விளக்கப்படம்

விளக்கப்படம் (chart) என்பது ஒரு தரவின் வரைபட வடிவமாகும். ஒரு தரவின் விளக்கப்படமானது அத்தரவின் தன்மையைப் பொறுத்து அட்டவணை, வடிவவியல் வடிவங்கள், கணித வரைபடங்கள், நில வரைபடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எண் தரவுகளில் அட்டவணைகளாக, சார்பு வடிவத் தரவுகளில் அச்சார்புகளின் வரைபடங்களாக அல்லது சிலவகை பண்புசார் அமைப்புகளாக விளக்கப்படங்கள் உள்ளன.

வட்ட விளக்கப்படம்
பெரு வட்டத்தினைக் காட்டும்படம்
கடல் வழி விளக்கப்படம்
இசைக்குறி விளக்கப்படம்

ஒரு தரவிலுள்ள மிகப்பெரிய அளவிலான அல்லது எண்ணிக்கையிலான கணியங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும், தரவின் உட்பகுதிகளுக்கு இடைப்பட்ட தொடர்பை ஒப்பீடு செய்வதற்கும் அத்தரவின் விளக்கப்படங்கள் உதவுகின்றன. தரவின் உண்மையான வடிவில் அதனைப் படித்தறிந்து கொள்வதைவிட, தரவின் விளக்கப்படம் மூலமாக குறைந்த நேரத்தில் படித்துப் புரிந்து கொள்ளலாம்.


விளக்கப்படங்கள் மூலமாக ஒரு தரவின் விவரங்கள், குறியீடுகளைக் கொண்டு விளக்கப்படுகிறது. பட்டை விளக்கப்படங்களில் பட்டைகளைக் கொண்டும், கோட்டு விளக்கப்படங்களில் கோடுகளைக் கொண்டும், வட்ட விளக்கப்படங்களில் வட்டங்களைக் கொண்டும் அந்தந்தத் தரவின் விவரங்கள் விளக்கப்படுகின்றன.[1]

எண்சார் அல்லது பண்புசார் தரவினை ஒழுங்குபடுத்திக் காட்டும் தரவு விளக்கப்படங்கள்; விவரணங்கள் கொண்ட நிலப்படங்கள்; கப்பல்/வானூர்தி பயண வரைபடங்கள்; இசைக்குறிப்புகளடங்கிய விளக்கப்படங்கள் என விளக்கப்படங்கள் பல துறைகளிலும் பயன்பாடு கொண்டுள்ளன. பல்வேறு தரப்பட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் இந்த விளக்கப்படங்களைக் கட்டத்தாள்களில் கைகளால் வரையலாம் அல்லது கணினியைப் பயன்படுத்தியும் வரையலாம்.

தரவுகளின் தன்மையைப் பொறுத்து விளக்கப்படங்களில் சில வகைகள் பிறவற்றைவிட பயன்பாட்டிற்கும் புரிதலுக்கும் எளிதானவையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, விழுக்காடுகளை வட்ட விளக்கப்படம், பட்டை விளக்கப்படம் இரண்டிலும் வரைந்தால் வட்டவிளக்கப்படத்தைவிட, பட்டை விளக்கப்படம் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும்.[2] மாறாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்காக ஆண்டு வருமானத்தை வரைபடங்களில் வரையும்போது கோட்டு வரைபடங்கள் பொருத்தமானதாக அமையும்.

சில இடங்களில் விளக்கப்படங்கள், வரைபடங்கள் (graphs) என்றும் அழைக்கப்படுகின்றன.

விளக்கப்படங்களின் வகைகள்

தொகு

சாதாரணப் பயன்பாட்டு விளக்கப்படங்கள்

தொகு

சாதாரணப் பயன்பாட்டு விளக்கப்படங்களில் முக்கியமான நான்கு:

  • நிகழ்வெண் செவ்வகப்படம்

நிகழ்வெண் செவ்வகப்படம், அட்டவணைப்படுத்தப்பட்ட நிகழ்வெண்களைக் காட்டும் அடுத்தடுத்து ஒட்டியவாறு அமைந்த செவ்வகங்களை கொண்டிருக்கும். இச்செவ்வகங்கள் தனித்த இடைவெளிகளின் மேல் வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு செவ்வகத்தின் பரப்பளவும் அந்தந்த இடைவெளியில் அமைந்த நிகழ்வெண்களைக் குறிக்கும். நிகழ்வெண் செவ்வகப்படங்கள் கணிதவியலாளர் கார்ல் பியர்சனால் அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

  • பட்டை விளக்கப்படம்

பட்டை விளக்கப்படங்கள் செவ்வகப்பட்டைகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செவ்வகப்பட்டையின் நீளமும் அப்பட்டைக் குறிப்பிடும் மதிப்பின் விகிதத்தில் இருக்கும். செவ்வகப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ வரையப்பட்டிருக்கும். முதன்முதலாக அறியப்பட்ட செவ்வகப்பட்டைகள் நிக்கொலெ ஓர்சம், ஜோசப் பிரீஸ்ட்லி, வில்லியம் பிளேபேர் ஆகிய கணிதவியலாளர்களுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.[4]

  • வட்ட விளக்கப்படம்

வட்ட விளக்கப்படமானது விழுக்காடு மதிப்புகளை ஒரு வட்டத்தின் பகுதிகளாகக் காட்டுகிறது. வட்ட விளக்கப்படத்தை அறிமுகப்படுத்தியவர் கணிதவியலாளர் வில்லியம் பிளேபேர் ஆவார்.[5]

  • கோட்டு விளக்கப்படம்

கோட்டு விளக்கப்படம் வரிசைப்படுத்தப்பட்ட கண்டறியப்பட்ட விவரங்களின் இருபரிமாண சிதறல் படமாகும். பிரான்சிஸ் கௌக்சிபீ, நிக்கோலஸ் சாமுவேல் க்ருகுயுயசு, ஜோகன் கெயின்ரிச் லம்பெர்ட், வில்லியம் பிளேபேர் ஆகிய கணிதவியலாளர்களால் முதன்முதலில் கோட்டு விளக்கப்படம் பயன்படுத்தப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Cary Jensen, Loy Anderson (1992). Harvard graphics 3: the complete reference. Osborne McGraw-Hill பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-881749-8 p.413
  2. Howard Wainer (1997) 'Visual revelations: graphical tales of fate and deception from Napoleon Bonaparte to Ross Perot,Lawrence Erlbaum Associates, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8058-3878-3 p.87-90
  3. Karl Pearson (1895). "Contributions to the Mathematical Theory of Evolution. II. Skew Variation in Homogeneous Material". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 186: 343–414. doi:10.1098/rsta.1895.0010. Bibcode: 1895RSPTA.186..343P. 
  4. "First Ever Bar Charts Created in 14th Century". AnyChart. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  5. "History of Pie Charts". JPowered. Archived from the original on 15 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Michael Friendly (2008). "Milestones in the history of thematic cartography, statistical graphics, and data visualization" (PDF). pp. 13–14. Archived from the original (PDF) on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்கப்படம்&oldid=3592016" இலிருந்து மீள்விக்கப்பட்டது