. இது பிராங்கு மில்லர் மற்றும் பிறயன் அசறேலோவால் (Brian Azzarello) சேர்ந்து எழுதப்படுகிறது.[1] பிளாசுபொயின்றுக்கு (Flashpoint) முன்னதான இடீசி பல்பிரபஞ்சத்தில் (DC Multiverse), த இடாக்கு நைற்று இரிற்றேண்சு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கதைகள் உலகு-31இல் (Earth-31) நடைபெறுவதாகச் சித்தரிக்கப்படுகிறது.

திசுதோப்பிய (Dystopian) எதிர்காலத்தின் கோதம் நகரத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் இக்கதையில், ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன் குற்றங்களைத் தடுக்கும் பணியிலிருந்து பத்து வருடங்களாக ஓய்வுபெற்றுள்ளார். விளைவாகக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதன் பிறகு ஒரு திருப்புமுனையைச் சந்திக்கும் புறூசு, தனது மனச்சாட்சிக்கு எதிராக நிற்கமுடியாமல் மீண்டும் குற்றங்களை வேரறுக்கும் பேட்மேனாக மாறுகிறார். புறூசு வெய்னாக அவர் தனது முன்னாள் எதிரியான காவீ இடென்ற்றின் (Harvey Dent) முகச் சத்திரசிகிச்சைக்கு உதவுகிறார். குணமடைந்து விட்டதாகக் கருதப்படும் காவீ இடென்ற்று மீண்டும் குற்றங்களைச் செய்யத்தொடங்கவே, பேட்மேன் அவரை எதிர்கொள்கிறார். பணத்துக்காக நகரில் குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார் இடென்ற்று. இடென்ற்றை எதிர்கொள்கையில் அவனது உண்மையான முகத்தை உணர்கிறார்.

இதன்பிறகு "மியூற்றன்று" (Mutants) எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி (Carrie Kelley) எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" (Robin) போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம் மியூற்றன்றுகளைத் தோற்கடிக்கின்றபோதிலும், அவர்களின் தலைவனை வீழ்த்தும் முயற்சியில் தோல்வியடைகிறார் பேட்மேன். மியூற்றன்று தலைவனின் கவனத்தை சிதறடித்து பேட்மேன் தப்பிக்கக் கெல்லி உதவுகின்றாள். பிற்பாடு பேட்மேன், ஓய்வுபெறும் காவற்றுறை அதிகாரியான சேம்சு கோடன் (James Gordon) மற்றும் கெல்லியின் உதவியுடன் மியூற்றன்று தலைவனை வெல்கிறார். சிதறடிக்கப்பட்ட மியூற்றன்று அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் "சன்சு ஒப் பேட்மேன்" (ஆங்கிலம்: Sons of Batman, தமிழ்: பேட்மேனின் மகன்கள்) என்ற புது அமைப்பை உருவாக்குவதுடன், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கிறனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு ஆக்கம் புகலிடத்தில் (Arkham Asylum) அனுமதிக்கப்படும் குற்றவாளியான சோக்கர் (The Joker), பேட்மேனின் மீள்வருகையால் கண்திறக்கின்றார். தான் குணமடைந்து விட்டதாகப் பிறரை நம்பவைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நச்சுப் புகையினைப் பிரயோகித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த கொல்கிறார். மீண்டும், களியாட்ட நிகழ்வொன்றில் மக்களைக் கொலை செய்யும் இவரைத் தேடி பேட்மேன் வருவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. கடுங்கோபமுற்ற பேட்மேன் சோக்கரை முரட்டுத் தனமாகத் தாக்குகிறார். பேட்மேனைக் குற்றவாளி என்று மற்றோரை நம்பவைப்பதற்காக சோக்கர் தனது கழுத்தைத் திருகித் தற்கொலை செய்கிறார். இதிலிருந்து தப்பிச் செல்லும் பேட்மேனைப் பிடிக்கக் காவற்றுறையினர் நகரமெங்கும் வலைவீசுகின்றனர்.

