நாற்சார் வீடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன. உள் நோக்கிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களிலேயே இத்தகைய வீடுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
தமிழ் நாடு, இலங்கை ஆகிய தமிழர் வாழுமிடங்களிலே கட்டப்படும் இத்தகைய வீடுகளையே தமிழர் நாற்சார் வீடுகள் என அழைக்கிறார்கள். கேரள மாநிலத்தில் இவற்றை நாலுகெட்டு என வழங்குவர். தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் வாழும் பகுதிகளில் காணப்படும் நாற்சார் வீடுகள் பெயர் பெற்றவையாகும். தற்காலத்தில் இப் பாணியிலமைந்த வீடுகள் கட்டப்படுவது குறைவு. மேற்கத்தியப் பாணி வீடுகளுக்கு இடம் கொடுத்து இந்தப் பாரம்பரிய வீடுகள் மறைந்து வருகின்றன.