நாணல்

ஒரு தாவர இனம்

நாணல், தர்ப்பை, குசப்புல், தருப்பை, (Saccharum spontaneum, wild sugarcane, Kans grass ( வங்காள மொழியில்; কাশ, இந்தி மொழியில்: काँस, ஒடியா மொழியில்; କାଶତଣ୍ଡି, அசாமிய மொழியில்; কঁহুৱা ) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வளரக்கூடிய ஒரு புல் வகையாகும்.

நாணல் பூக்களுடன்

இது நேபாளம், இந்தியா, வங்காளதேசம் மற்றும் பூட்டானில் உள்ள இமயமலை அடிவாரப் பகுதியியல் உள்ள தாழ்நிலப் புல்வெளிப் பகுதிகளில் பரவி உள்ளது. இந்த கோரைப் புல்வெளிகள் இந்திய காண்டாமிருகத்தின் ஒரு முக்கியமான வாழ்விடமாகும்.

மற்ற இடங்களில், மண்ணில் விரைவாக பரவி பயிர்நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிகிரமிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறி உள்ளது.

விளக்கம் தொகு

இது பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் ஆகும். இது பல்லாண்டு வாழ்கின்ற புல் இனம். இது மூன்று மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இது புதர்ச்செடியாக மட்ட வேர்த்தண்டுக் கிழங்கு வேர்களை பரப்பி செழித்து வளர்கிறது.[1][2] 'கல்ம்' எனப்படும் இதன் தண்டு 15 அடி உயரம் வரையில் வளரும். இதன் இலைகள் மிக நீளமானவை. அவை 1-4 அடி நீளமும், 0.2- 5 அங்குல அகலமும் கொண்டவை.

மலர் தொகு

இது இரண்டு அடி நீளமான கலப்பு மஞ்சரியைக் கொண்டது. வேழம், கரும்பு இவற்றின் மஞ்சரி போன்று கிளைத்திருக்கும். கரும்பின் மலரை ஒத்து வெண்ணிறமாக இருக்கும். மஞ்சரிக் கிளைகளாகிய 'பைக்லெட்'களில் பட்டிழை போன்ற நீண்ட வெள்ளியளிய மயிர் அடர்ந்திருக்கும். மலர்கட்கு "பிளாரெட்" என்று பெயர். இதனைத் தோல் போன்ற தடித்த உமி "குளும்" மூடிக் கொண்டிருக்கும். இது அடியில் பழுப்பு நிறமானது. மேலே வெள்ளிய நிறமானது. ஏனைய இயல்புகள் கரும்பின் மலரை ஒத்தவை.

பயன்கள் தொகு

இந்திய துணைக் கண்டத்தில் இத்தாவரமானது பல்வேறுவிதமான பிராந்தியப் பெயர்களைக் கொண்டுள்ளது, உதாரணமாக காஷ் [কাশ] என்ற பெயர் பெங்காலி / பங்களாவில் [বাংলা] பொதுவாக அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.[3][4] நேபாளத்தில், இந்த கோரைப் புல் தட்டுகள் கூரை வேய அல்லது காய்கறி தோட்டங்களுக்கு வேலி அமைக்க அறுவடை செய்யப்படுகிறது.

இலக்கியத்தில் தொகு

இது சங்க இலக்கியத்தில் இது தருப்பை என அழைக்கப்பட்டது. தற்காலத்தில் தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் என்ற பெயல்களால் அழைக்கப்படுகிறது. இந்த வகைப்புலானது புதர்ச்செடியாகத் தரையடி மட்டத்தண்டிலிருந்து செழித்து வளரும். இது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக்கொண்டு கூரை வேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப் படையில் அது பின்வருமாறு;

வேழம் கிரைத்து வெண்கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில் -பெரும்பாணாற்றுப்படை, 263-265

என்ற அடிகளில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் 'தருப்பைப்" புல்லைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரைகண்டார்:

'வஞ்சி மரமும் காஞ்சி மரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து நாற்றி, வேழக்கோலை வரிச்சாக நிரைத்துத் தாழை நாரால் கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிவினையும்' என்பதால் கூரை வேய்தற்குத் தருப்பைப் புல் பயன்படுத்தப்பட்டது என்பதும் இவற்றை வேழக் கோலாலே வரிச்சை நிரைத்துத் தாழையின் நாரினால் கட்டுவர் என்பதும் அறியப்படும்.[5]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  •   விக்கியினங்களில் நாணல் பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணல்&oldid=3560470" இருந்து மீள்விக்கப்பட்டது