இதன்பிறகு சூப்பர்மேன் இரசிய அணுகுண்டொன்றைத் திசைதிருப்பிப் பாலைவனமொன்றில் வெடிக்கச் செய்கின்றார்.இதன் விளைவாக ஏற்பட்ட மின்காந்த அனர்த்தத்தினால் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் இருளில் மூழ்குவதால் நாடெங்கும் கலவரங்கள் ஏற்படுகின்றன. பேட்மேன் இதை உணர்ந்து உறோபினுடன் இணைந்து (காரீ கெல்லி) "சன்சு ஒப் பேட்மேன்" அமைப்பினரை உயிர்கொல்லாப்படையினராக மாற்றுகிறார். கலவரங்களில் கடைகளை உடைத்துத் திருடும் மக்களைத் தடுக்க அவர்களை அழைத்துச் செல்லும் அவர் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசமைக்கிறார். அணுவாயுத அனர்த்தத்தினால் விளைந்த கலவரங்களிலிருந்து காக்கப்பெற்ற நாட்டின் ஒரேயொரு நகரமாக கோதம் மாறுகிறது. இதனால் சங்கடப்படும் அமெரிக்க அரசாங்கம் பேட்மேனை ஒழிக்க சூப்பர்மேனிடம் கட்டளையிடுகிறது. இந்நிகழ்வை ஒலிவர் குயீன் (முன்னாள் கிறீன் அரோ) பேட்மேனுக்கு எதிர்வுகூறுகிறார். தான் முதலில் பேட்மேனாக உருவெடுத்த கிரைம் அலீயில் (Crime Alley) சூப்பர்மேனைத் தோற்கடிக்க முடிவுசெய்யும் பேட்மேன், அணுவாயுத வெடிப்பினால் தளர்ந்து போயுள்ள சூப்பர்மேனின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணுகிறார்.

சூப்பர்மேன் பேட்மேனுக்கு விளக்கமளிக்க முயல்கின்றபோதிலும், பேட்மேன் தனது தொழிநுட்பக் கண்டுபிடிப்புக்கள் மட்டும் வர்மக்கலைப் பயிற்சிகளின் உதவியுடன் அவருடன் மோதுகிறார். பேட்மேனின் கவசத்தில் தாக்கும் சூப்பர்மேனை, ஒலிவர் குயீன் கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பினை எய்து பலவீனமடையச் செய்கிறார். திடீரென்று பேட்மேனுக்கு மாரடைப்பு வந்து சாகும் தறுவாய்க்குச் செல்கின்றார். அவரது உதவியாளரான அல்பிரடு பெனிவேத்து (Alfred Pennyworth), பேட்மேனின் இல்லமான வெய்ன் மனர் (Wayne Manor) மற்றும் பதுங்குமிடமான பேட்கேவை (Batcave) வெடிக்கச் செய்வதன் மூலமாக அவரது இரகசிய அடையாளத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துகிறார். பக்கவாதத்தினால் அவதியுறும் அவர் பின்பு மரணிக்கிறார். வெய்னின் மரணச் சடங்கின் பிறகு, பேட்மேன் இன்னும் உயிரோடுதானிருக்கிறார் எனவும், அவர் இரசாயனங்களின் உதவியால், தான் மரணித்தாக வெளியுலகை நம்பவைத்தார் என்றும் தெரியவருகிறது. அவருடைய இதயத்துடிப்பு மீண்டும் கேட்கவே, கிளாக்கு கென்ற்று (Clark Kent) கெல்லியைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறார். சிலகாலத்தின் பின்பு புறூசு வெய்ன் கெல்லி, குயீன் மற்றும் தன்னைத் தொடரும் பிறரின் உதவியுடன் உலகைக் காப்பாற்றும் தனது யுத்தத்தை மீளத் தொடங்குகிறார். இதற்காக அவர்கள் ஒரு இராணுவத்தைத் தோற்றுவிக்கின்றனர்.

