நீங்கா நினைவு

நீங்கா நினைவு ([The Persistence of Memory] error: {{lang-xx}}: text has italic markup (உதவி); (எசுப்பானியம்: La persistencia de la memoria என்பது சால்வதோர் தாலீ (Salvador Dalí) என்னும் புகழ்மிக்க எசுப்பானியக் கலைஞர் 1931இல் வரைந்த எழில்மிகு ஓவியம் ஆகும்.

நீங்கா நினைவு
ஓவியர்சால்வதோர் தாலீ
ஆண்டு1931 (1931)
வகைதுணிப்பரப்பக எண்ணெய் ஓவியம்
பரிமானங்கள்24 cm × 33 cm (9.5 in × 13 in)
இடம்தற்காலக் கலைப்பொருள் காட்சியகம், நியூயார்க்

அந்த ஓவியம் முதன்முறையாக "ஷூலியேன் லேவி" கலைக்கூடத்தில் 1932இல் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் 1934இலிருந்து நியூயார்க்கில் உள்ள "தற்காலக் கலைப்பொருள்கள் காட்சியகத்தில்" வைக்கப்பட்டுள்ளது.

எளிதில் அடையாளம் காணக்கூடிய இந்த ஓவியம் மக்கட்கலை ஊடகங்களில் அடிக்கடி இடம்பெறுகிறது.[1]

ஓவியத்தின் விவரிப்பு

தொகு

மெதுவாக உருகி வழிகின்ற சட்டப்பைக் கடிகாரம் (pocket watch) இந்த ஓவியத்தில் மைய இடம் பெறுகிறது. இந்த ஓவியம் அடிமன வெளிப்பாட்டியம் (Surrealism) என்ற பெயரில் 1930களில் ஐரோப்பாவில் எழுந்த புரட்சி இயக்கத்தின் ஒரு சான்றாக உள்ளது.[2]

மென்மை, கடுமை என்னும் இரு பண்புகளும் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும்போது என்ன நிகழும் என தாலீ இந்த ஓவியத்தில் காட்ட விழைகிறார். பிரபஞ்சத்தில் நிலையான ஒழுங்கு உண்டு என்று நினைக்கின்ற மனது "கடுமை"யைக் குறிக்கிறது என்று கொண்டால், அந்த ஒழுங்கு உருகி இளகுவது "மென்மை"யைக் குறிக்கிறது. காலம், இடம் இரண்டுமே நெகிழ்ச்சி கொண்டவை என்பது அடிமன அனுபவம்.

அந்த அனுபவம் ஓவியமாக தாலீயின் கைகளில் உருவெடுக்கிறது என்பது ஒரு விளக்கம்.[3]

இருப்பினும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொதுச் சார்புக் கோட்பாடு என்ற பெயரில் வெளியிட்ட இயற்பியல் கொள்கையை சால்வதோர் தாலீ ஓவியமாக்கினாரா என்ற கேள்விக்கு ஓவியர்தாமே அளித்த பதில்: "சூரிய வெப்பத்தில் மென் பாலடைக்கட்டி உருகுவதுதான் கடிகாரம் உருகுவதாகக் காட்டும் இந்த ஓவியத்துக்கு அடிமன விளக்கம் என்னும் அடிப்படையாக அமைந்தது."[4]

சிக்மண்ட் பிராய்ட் என்னும் உளநிலைப் பகுப்பாய்வு அறிஞர் எடுத்துரைத்த அடிமனக் கொள்கை சால்வதோர் தாலீயின் ஓவியத்தின் அடிப்படையாக உள்ளது. 1945இல் சப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீச்சு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தாலீ இந்த ஓவியப் பாணிக்கு மெருகூட்டினார்.

