நாணய மாற்று வீதம்
நிதித்துறையில், நாணய மாற்று வீதம் அல்லது வெளிநாட்டு நாணய மாற்று வீதம் என்பது, இரு நாடுகளின் நாணயங்களில் ஒரு நாணயத்தின் மதிப்பு மற்ற நாணயத்தில் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இன்னொரு வகையில், இது, உள்நாட்டு நாணயத்தில் வெளிநாட்டு நாணயம் ஒன்றின் மதிப்பைக் குறிப்பதாகும். எடுத்துக் காட்டாக, நாணய மாற்றுவீதம் 38 இந்திய ரூபாய்க்கு 1 அமெரிக்க டாலர் என்னும்போது, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 38 இந்திய ரூபாய்களுக்கு ஈடானது என்பது பொருள்.[1][2][3]
வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை
தொகுவெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை உலகின் மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று. சில மதிப்பீடுகளின் படி ஒவ்வொரு நாளும் 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நாணயம் கைமாறுகின்றதாம்.
உடனடி மாற்று வீதம், முன்னோக்கிய மாற்று வீதம்
தொகுஉடனடி மாற்று வீதம் என்பது குறித்த நேரத்திலுள்ள நாணய மாற்று வீதம் ஆகும். பிந்திய இன்னொரு தேதியில் கொடுத்து வாங்குவதற்காக முன்னதாகவே விலை குறித்துத் தீர்மானித்துக் கொள்ளும் மாற்றுவீதம் முன்னோக்கிய மாற்று வீதம் எனப்படும்.
கேள்விகள்
தொகுகேள்வி நாணயம், மூல நாணயம்
தொகுநாணய மாற்று முறைமையில் விலைக்கான கேள்வி கொடுக்கும்போது, ஓர் அலகு மூல நாணயத்துக்காகக் கொடுக்க விரும்பும் கேள்வி நாணய (அல்லது விலை நாணயம்) அலகுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, நாணய மாற்றுக் கேள்வியொன்றில் EURUSD நாணய மாற்று வீதம் 1.432 (ஒரு யூரோவுக்கு 1.432 அமெரிக்க டாலர்கள்) எனக் குறிப்பிடப்பட்டால் கேள்வி நாணயம் அமெரிக்க டாலரும், மூல நாணயம் யூரோவும் ஆகும்.
நாணய மாற்று வீதம்
தொகுமூல நாணயம் எது எனத் தீர்மானிப்பதற்கு உலகின் பெரும்பாலான நாணய மாற்றுச் சந்தைகளில் மரபு ஒன்று உள்ளது. இதன்படி மூல நாணயமாக இருப்பதற்குரிய தெரிவொழுங்கு: யூரோ - பெரிய பிரித்தானிய பவுண்டு - ஆசுத்திரேலிய டாலர் - நியூசிலாந்து டாலர் - அமெரிக்க டாலர் - பிற நாணயங்கள் என அமைகின்றது. எனவே யூரோவில் இருந்து ஆசுத்திரேலிய டாலருக்கு நாணய மாற்றுச் செய்யும்போது யூரோவே மூல நாணயமாக இருக்கும். இதன் அடிப்படையில் குறிப்பிடப்படும் நாணய மாற்று வீதம் ஒரு யூரோவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு ஆசுத்திரேலிய டாலர்கள் கொடுக்கவேண்டும் என்பதைக் காட்டும்.
ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், ஐக்கிய இராச்சியத்தின் தொழில்முறை சாராச் சந்தைகளிலும், பெரிய பிரித்தானிய பவுண்டையே மூல நாணயமாகப் பயன்படுத்துகின்றனர். நாணய மாற்றுச் செய்யவேண்டிய இரண்டு நாணயங்களுமே மேற்காட்டிய பட்டியலில் இல்லாதிருந்தால், எது 1.000 இலும் கூடிய நாணய மாற்று வீதத்தைக் கொடுக்குமோ அதையே மூல நாணயமாகக் கொள்வது வழக்கு. இந்த விதிக்கு விலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, சப்பானியர்கள் எப்போதும் சப்பானிய யென் நாணயத்தையே மூல நாணயமாகக் கொள்வர்.
நேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள்
தொகுஒரு நாட்டின் உள்நாட்டு நாணயத்தை விலை நாணயமகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 0.63 = ஐ.அ.டா 1.00) நேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள் எனப்படுகின்றன. இதுவே பல நாடுகளிலும் கைக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் நாணயத்தை அலகு நாணயமாகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 1.00 = ஐ.அ.டா 1.58) மறைமுகக் கேள்விகள் அல்லது கணியக் கேள்விகள் எனப்படுகின்றன. பிரித்தானியச் செய்தித்தாள்கள் இதனைப் பயன்படுத்துகின்றன. ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் யூரோவலயத்திலும் இது பொதுவாகப் பயன்படுகிறது.
- நேரடிக் கேள்வி: 1 வெளிநாட்டு நாணய அலகு = X உள்நாட்டு நாணய அலகுகள்
- மறைமுகக் கேள்வி: 1 உள்நாட்டு நாணய அலகு = X வெளிநாட்டு நாணய அலகுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Frieden, Jeffry A.; Lake, David A.; Schultz, Kenneth A. (2019). World politics: interests, interactions, institutions (4th ed.). New York: W.W. Norton & Company. pp. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-64449-4.
- ↑ Frieden, Jeffry A.; Lake, David A.; Schultz, Kenneth A. (2019). World politics: interests, interactions, institutions (4th ed.). New York: W.W. Norton & Company. pp. 394–395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-64449-4.
- ↑ Frieden, Jeffry A.; Lake, David A.; Schultz, Kenneth A. (2019). World politics: interests, interactions, institutions (4th ed.). New York: W.W. Norton & Company. pp. 391–395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-64449-4.