நாராயணசாமி நாயுடு

நாராயணசாமி நாயுடு (திசம்பர் 6, 1925 - திசம்பர் 20, 1984) தமிழக உழவர் இயக்கத்தின் (தமிழக விவசாயிகள் சங்கம்) நிறுவனர் மற்றும் தலைவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் செங்காளிபாளையம் கிராமம் வையம்பாளையம் என்ற சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தார் நாராயணசாமி. பெற்றோர் சின்னம்ம நாயுடு - அரங்கநாயகி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணசாமி அதன் பிறகு தன்னை முழுமையாக உழவுத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டார். 1957 முதலே உழவர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டார் நாராயணசாமி. உழவர்கள் தனித்து இருப்பதாலேயே தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற முடிவதில்லை என்பதை உணர்ந்து உழவர்கள் இயக்கத்தை கட்டமைப்பதிலே கவனம் செலுத்தினார். 1968-ல் கோவை வட்ட உழவர் இயக்கம் 1969-ல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970-ல் தமிழக உழவர் இயக்கம் என உழவர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கட்டமைத்தார்.

1970-லிருந்து 1980 வரை தமிழகத்தில் நடைபெற்ற உழவர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார் நாராயணசாமி. உழவர் போராட்டங்களிலே கலந்து கொண்டதற்காக பல முறை சிறை சென்றார். 1980-க்கு பிறகு இந்திய அளவில் உழவர்களை திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் நாராயணசாமி. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பேராசிரியர் நஞ்சுண்ட சாமியையும், ஆந்திராவில் சங்கர் ரெட்டியையும் மராட்டியத்தில் சரத் ஜோசியையும் உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத்தையும் சந்தித்து உழவர் இயக்கத்தை கட்டமைக்க தூண்டினார். அதன் பிறகே இம்மாநிலங்களில் உழவர் இயக்கங்கள் ஏறபடுத்தப்பட்டன.

கோரிக்கைகள்

தொகு

1970-களில் நாராயணசாமி முன் வைத்த முதன்மையான கோரிக்கைகளில் சில:-

  • உழவுக்கான மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்.
  • கட்ட இயலாத நிலையில் உள்ள உழவர்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • வேளாண் பொருட்களுக்கு அரசு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணசாமி_நாயுடு&oldid=2238518" இலிருந்து மீள்விக்கப்பட்டது