கதாபாத்திரங்கள்

தொகு
  • புறூசு வெய்ன்/ பேட்மேன் (Bruce Wayne/ Batman): குற்றங்களைக் களையும் பணியிலிருந்து ஓய்வுபெறும் புறூசு வெய்ன் குற்றங்களின் அதிகரிப்பைக்கண்டு பொறுக்க முடியாமல் மீண்டும் பேட்மேன் எனும் முகத்திரையின் கீழ் மக்களைக் காப்பாற்றுகிறார்.
  • ஆல்பிரட்டு பெனிவேத்து (Alfred Pennyworth): புறூசின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் மருத்துவர். இவர் தனது 80களில் இருப்பதாக இக்கதை சித்திரிக்கிறது.
  • காரீ கெல்லி/ உறொபின் (Carrie kelley/ Robin): பெற்றோரின் கவனிப்பின்றி வாழும் 13 வயதுச் சிறுமி. இவர் பிறகு பேட்மேனுக்கு உதவும் கதாபாத்திரமான உறொபினாக மாறுகிறார். சிலசமயங்களில் முந்தைய உறொபினாகப் பிறரால் பிழையாக அறியப்படும் இவர், வயதான பேட்மேனைக் காப்பாற்றுவதன் மூலம் அவர் நம்பிக்கையைப் பெறுகிறார்.
  • சேம்சு கோடன் (James Gordon): பேட்மேனின் உண்மையான அடையாளத்தை அறிந்த சிலரில் ஒருவரான இவர் தனது 70வது வயதில் காவற்றுறை அதிகாரி வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
  • காவி இடென்ற்று/ உரூபேசு (Harvey Dent/ Two-Face): கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் தற்போது தனது ஐம்பதாவது அகவையிலுள்ளார். மேலும், மூன்று வருடமாக வைத்தியரான வோல்பரின் கண்காணிப்பிலிருக்கும் இவருக்கு முகச்சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வோல்பரால் குணமடைந்துவிட்டார் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட இவர் உண்மையில் பழைய எண்ணங்களுடனேயே இருக்கின்றார். தனது முகத்தின் இருபக்கமும் சேதமடைந்தாக எண்ணிக்கொள்ளும் இடென்ற்று, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு நகரத்தை அச்சுறுத்துகிறார்.
  • த சோக்கர் (கோமாளி) (The Joker): பேட்மேனின் மீளெழுச்சிகண்டு குணமடையும் அவரது பரம வைரி ஆவார். கதையின் அரைப்பகுதியின் பின்னரான முக்கிய வில்லனாக இவர் இருக்கிறார். முரட்டுத்தனமான செய்கைகளின் மூலம், பேட்மேனுடனான தனது இறுதி மோதலுக்கு வழிகோலுகிறார்.
  • கலாநிதி/ வைத்தியர் பாத்தலோமியோ வோல்பர் (Dr. Bartholomew Wolper): காவி இடென்ற்று மற்றும் சோக்கரின் வைத்தியரும், பேட்மேனை எதிர்ப்பவருமான இவர், தனது நோயாளிகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு பேட்மேன் தான் காரணம் என்று தவறாக அர்த்தம் கொள்கிறார். சோக்கர் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வெளியிடும் நச்சுப்புகைக்கு இவர் பலியாகிறார்.
  • எலன் இயிண்டல் (Ellen Yindel): சேம்சு கோடனின் இடத்தை நிரப்பும் காவற்றுறை அதிகாரி. பேட்மேனை விமர்சிக்கும் இவர், சோக்கரின் குற்றங்களால் தந்து எண்ணங்களை மாற்றிக்கொள்கிறார்.
  • ஒலிவர் குயீன் (Oliver Queen): சூப்பர்கீரோக்கள் சமூகவிரோதிகளாக அறிவிக்கப்பட்டபின்பு, இவர் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துவதுடன் அவர்களின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பலை அழிக்கின்றார். இவர் தனது இடது கையை இழந்தமைக்கு சூப்பர்மேனைச் சாடுகிறார். மாற்றுத்திறனாளியாக இருப்பினும் இவர் இன்னமும் ஒரு சிறந்து வில்லாளியாகவுள்ளார்.
  • கல் எல்/கிளாக்கு கென்ற்று/ சூப்பர்மேன் (Kal-El/ Clark Kent/ Superman): தற்போது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின்கீழ் வேலைசெய்யும் இவருடைய இரகசிய அடையாளம் இப்போது அனைவராலும் அறியப்பட்டது. அவர் மனதளவில் அரசாங்கத்தை எதிர்க்கும்போதிலும் தனது வயது காரணமாக, மக்களைக் காக்கும் ஒரே வழி இதுவே என உணரும் அவர் அதற்காக வில்லனாக மாற நேருகின்றது. இறுதியில் அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் பேட்மேனை ஒழிக்க முயல்கின்றபோதிலும், ஒலிவர் குயீனினால் எய்யப்பட்ட கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பு தைக்கவே, பேட்மேனுக்கு அது சாதகமாக அமைகின்றது.
  • செலினா கைல் (Selina Kyle): தனது கேட்வுமன் (Catwoman) அடையாளத்திலிருந்து விலகி வாழுகின்றார்.

