நிகழ்வெண் செவ்வகப்படம்
புள்ளியியலில், நிகழ்வெண் செவ்வகப்படம் (Histogram) என்பது தரவுகளின் பரவலைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தும் ஒர் விளக்கப்படம் ஆகும். இது ஒரு தொடர் மாறியின் நிகழ்தகவு பரவல் மதிப்பீட்டைக் காட்சிப்படுத்துகிறது. அதாவது ஒரு தரவு அல்லது மாறியின் மதிப்பு எத்தனை தடவைகள் நிகழ்ந்தன என்பதை இந்த வரைபடம் எடுத்துரைக்கிறது. என்ன மதிப்புகள் அதிகம் இடம்பெற்றன என்பதை எளிதாக கண்டுபிடிக்கவும், மதிப்புகள் என்ன நிகழ்தகவு கோட்டில் நிகழ்ந்தன போன்ற கேள்விகளுக்கு பதில் தரவும் இவை உதவுகின்றன. நிகழ்வெண் செவ்வகப்படமானது கார்ல் பியர்சனால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
செவ்வகப்படங்கள் இரு மாறிகளின் தொடர்பைக் காட்சிப்படுத்துகின்றன; நிகழ்வெண் செவ்வகப்படங்களோ ஒரு மாறியின் மதிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. நிகழ்வெண் செவ்வகப்படம் வரையுமுன்னர் தரவினை நிகழ்வெண் அட்டவணையாக அமைக்க வேண்டும். நிகழ்வெண் அட்டவணையிலுள்ள இடைவெளிகள் தொடர்ச்சியானவையாகவும், அடுத்தடுத்தவையாகவும், பெரும்பான்மை சமவளவானவையாகவும், மேற்படிதல் அற்றவையாகவும் இருத்தல் அவசியம்.[2]
இடைவெளிகள் சமவளவினதாக இருக்கும்போது ஒவ்வொரு இடைவெளியின் மீதும் அவ்விடைவெளிக்குரிய நிகழ்வெண்ணுடன் விகிதசமனான நீளமுடைய செவ்வகங்கள் வரையப்படுகின்றன. இடைவெளிகள் சமமானவையாக இல்லையென்றால் அவற்றின் மீது வரையப்பட்ட செவ்வகங்களின் பரப்பளவுகள், அந்தந்த இடைவெளிக்குரிய நிகழ்வெண்களுக்கு விகிதசமனாக இருக்கும்.[3] இடைவெளிகள் தொடர்ச்சியானவையாக இருப்பதால் நிகழ்வெண் செவ்வகப்படத்தின் செவ்வகங்கள் அடுத்தடுத்த செவ்வகங்கள் ஒன்றையொன்று தொட்டவாறு இருக்கும். மேலும் இவ்வமைப்பு எடுத்துக்கொள்ளப்பட்ட மாறி தொடர்ச்சியானது என்பதைக் காட்டுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Karl Pearson (1895). "Contributions to the Mathematical Theory of Evolution. II. Skew Variation in Homogeneous Material". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 186: 343–414. doi:10.1098/rsta.1895.0010. Bibcode: 1895RSPTA.186..343P.
- ↑ Howitt, D.; Cramer, D. (2008). Introduction to Statistics in Psychology (Fourth ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-205161-3.
- ↑ Freedman, D.; Pisani, R.; Purves, R. (1998). Statistics (Third ed.). W. W. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-97083-8.
- ↑ Charles Stangor (2011) "Research Methods For The Behavioral Sciences". Wadsworth, Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780840031976.