செவ்வக விளக்கப்படம்
செவ்வக விளக்கப்படம் அல்லது பட்டை விளக்கப்படம் (bar chart or bar graph) என்பது ஒரு தெளிவான தரவின் விவரங்களை செவ்வகங்களைக் கொண்டு காட்டும் விளக்கப்பட வடிவமாகும். செவ்வக விளக்கப்படத்திலுள்ள செவ்வகங்களின் நீளங்கள் (உயரங்கள்), அவைக் குறிக்கும் மதிப்புகளின் விகிதத்தில் இருக்கும். இந்த விளக்கப்படங்களில் காணப்படும் செவ்வகங்கள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ அமையலாம்.
ஒரு தரவிலுள்ள விவரங்களை எளிய முறையில் ஒப்பீடு செய்ய செவ்வக விளக்கப்படங்கள் உதவுகின்றன. செவ்வக விளக்கப்படத்தின் ஒரு அச்சு ஒப்பீடு செய்யப்படும் வகையினங்களையும் மற்றொரு அச்சு அவ்வகையினங்களின் மதிப்புகளையும் குறிக்கும்.
வரலாறு
தொகுவில்லியம் பிளேபேர் (1759-1824) என்பவரே முதன்முதலாகச் செவ்வக விளக்கப்படத்தைக் கண்டறிந்தவராகப் பல ஆதாரங்கள் கூறுகின்றன. தி கமர்சியல் அன்டு பொலிட்டிகல் அட்லசு என்ற அவரது படைப்பில் காணப்படும் வரைபடமே (Exports and Imports of Scotland to and from different parts for one Year from Christmas 1780 to Christmas 1781) வரலாற்றின் முதல் செவ்வக விளக்கப்படமாகக் கருதப்படுகிறது. எனினும் இதற்கும் 300 ஆண்டுகளுக்கு முன்னராகத் தி லேட்டியூடு ஆப் பார்ம்சு இல் வெளியிடப்பட்ட, "மாறாத முடுக்கத்தில் நகரும் பொருளின் திசைவேகத்திற்கான வரைபடங்களை" செவ்வக விளக்கப்படங்களின் முன்னோடியாகக் கொள்ளலாம் (இவ்வரைபடங்களை உருவாக்கியவர்களாக ஜேக்கோபசு டி சான்க்டோ மார்ட்டினோ அல்லது சிலவேளைகளில் நிக்கோலசு ஓர்ஸ்மெ என்ற கருத்து நிலவுகிறது).[1][2][3]
அமைப்பு
தொகுசெவ்வக விளக்கப்படங்களின் ஆட்களங்கள் தனித்த வகைமானங்களாக இருக்கும். ஒரு தரவிற்கு செவ்வக விளக்கப்படம் வரையும்போது முழுத்தரவும் ஒரே வரைபடத்தில் அடங்கும்விதத்தில் அளவுதிட்டம் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு தரவில் ஒப்பீடு செய்யப்படும் வகைமானங்கள் இயல்பாகவே வரிசைப்படுத்தப்பட்டவையாக இல்லாதபட்சத்தில், அத்தரவிற்கான செவ்வக விளக்கப்படத்தில் செவ்வகங்கள் எந்தவொரு வரிசைப்படியும் இருக்கலாம். செவ்வக விளக்கப்படங்கள், வகைமானப்படுத்தப்பட்ட தரவின் காட்சி உருவகிப்பாகும். [4] வகைமானப்படுத்தப்பட்டத் தரவு என்பது தனித்த தொகுப்புகளாக தொகுக்கப்பட்ட தரவாகும். எகா: ஆண்டின் மாதங்கள், வயதுவாரியான தொகுப்புகள், காலணி அளவுகள், விலங்குகள். பொதுவாக இவ்வகைமானங்கள் பண்புசார்ந்தவை. செங்குத்தான செவ்வக விளக்கப்படங்களில் வகைமானங்கள் கிடை அச்சிலமையும்; செவ்வகங்களின் உயரம் அந்தந்த வகைமானங்களின் மதிப்பைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Clagett, Marshall (1968), Nicole Oresme and the Medieval Geometry of Qualities and Motions, Madison: Univ. of Wisconsin Press, pp. 85–99, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-299-04880-2
- ↑ Beniger, James R.; Robyn, Dorothy L. (1978), "Quantitative Graphics in Statistics: A Brief History", The American Statistician, Taylor & Francis, Ltd., 32 (1): 1–11, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00031305.1978.10479235, JSTOR 2683467
- ↑ Der, Geoff; Everitt, Brian S. (2014). A Handbook of Statistical Graphics Using SAS ODS. Chapman and Hall - CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-584-88784-2.
- ↑ Kelley, W. M.; Donnelly, R. A. (2009) The Humongous Book of Statistics Problems. New York, NY: Alpha Books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1592578659
வெளியிணைப்புகள்
தொகு- Directory of graph software and online tools (many can handle bar charts)
- Create A Graph. Free online graph creation tool at the website for the National Center for Education Statistics (NCES)
- Livegap Charts . Free online chart maker