பின்னணியும் உருவாக்கமும்

தொகு

1980களின் ஆரம்பத்தில் இடீசீ வரைகதை நிறுவனமானது பேட்மேன் குழுவாசிரியரான இடிக்கு சியோடானோவை (Dick Giordano), ஆசிரிய இயக்குனராகப் பணியில் அமர்த்தியது.[2] எழுத்தாளரும் ஓவியருமான பிராங்கு மில்லர் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கதையாக்கக் குழுவில் இணைக்கப்பட்டார். இக்கதையை மில்லருடன் சேர்ந்து எழுதிய சியோடானோ,"இறுதி வடிவமானது நான்கு அல்லது ஐந்து தடவைகள் எழுதப்பட்ட பின்னரே உருவானது. கதை அடிப்படை ஒன்றாக அமைந்திருந்த போதிலும் இடையிடையே பல வழிமாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது" என்று தெரிவித்தார்.[3] சக எழுத்தாளரும் ஓவியருமான சோன் பேண் (John Byrne), "உறொபின் கட்டாயகமாக ஒரு பெண்ணாக இருக்கவேண்டும்" என்று கூற, மில்லரும் அதற்கு உடன்பட்டார்.[4] இடேட்டி கரி (Dirty Harry) திரைப்படங்களை, குறிப்பாக 1983இல் வெளியான சடுன் இம்பாக்ற்று (Sudden Impact) திரைப்படத்தினை (இதில் இடேட்டி கரி கதாபாத்திரமானது நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டுப் பின்பு மீண்டும் குற்றங்களைத் தடுக்கும் பணிக்குத் திரும்புவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.) உதாரணமாகக் கொண்டு இக்கதையை எழுதியதாக மில்லர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கு வயதாவதைக் கூட இதன் உதாரணமாக எடுத்துக்கொண்டதாக மேலும் கூறினார்.[5] இக்கதையில் ஒரு பக்கத்துக்குப் பதினாறு படங்கள் கூடிய கட்டங்கள் அமைக்கப்பட்டன. இது பொதுவாகப் பதினாறு கட்டங்களாகவோ அல்லது ஒன்றிலிருந்து பதினாறுக்கு இடைப்பட்ட ஏதாயினும் எண்ணிக்கையை உடையதாகவோ உருவாக்கப்பட்டன.[6] தயாரிப்புக் கெடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக, சியோடானோ இதன் ஆக்கப் பணிகளின் அரைவாசியுடன் விலகினார். வரைகதை ஆராய்ச்சியாளரான இலெ தானியல்சு (Les Daniels), மில்லரின் கெடுவைத் தள்ளிப்போடும் பழக்கத்தைப் பற்றி எழுதுகையில், "கலைச் சுதந்திரத்துக்கான தேடலின் உச்சக்கட்டம்" என்று வருணித்துள்ளார்.[5]

"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" இதழ்கள் மேலதிகப் பக்கங்களை உள்ளடக்கியதோடு இலின் வாளீயின் (Lynn Varley) நீர்வண்ணத்தினால் தீட்டப்பட்ட பக்கங்களை வெளிச்சப்படுத்திக் காட்டுவதற்காகச் சதுர வடிவுடைய பக்கவாட்டைக் கொண்டதாகப் பக்கங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், பளபளப்பான தாளினால் ஒவ்வொரு பக்கமும் அமைக்கப்பட்டன.[7]

வரவேற்பு

தொகு

அதிகச் செலவுடன் ஒவ்வொரு இதழ்களும் தயாரிக்கப்பட்டபோதிலும், "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" அமோகமாக விற்பனையானது.[7] ஒவ்வொரு இதழும் தலா $2.95 விலைக்கு வெளியானதுடன் இடீசி வரைகதை நிறுவனமானது "சிந்திக்க வைக்கும் அதிரடிக்கதை" என்று முத்திரை குத்தியது. இரைம் நாழிதளானது (Time) இக்கதையின் சித்தரிப்புப் பற்றி "தன்னால் குற்றங்களைத் தடுக்கமுடியுமா? என்று சந்தேகம் கொள்ளும் ஒரு ஓய்வுபெற்ற பேட்மேன்" என்ற கருதுபொருள் இன்றைய வாசகர்களின் சந்தேகங்களுக்கு விருந்தாகவுள்ளது என்று கூறியது.[8]

மிகச்சிறந்த பேட்மேன் வரைகலை நாவல்களில் முதலாவதாக இது ஐசீஎன்-இனால் (IGN) தரப்படுத்தப்பட்டதுடன், "ஒவ்வொரு காட்சியும் மறக்கமுடியாத வகையில் உருவாக்கப்பட்டிருப்பது மூலமாக இது உண்மையில் தலைசிறந்ததோர் படைப்பாக அமைந்துள்ளது" என்று கூறியது.[9] இக்கதையின் தொகுக்கப்பட்ட நூலானது, எக்காலத்திலும் தலைசிறந்த பத்து வரைகலை நாவல்களில் ஒன்றாக, 2005இல் இரைம் நாழிதளால் தெரிவுசெய்யப்பட்டது.[10] அத்துடன், போர்பிடுன் பிளனெற்று (Forbidden Planet) எனும் வரைகதைப் புத்தக நிலையத்தினால் "சிறந்ததிலும் சிறந்த 50 வரைகதை நாவல்கள்" பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.[11] எழுத்தாளர் பிறயன் கே. மனிங்கு (Brian K. Manning) தனது புத்தகமான "இடீசீ காமிக்சு இயர் பை இயர் எ விசுவல் குரோனிக்கில்" (ஆங்கிலம்: DC Comics Year By Year A Visual Chronicle, தமிழ்:இடீசி வரைகதைகளின் காலக்கிரமப் படத் தொகுப்பு) எனும் புத்தகத்தின் 1980கள் அத்தியாயத்தில் "எல்லாக்காலத்திலும் சிறந்த பேட்மேன் கதையமைப்பு" என்று எழுதியிருந்தார்.[12] சீக்காட்டு (Sequart) அமைப்பினால் வரைகதை அறிஞர்களிடையே நடாத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் இந்நூல் இரண்டாம் இடத்தைப்பெற்றது.[13]

இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் (Comics Bulletin) நிறுவனத்தினைச் சேர்ந்த நிக்கோலசு சிலேற்றன் (Nicolas Slayton) தனது கட்டுரையொன்றில் வோச்மேனுக்கு (Watchmen) அடுத்தபடியாக உலகின் மிகையாகப் புகழப்படும் (ஆயினும் மோசமான) வரைகதைகளில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளார்.[14] இதுகுறித்து "இதில் மையக்கதை என்று ஒன்று கிடையாது. ஆதலால் சூப்பர்மேனுக்கும் பேட்மேனுக்கும் (கட்டாயப்படுத்தப்பட்ட) மோதல் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது இக்கதையின் முடிவைப் பொருத்தமில்லாமல் ஆக்குகிறது. பேட்மேனின் பண்புகள் சிதைக்கப்பட்டுள்ளதுடன், அக்கதாபாத்திரம் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார். த நியூயோக் இரைம்சு (The New York Times) நாளிதழ், 1987இல் வெளியான இக்கதையின் தொகுப்புக்கு எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியது. பேட்மேன் கதாபாத்திரத்தை உருவாகிய பொப் கேனின் (Bob Kane) கதைகள் அளவுக்குக் கற்பனைத் திறனுடன் இது அமைக்கப்படவில்லை என்று மொடெகாய் இரிச்லர் (Mordecai Richler) தெரிவித்தார். மேலும் "இக்கதைத் தொடரானது, வாசிப்பதற்குச் சிக்கலான அமைப்பையும் அளவுக்கதிகமான சொற்களையும் கொண்டுள்ளது. அகோரமான உடற்கட்டுடையவர்களாக சூப்பர்மேனும் பேட்மேனும் வரையப்பட்டுள்ளனர். இது ஒரு சிறுவர் கதையெனில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகைள் இது இருக்கமா? என நான் சந்தேகிக்கிறேன். இன்றேல் இது பெரியோருக்கானதெனின் அவர்களுடன் சேர்ந்து (மது) அருந்தக்கூட நான் தயங்குவேன்" என்று குறிப்பிட்டார்.[15]

ஆதிக்கம்

தொகு

"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வின் மகத்தான வெற்றி பேட்மேனை மீண்டும் ஒரு கலாசாரச் சின்னமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், வோச்மெனுடன் இணைந்து வரைகலைப் புத்தகங்களின் இருண்ட யுகம் என அறியப்படும் நவீன யுகத்தைத் (இரும்பு யுகம் எனவும் அழைக்கப்படும்) தோற்றுவிப்பதில் செல்வாக்குச் செலுத்தியது. கடுமையான மற்றும் வழுவுடைய கதாபாத்திரமாக இக்கதையில் சித்தரிக்கப்படும் பேட்மேன், 1960களில் வெளிவந்த பேட்மேன் தொலைக்காட்சித் தொடர்களினின்று வேறுபட்டு, இருண்ட கதைகளும் விற்பனையிலும் வரவேற்பிலும் சாதனை படைக்கலாம் என்று நிறுவிற்று.

கணினிப் பாவனையாளர்களிடையே பிரபல்யமான "காமிக் சான்சு" (Comic Sans) எழுத்துருவை உருவாக்கிய வின்சென்டு கொனர் (Vincent Connare), "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"மற்றும் "வோச்மென்" ஆகிய நாவல்களே தனக்கு ஊன்றுகோலாக இருந்தது என்று கூறியிருந்தார்.[16]

வேறு ஊடகங்களில்

தொகு

தொலைக்காட்சி

தொகு
  • த நியூ பேட்மேன் அட்வெஞ்சர்சு" (ஆங்கிலம்: The New Batman Adventures, தமிழ்: பேட்மேனின் புதிய சாகசங்கள்) எனும் அசைவூட்டத் தொடரில், பேட்மேனுக்கும் மியூற்றன்று அமைப்பின் தலைவனுக்கும் இடையே நடக்கும் மோதல் இப் புத்தகத்தில் நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் முறையே மைக்கல் அயன்சைடு மற்றும் கெவின் மைக்கல் இறிச்சாட்சன் ஆகியோரால் குரல்கொடுத்துள்ளனர்.[17]
  • பேட்மேன்: த அனிமேற்றட்டு சீரீசில் (ஆங்கிலம்: Batman: The Animated Series, தமிழ்: பேட்மேன்: அசைவூட்டத் தொடர்) ஆக்கம் புகலிடத்தின் தலைமை மனோவியல் நிபுணரான பாத்தலோமியோ இக்கதையில் வரும் பாத்தலோமியோ வோல்பர் பற்றிய ஒரு சான்றாகும்.
  • இரீன் இறைற்றன்சு (ஆங்கிலம்: Teen Titans, தமிழ்: சிறு அரக்கர்கள்) தொடரின் "கவ் லோங்கு இசு போறெவர்?" (

