நிதிச் சொத்துக்களைப் பாதுகாத்தல் & மறுகட்டமைத்தல் & பாதுகாப்பு அமலாக்கச் சட்டம் 2002
நிதிச் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் மறுகட்டமைத்தல் மற்றும் பாதுகாப்பு அமலாக்கச் சட்டம் 2002 (சுருக்கமாக:சர்ஃபாசி சட்டம்) (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Securities Interest Act, 2002 (SARFAESI Act) என்பது நிதிச் சொத்துக்களின் பத்திரப்படுத்துதல், மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் நிதிப்பாதுகாப்பை அமலாக்கப்படுத்தும் சட்டமாகும். இச்சட்டத்தின் நோக்கம் சொத்துக்களை வங்கிகளில் அடமானம் வைத்து கடனை பெற்றவர்கள், பின்னர் கடனை உரிய காலத்தில் கடனைத் செலுத்த தவறினால், அடமானம் வைத்த சொத்துக்களை வங்கியால் கைப்பற்றப்பட்டு, அதனை ஏலம் விட்டு கடனை வசூலிக்க முடியும். அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியப் பிரதமராக இருந்த போது 2002ம் ஆண்டில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்த்தின் கீழ், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனை உரிய தவணைக்குள் திருப்பிச் செலுத்தாத போது, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்கள் மீது நேரடியாக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.[2] இந்திய நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை 2002ல் நிறைவேற்றியது.
நிதிச் சொத்துக்களைப் பாதுகாத்தல் & மறுகட்டமைத்தல் & பாதுகாப்பு அமலாக்கச் சட்டம் 2002 | |
---|---|
நிதிச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமலாக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டம் | |
சான்று | Act no. 54 of 2002[1] |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா முழுமைக்கும் |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
இச்சட்டம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனை உரிய தவணையில் திரும்ப செலுத்தாதவர்களின் வங்கி இருப்பு கைப்பற்றவும், குடியிருப்பு அல்லது வணிக சொத்துக்களை ஏலம் விடவும் அனுமதிக்கிறது. இந்தியாவின் முதல் சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் (ARC), ARCIL), இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.[3] சர்ஃபாசி சட்டம் 2002ன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களை (ARCs) பதிவுசெய்து ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. சர்ஃபாசி சட்டம், 2002ன் பிரிவு 13 இன் கீழ் வங்கிகள் வழங்கிய கடன் & வட்டியை திரும்பப் பெறுவதற்கு பல உரிமைகளைப் பெற்றுள்ளது.
சர்ஃபாசி சட்டத்தின் சுருக்கம்
தொகுசர்ஃபாசி சட்டம் என்பது, தனிநபர்கள் மற்றும் வணிக & தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது. வாங்கிய கடனை உரிய தவணைகளில் திருப்பி செலுத்தவில்லை எனில், வங்கி கணக்கை செயல்படாத சொத்தாக அறிவிக்கலாம். தொடர்ச்சியாக மூன்று தவணைகள் செலுத்தத் தவறினால், கடனுக்கு பிணையமாக கொடுக்கப்பட்ட சொத்தை நேரடியாக பறிமுதல் செய்து விற்க வங்கிக்கு சர்ஃபாசி சட்டம் அதிகாரம் அளிக்கிறது. பிணையத்தை பறிமுதல் செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை. வங்கி பிணைய சொத்து மீது ஒரு அறிவிப்பை ஒட்டுவதன் மூலம், கடனுக்காக அச்சொத்தை எடுத்துக் கொள்ளலாம். கடன் வாங்கியவர் 60 நாட்களுக்குள் முழுக்கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பையும் வங்கி அனுப்பலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவைத் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வங்கி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கலாம். கடன் பெற்றவரிடமிருந்து பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெற முடியாவிட்டால், உத்தரவாததாரர்களின் அசையாச் சொத்தை பறிமுதல் செய்யவும் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ரூபாய் 1 இலட்சத்துக்கும் குறைவான (வெந்நிலை ஜாமீன் பத்திரம்) பாதுகாப்பற்ற கடனுக்கு இந்த விதி பொருந்தாது. வாங்கிய கடனில் இருபது சதவீதத்திற்கும் குறைவாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை இருந்தாலும் விதி பொருந்தாது.
