நத்தார்ச் சந்தை
நத்தார்ச் சந்தை (Christmas Market, இடாய்ச்சு மொழி: Weihnachtsmarkt) என்பது நத்தார் (கிறித்துமசு) பண்டிகையுடன் தொடர்புடைய ஒரு தெருச்சந்தை ஆகும். இது நத்தார் தினத்துக்கு முந்திய திருவருகைக் காலத்தில் நான்கு வாரங்களுக்கு ஒரு கொண்டாட்டம் போல கூட்டப்படும். இந்த நத்தார்ச் சந்தைகள் செருமனி, வடக்கு இத்தாலி, அவுஸ்திரியா, கிழக்கு பிரான்சு, சவோய் போன்ற நாடுகளில் தோற்றம் பெற்றன. இச் சந்தைகளில் நத்தார் கொண்டாட்டத்திற்குரிய அலங்காரப் பொருட்கள், கலைப்பொருட்கள், குளிர்கால உடைகள், மெழுகுதிரிகள், விளக்குகள், சிலைகள், பிராந்திய உணவுப்பண்டங்கள், நத்தார் பலகாரங்கள், மதுபானம், குறிப்பாக க்குளூ வைன் போன்றவை விற்பனை செய்யப்படும். இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் சிறப்பு, எல்லாப் பொருட்களுமே கைவேலைப் பொருட்கள். விற்பவர்களின் ஒரு வருட கால உழைப்பு.
சந்தைக்கு வருவோர்
தொகுநத்தார்ச் சந்தையில் பொருட்களை வாங்குபவர்களை விட, ஒரு திருவிழா கொண்டாட்ட மனோபாவத்துடன் பார்வையிடுபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். பெரும்பாலான பார்வையாளர்கள் குடும்பமாக அல்லது வேலைத் தோழர்களுடன் அல்லது பாடசாலை நண்பர்களுடன் ஒரு குழுவாக வருவார்கள். தனித்துச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் தமக்கு ஒரு துணையை வாழ்கைக்கோ அன்றி சேர்ந்து சில சுற்றுலாப்பயணங்களைச் செய்வதற்கோ தேடுவதற்காக வந்திருப்பார்கள். குழுவாக வருவோர் அந்த வருடத்தின் தமது இனிமையான தருணமொன்றை நினைவு கூர்ந்து ஒரு குவளை க்குளூ வைன் குடிப்பார்கள். நத்தார்ச் சந்தை ஒரு இன்பமான மனநிலையை ஏற்படுத்தக் கூடிய இடமாகவே இருக்கின்றது.[1]
வரலாறு
தொகு14 ஆம் நூற்றாண்டில் கூடை நெய்பவர்கள், பொம்மை போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், பஞ்சு மிட்டாய் தயாரிப்போர் போன்ற கைவினைஞர்களுக்கு தமது பொருட்களை நத்தார்தினத்துக்கு முன்னர் சந்தைப்படுத்தி விற்பதற்கு சந்தைப்பகுதிகளில் அனுமதி வழங்கப்பட்டது. அதுவே பின்னர் ஒரு பாரம்பரிய நிகழ்வாகி விட்டது.[2] ஆரம்பகாலத்தில் இருந்தே நத்தார்ச் சந்தையில் மக்கள் விரும்பி வாங்குபவைகளாக விளையாட்டுப் பொருட்கள், வீட்டுப்பயன்பாட்டுக்குரிய பொருட்கள், வறுத்த கஸ்தானியன், பாதாம்பருப்பு, கொட்டைகள் போன்றவை இருந்து கொண்டிருக்கின்றன.
காலம்
தொகுநத்தார்ச் சந்தை கூடும் காலம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்திய வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையிலிருந்து நத்தார்தினத்துக்கு முந்திய நாளான டிசம்பர் 23 ந்திகதி வரை என்பதே பாரம்பரியமாக உள்ளது. இருப்பினும் சில இடங்களில் நத்தார் சந்தைகள் திருவருகைக் காலத்தின் நான்கு வார இறுதிகளிலும் அல்லது ஒரு சில வார இறுதிகளில் மட்டுமே கூடுகின்றன. இன்னும் ஒரு சில இடங்களில் நத்தார்தினத்துக்குப் பிறகும் ஓரிரு நாட்கள் கூடுகின்றன. நத்தார்ச்சந்தை கூடும் காலம் 22 இலிருந்து 28 நாட்கள் வரையாக உள்ளது. இது நத்தார் தினத்துக்கு முந்திய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளுடன் கூடிய திருவருகைக்காலத்தை வைத்தே கணக்கிடப் படுகிறது.
நத்தார் பலகாரங்கள்/உணவுகள்
தொகுநத்தார்ச் சந்தையில் இஞ்சிப்பாண், பொரித்த பாதாம்பருப்பு, நெருப்பில் வாட்டிய அப்பிள், பஞ்சு மிட்டாய், இனிப்பு ரொட்டி போன்றவை முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சுடச்சுட உடனேயே தயாரித்து விற்கப்படும் இவைகளைச் சிறுவர்களும், பெரியவர்களும் மிகவும் விரும்பி வாங்கி உண்பார்கள்.
செருமனிய நத்தார்ச் சந்தைகள்
தொகுசெருமானிய நத்தார்ச் சந்தைகள் உலகளாவிய ரீதியில் பிரசித்தமானவை. பலநாடுகள் செருமனிய நத்தார்ச் சந்தைகளை முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுகின்றன.
- நூ(ய்)ர்ண்பேர்க் நத்தார் சந்தை (Christkindlesmark Nürnberg) உலகின் மிகப்பிரபல நத்தார்ச் சந்தையாகக் கருதப்படுகிறது. இது 17ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. இங்கு கிடைக்கக் கூடிய இஞ்சி அணிச்சலும் (Lebkuchen), றோஸ்ற்பிராட்வூஸ்ரும் (Rostbratwurst) பிரசித்தமானவையாகவும், மக்களைக் கவர்ந்திழுப்பவையாகவும் உள்ளன.[3]