ஆங்கிலம்: How Long Is forever?, தமிழ்: எப்பொழுதும் என்பது எவ்வளவு காலம்?) என்ற அத்தியாயத்தில் மியூற்றன்று அமைப்பினர் வயதான "பீசிற்று போய்"-ஐ (Beast Boy) ஒரு கூண்டில் அடைத்துப் பனிப்பந்துகளால் தாக்குவது போலக் காட்டப்பட்டுள்ளது.

  • "பேட்மேன்: பிரேவு அன்டு த போல்டு" (ஆங்கிலம்: Batman: The Brave and The Bold, தமிழ்: துணிச்சலும் தைரியமுமிக்க பேட்மேன்) என்ற அசைவூட்டத் தொடரின் அத்தியாயமான "த நைற்சு ஒப் உருமொரோ" (ஆங்கிலம்: The Knights of Tomorrow, தமிழ்: நாளைய மறவர்கள்) எனும் அத்தியாயத்தில் புறூசு வெய்னின் மகனான இடேமியன் (Damien Wayne) பேட்மேனாக இருப்பது போன்ற எதிர்காலச் சித்தரிப்பில், மியூற்றன்று அமைப்பினர் ஒரு வங்கியைக் கொள்ளையடிப்பதைக் காணமுடிகிறது.
  • "த பேட்மேன்" (The Batman) தொடரின் அத்தியாயமான "ஆட்டிபக்ற்சு"வில் (ஆங்கிலம்: Artifacts, தமிழ்: தொல்பொருட்கள்) எதிர்காலத்தில் நடப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நிகழ்வில் மில்லரின் கதாம்சங்களைக் காணமுடிகிறது. இதில் பேட்மேன் உயரமானவரும், உடற்கட்டுடையவருமாகக் காட்டப்படுவதும் அவரின் எதிரியான மிசுரர் பிரீசை (Mr. Freeze) எதிர்கொள்கையில் பேட்மேனை நோக்கி அவர் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" என்று கூறுவதும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

திரைப்படம்

தொகு
  • முதன் முதலில் இயக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் பற்றி அதன் இயக்குநர் இரிம் பேடன், (Tim Burton) "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மற்றும் "த கில்லிங்கு சோக்கு" (ஆங்கிலம்: The Killing Joke, தமிழ்: கொலைசெய்யும் கேலி) ஆகிய வரைகதைகள் அப்படத்தின் இயக்கத்தில் செல்வாக்குச் செலுத்தின என்று கூறினார். கோர்ட்டோ மொல்ற்றீசில் (Corto Maltese) நிருபர் விக்கி வேல் (Vicky Vale) புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமான, சோயல் சுமேசரால் (Joel Schumacher) இயக்கப்பட்ட "பேட்மேன் போறெவர்" (ஆங்கிலம்: Batman Forever, தமிழ்: எப்பொழுதும் பேட்மேன்) திரைப்படத்தில் பேட்மேன் உறோபினுக்கு, எதிரிகளைக் கொல்வதால் அமைதி கிடைக்காது என்று உணர்த்துவதும் இக்கதையிலிருந்து வந்த யோசனையாகும்.
  • 2008 சேன் இடியாகோ சித்திரக்கதை மாநாட்டில் (San Diego Comic Con), சாக்கு சினைடரால் (Zack Snyder) வரைகதைகளை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய கேள்வியொன்றுக்கு "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மீதான பற்றே தனது திரைப்படங்களின் முதிர்ந்த தன்மைக்குக் காரணம் என்று கூறியிருந்தார். பேட்மேன் படங்களின் தயாரிப்பாளரான மைக்கல் இயூசிலன் (Michael Uslan) "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" தொடர்பான ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க விருப்புத் தெரிவித்திருந்தார்.[18]
  • "த இடாக்கு நைற்று இறைசசு" (ஆங்கிலம்: The Dark Knight Rises, தமிழ்: இருண்ட மறவன் உதிக்கிறான்) திரைப்படத்தில் இக்கதையின் அம்சங்கள், குறிப்பாக ஓய்வுபெற்ற பேட்மேன் நீண்டகாலத்தின் பின்பு மீண்டும் கோதம் நகருக்குத் திரும்புவது போன்ற நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு காட்சியில் பேட்மேன் ஒரு குற்றவாளிய்த் துரத்திச் செல்வதைக் காணும் ஒரு காவற்றுறை அதிகாரி மற்றொருவரிடம் "இன்றிரவு நீ ஒரு அற்புதத்தைப் பார்க்கப் போகிறாய் மகனே" என்று கூறுவது இக்கதையிலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு நிகழ்வாகும். அத்துடன் இக்கதையில் பேட்மேன் தனது முறிந்த கைக்கு இயந்திர அமைப்பின் உதவிய நாடுவது போல போல இதில் பேட்மேன் தனது சேதமடைந்த காலுக்கு உதவியாகப் பொறிகளாலான அமைப்பைப் பயன்படுத்துகிறார். மேலும் பேட்மேன் இதிலும் தான் இறந்து விடுவதாகப் பிறரை நம்பவைத்துத் தனது பதவியை வேறொருவருக்கு வழங்குகிறார்.
  • "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட அசைவூட்டத் திரைப்படத்தை இடீசீ மகிழ்கலையகம் (DC Entertainment) தயாரித்தது. இதன் முதற்பாகம் இறுவட்டு (DVD) மற்றும் புளூறேயில் (Bluray), செப்டம்பர் 25, 2013இல் வெளியிடப்பட்டது.[19][20] இரண்டாம் பாகமானது சனவரி 29, 2013இல் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பீற்றர் வெலர் (Peter Weller), மைக்கல் எமேசன் (Michael Emerson) முறையே பேட்மேன், சோக்கர் கதாபாத்திரங்களுக்குக் குரல்கொடுக்கின்றனர்.
  • 2013இல் வெளிவந்த "மேன் ஒப் சுடீல்" (ஆங்கிலம்: Man of Steel, தமிழ்: உருக்கினாலானவன்) இன் தொடர்ச்சியான "பேட்மேன் வீ சூப்பர்மேன்: இடான் ஒப் சசுரிசு" (ஆங்கிலம்: Batman V Superman: Dawn of Justice, தமிழ்: பேட்மேன் வீ சூப்பர்மேன்: நீதியின் விடியல்) பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் வெள்ளித்திரையில் சந்திக்கவுள்ள முதற்றிரைப்படமாகும். இது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வை உதாரணமாகக் கொண்டு வெளிவரும் அனால் முற்றிலும் அசலான திரைப்படம் என்று அதன் இயக்குநர் சாக்கு சினைடர் தெரிவித்துள்ளார்.[21]