சட்டத் திருத்தம்
தொகு2 ஆகஸ்டு 2016 மக்களவையில் சர்ஃபாசி சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு, "நிதி பாதுகாப்பு அமலாக்கம் மற்றும் கடன்கள் சட்டங்கள் மற்றும் இதர விதிகள் (திருத்தம்) மசோதா, 2016" ஐ நிறைவேற்றியது.[4] 10 ஆகஸ்ட் 2016 அன்று மாநிலங்களவையில் இச்சட்டத்தின் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.
செயல்முறை
தொகுமுறையான நடைமுறையைப் பின்பற்றினால் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் பணத்தைத் திரும்பப் பெற முடியும். இதற்கான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தற்காலிகத் திருப்பிச் செலுத்தாதவற்றை செயல்படாத கடன்களாக[5] அறிவிக்கக் கூடாது. சரக்கு இருப்பு அறிக்கை வழங்குவதில் தாமதம், நிறுவனத்தின் வாங்கும் சக்தியை விட அதிகமாக கடன் பாக்கிகள் போன்றவை கடனை செயல்படாத சொத்தாக அறிவிக்க போதுமானதாக இல்லை. ஒரு சொத்தை செயல்படாத சொத்தாக அறிவித்த பிறகும், வங்கிகள் உடனடியாக பறிமுதல் செய்யக்கூடாது. கடன் வாங்கியவர் தொடர்ந்து 90 நாட்களுக்குத் திருப்பிச் செலுத்தாமல், 12 மாதங்களுக்குத் தொடர்ந்தால், அவருடைய பிணையானது செயல்படாத சொத்தாக மாறும். இதன் மூலம் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு அடுத்த அறுபது நாட்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த அறிவிக்கை கொடுக்க வேண்டும். அதாவது, கடனைச் செயல்படாத சொத்தாக மாற்றுவதற்கான காலக்கெடுவும், அதன்பிறகு பிற சட்டச் செயல்முறைகளும் பின்பற்றப்பட வேண்டும். கடன் வாங்கியவருக்கு 17 மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும்.
திறனாய்வு
தொகுபல்வேறு காரணங்களுக்காக, சர்ஃபாசி சட்டம் ஒரு கருப்பு சட்டமாக பொது மக்களால் உணரப்படுகிறது. கடனுக்காக சொத்துப் பறிமுதல் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. பிணைய சொத்துக்கள் மீதான எந்தவொரு நடவடிக்கைக்கும் வங்கிகளுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை. கடன் வாங்கியவரின் சொத்தை பிறர் ஆக்கிரமித்திருந்தால் வங்கி நேரடியாக வெளியேற்றலாம். இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விதிமுறைகளை பெரும்பாலான வங்கிகள் பின்பற்றுவதில்லை.
முக்கிய தீர்ப்பு
தொகு2004ம் ஆண்டில், சர்பாசி சட்டத்தை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டது. மார்டியா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மீது ஐசிஐசிஐ வங்கி தொடர்ந்த வழக்கில், வங்கிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடனில் 75 சதவிகிதம் செலுத்தப்படாமல் இருப்பதால், சொத்துக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரலாம் என்றும், சர்ஃபாசி சட்டம் [6] அரசியலமைப்பிற்கு முரணானது எதுவும் இல்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியது
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Securitisation And Reconstruction Of Financial Assets Andenforcement Of Security Interest Act, 2002
- ↑ "What is the Sarfaesi Act?". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 16 March 2015. http://www.business-standard.com/article/pf/what-is-the-sarfaesi-act-111061600108_1.html.
- ↑ Pathak (1 September 2007). The Indian Financial System: Markets, Institutions And Services, 2/E. Pearson Education India. p. 589. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7758-562-9. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "Lok Sabha passes bill to fast track debt recovery", தி எகனாமிக் டைம்ஸ், 2 August 2016
- ↑ Non-performing loan
- ↑ "Banks can sell secured assets of defaulters: SC". தி எகனாமிக் டைம்ஸ். 8 April 2004. http://articles.economictimes.indiatimes.com/2004-04-08/news/27373587_1_mardia-chemicals-rasik-mardia-icici-bank.