நாட்டுத் தலைவர்
நாட்டுத் தலைவர் (Head of state) ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மிக உயர்ந்த அரசு பதவி வகிப்பவரைக் குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகும். அரசமைப்புச் சட்டவியல், பன்னாட்டு சட்டவியல், அரசறிவியல், தூதரக நெறிமுறைகள் போன்ற துறைகளில் இத்தொடர் பயன்படுகிறது. இப்பதவி வகிப்பவர் பன்னாட்டு அரங்கில் அந்நாட்டின் தலைமைப் பொது பிரதிநியாகச் செயல்படும் அதிகாரம் பெற்றிருப்பார். உலகின் மிகப்பெரும்பான்மையான நாடுகளில் இப்பதவியை தனியொருவரே வகிக்கின்றார் எனினும் சுவிட்சர்லாந்து, பொசுனியா எர்செகோவினா, அண்டோரா, சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் கொண்ட குழுமங்கள் இப்பதவியை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அவைகளிலும் பன்னாட்டு உடன்படிக்கைகளிலும் “நாட்டுத் தலைவர்” என்னும் பதவி அரசுத் தலைவர் (Head of government) பதவியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. பல நாடுகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். எடுத்துக்காட்டாக நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் நாட்டுத் தலைவர் அரசராகவோ (ஐக்கிய இராச்சியம்) அல்லது குடியரசுத் தலைவராகவோ (இந்தியா) இருப்பார். நாட்டின் பிரதம அமைச்சர் அரசுத் தலைவராக இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரேசில், இலங்கை போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Foakes, pp. 110–11 "[The head of state] being an embodiment of the State itself or representatitve of its international persona."
- ↑ Kubicek, Paul (2015). European Politics. Routledge. pp. 154–56, 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-34853-5.
- ↑ Nicolaidis and Weatherill, ed. (2003). "Whose Europe? National Models and the Constitution of the European Union" (PDF). Archived from the original (PDF) on 17 June 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.