விற்பனைப் பொருட்கள்

தொகு

1996இல் இதன் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியின் நினைவாக, இடீசீ நிறுவனம் தடித்த மற்றும் மெல்லிய அட்டைகளைக் கொண்ட இதழை மீள்வெளியீடு செய்தது. நான்காவது இதழிற்காகப் பிராங்கு மில்லர் எழுதிய ஆரம்பக் கதையையும் சித்திரங்களையும் இது உள்ளடக்கியது. அத்துடன் மில்லரின் ஓவியங்கள், விமர்சனங்கள் மற்றும் சிறிய சுவரொட்டிகள் அடங்கிய அட்டை முதலியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஒரு இதழும் வெளியிடப்பட்டது.[22] 2004இல் இடீசீ நிறுவனம் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கதாபத்திரங்களின் (பேட்மேன், உறொபின், சூப்பர்மேன், சோக்கர்) உருவச்சிலைகளை விற்றது. பிற்பாடு 48 பக்கங்களைக் கொண்ட முதலாவது இதழின் மீள்பதிப்பும், கதையைப் பிரதிபலிக்கும் பேட்மேன் மற்றும் சோக்கர் உருவச்சிலைகள் அடங்கியதுமான பரிசுப்பொதியும் வெளியிடப்பட்டது. 203இல் மாற்றெல் (Mattel) நிறுவனம் பேட்மேன் அன்லிமிட்டடு (Batman: Unlimited) உருவச்சிலைகளின் ஒரு பாகமாக "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பேட்மேனின் உருவச் சிலையையும் வெளியிட்டது.

நிகழ்பட ஆட்டங்கள்

தொகு

"பேட்மேன் ஆக்கம் சிற்றி" (Batman: Arkham City) எனும் நிகழ்பட விளையாட்டில் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பேட்மேனாக விளையாட வகைசெய்யும் தரவிறக்ககூடிய உள்ளடக்கமொன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பாகமாக வெளிவந்த "பேட்மேன்: ஆக்கம் ஒரிசின்சு" (Batman: Arkham Origins) விலும் இவ்வாறு விளையாடக் கூடியதாக உள்ளபோதிலும், தரவிறக்குவதனூடாக அல்லாது பலர் சேர்ந்து விளையாடும் பகுதி மூலம் இதைப் பெறலாம். மற்றுமொரு தரவிறக்கம் 2015இன் "இலீகோ பேட்மேன் 3: பியண்டு கோதம்" (Lego Batman 3: Beyond Gotham) விளையாட்டில் உள்ளது.

வரைகதைகள்

தொகு
  • சிமோல்வில் (Smallville) தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக வெளிவந்த பேட்மேன் அன்டு நைற்றுவிங்கு (Batman and Mightwing) வரைகதையில் மியூற்றன்று அமைப்பினர் எதிரிகளாக வருகின்றனர்.
  • இடீசீயின் பதிப்புக்களுள் ஒன்றான "த நியூ 52"வின் (The New 52) 19ஆவது பேட்மேன் அன்டு உறொபின் (Batman and Robin) இதழில் காரீ கெல்லி தோன்றுகிறார். இவர் இதில் ஒரு கல்லூரி மாணவியாகவும், மறைந்த இடேமியன் வெய்னின் நாடகப் பயிற்றுவிப்பாளருமாக வருகிறார். "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வில் தான் அணியும் உறொபின் ஆடையை இவர் கலோவீன் (Halloween) ஆடையாக அணிவது சிறப்பம்சமாகும்.
  • கெவின் சிமித்து (Kevin Smith) மற்றும் வோல்ற்று பிளனகன்-ஆல் (Walt Flanagan) எழுதப்பட்ட "பேட்மேன் த வைடினிங்கு கைர்" (Batman: the Widening Gyre) எனும் வரைகதையில் இளவயதான பாத்தலோமியோ வோல்பர் தோன்றுகிறார்.

உசாத்துணைகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. [1]
  2. Daniels, p. 146
  3. Daniels, p. 147
  4. Daniels, p. 151
  5. 5.0 5.1 Strike, Joe (July 15, 2008). "Frank Miller's 'Dark Knight' brought Batman back to life". Daily News (New York) இம் மூலத்தில் இருந்து 2009-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090409144731/http://www.nydailynews.com/entertainment/movies/2008/07/16/2008-07-16_frank_millers_dark_knight_brought_batman.html. 
  6. Hitch, Bryan (2010). Bryan Hitch's Ultimate Comics Studio. Impact Books. p. 22.
  7. 7.0 7.1 Daniels, p. 149
  8. Henry, Gordon M.; Forbis, Deborah. "Bang! பரணிடப்பட்டது 2019-11-08 at the வந்தவழி இயந்திரம்". Time. October 6, 1986. Retrieved August 17, 2009.
  9. Goldstein, Hilary (June 17, 2005). "Batman: The Dark Knight Returns Review". IGN.
  10. Grossman, Lev (March 6, 2009). "Top 10 Graphic Novels: The Dark Knight Returns". டைம்.
  11. 50 Best Of The Best Graphic Novels பரணிடப்பட்டது 2011-06-09 at the வந்தவழி இயந்திரம், forbiddenplanet.com
  12. Manning, Matthew K.; Dolan, Hannah, ed. (2010). "1980s". DC Comics Year By Year A Visual Chronicle. Dorling Kindersley. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-6742-9. It is arguably the best Batman story of all time. Written and drawn by Frank Miller (with inspired inking by Klaus Janson and beautiful watercolors by Lynn Varley), Batman: The Dark Knight revolutionized the entire genre of the super hero. {{cite book}}: |first2= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  13. On Canons, Critics, Consensus, and Comics, Part 2, Sequart Organization
  14. Top 10 Overrated Comic Books, Comics Bulletin, April 27, 2010
  15. Richler, Mordecai (May 3, 1987). "Paperbacks; Batman at Midlife: Or the Funnies Grow Up". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1987/05/03/books/paperbacks-batman-at-midlife-or-the-funnies-grow-up.html. பார்த்த நாள்: August 18, 2009. 
  16. Steel, Emily. "Typeface Inspired by Comic Books Has Become a Font of Ill Will". The Wall Street Journal. April 17, 2009. Retrieved on February 8, 2010. பரணிடப்பட்டது 2009-06-27 at the வந்தவழி இயந்திரம்
  17. Tasha Robinson. "Frank Miller interview". A.V. Club. December 5, 2001.
  18. Zack Snyder Interested in The Dark Knight Returns Movie? பரணிடப்பட்டது 2010-04-21 at the வந்தவழி இயந்திரம் slashfilm.com, July 26, 2008. Retrieved November 24, 2009.
  19. Brendon Connelly (April 14, 2011). "Movie Version Of Frank Miller's The Dark Knight Returns In The Works". Bleedingcool.com. Archived from the original on 2012-08-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
  20. Comicscontinuum.com – July 23, 2011
  21. Batman vs. Superman’: Snyder Talks ‘Dark Knight Returns’ Factor & Affleck screenrant.com, February 10, 2014.. Retrieved August 19, 2014.
  22. 1996 Dark Knight Returns statue Under the Giant Penny (August 8, 2010). Retrieved April 17, 2011.