ஓவியத்தில் காணும் பொருள்களும் அவற்றின் விளக்கமும்

தொகு

கனவு நிலையில், காலமும் இடமும் தாண்டிய விதத்தில், ஓவியத்தின் நடுப்பகுதியில் ஒரு மனித உரு உள்ளது. அது விசித்திரமான முறையில் முகங்குப்புற புழுதியில் விழுந்துகிடக்கிறது. இந்த உருக்குலைந்த மனித உருவை தாலீ தாம் வரைந்த பல ஓவியங்களில் சேர்த்துள்ளார். அது மனிதரைப் பொதுவாகவும், தம்மைக் குறிப்பாகவும் சுட்டுவதாக அவரே விளக்கியுள்ளார்.

ஓவியத்தின் பின்புலத்தில் ஒரு மலைத்தொடர் உள்ளது. அது மட்டுமே "நிலை"யாக உள்ளது. பிற பொருள்கள் நெகிழ்ச்சியுற்றும், வழிந்து சென்றும், உருக்குலைந்தும் தோற்றமளிக்கின்றன. மனித அடிமனத்தில் காலமும் இடமும் வேறுபாடு இன்றி ஒன்றோடொன்று தொடுகின்றன. காலமே உருக்குலைந்து போகிறது. மரக்கிளையில் பச்சை இல்லை, மாறாக அது பட்டுப்போய் காலத்தைச் சுமந்து, சாவு தவிர்க்க இயலாது என உணர்த்துகிறது.

ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சட்டைப்பைக் கடிகாரம் உள்ளது. அது அழுகியதுபோலவும், அதன் மேல் எறும்புகள் ஊர்வதுபோலவும் ஓவியம் காட்டுகிறது. காலம் என்பது நிலையற்றது என்னும் கருத்து ஆங்கே துலங்குகிறது. எறும்புகளைச் சாவுக்கும் பிறப்பைக் காட்டும் பெண்குறிக்கும் அடையாளமாகச் சித்தரிப்பது தாலீயின் பாணி ஆகும்.

கனவு நிலையிலும் அடிமன நிலையிலும் எதார்த்தம் என்பது உறுதியாக நிலைகொள்ளாமல் இளகுநிலையில் உள்ளதை ஓவியத்தின் நடுவிலுள்ள மனித உரு காட்டுகிறது. அந்த முகப்பகுதியில் ஒரு கண் மூடியிருக்கிறது. கண்ணின் இமையில் முடிவரிசை அடர்த்தியாக உள்ளது. அந்த மனித உருவும் கனவு நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த ஓவியமே சால்வதோர் தாலீ அனுபவித்த ஒரு கனவின் சித்திரமாக இருக்கலாம். கனவு காணும்போது காலம் கடந்துசெல்வது எப்படித் தெரிகிறது என்பதன் சித்திரமாகவும் இருக்கலாம்.

நினைவு என்பது காலத்தின் நீட்சி என்று கொண்டால், அந்த நினைவு நிலையாக இருப்பதில்லை, மாறாக நெகிழ்ச்சியோடு நீள்கிறது. எனவே "நீங்கா நினைவு" கனவிலும் கனவிலி நிலையிலும் நீடிக்கிறது. [5]

ஓவியத்தின் நிலப்பகுதி

தொகு

எசுப்பானியா நாட்டின் கத்தலோனியா பிரதேசத்தில் உள்ள க்ரூசு முனை (Cap de Creus) என்னும் இடத்தில் அமைந்த பாறைத் தொகுப்புதான் தாலீயில் ஓவியத்தில் பின்னணியாக, வலது மேற்புறத்தில் காட்டப்படுகிறது. தாலீ தாம் பிறந்து வளர்ந்த கத்தலோனியா நிலப்பகுதியைத் தம் ஓவியங்களில் காட்டுவது வழக்கம். ஓவியத்தின் முன்னணியில் இருள்போலப் படர்ந்து கருமையாகத் தோற்றமளிப்பது பானி என்னும் மலையின் தோற்றம் ஆகும்.[6]

ஓவியத்தின் பிற பதிப்புகள்

தொகு

தாலீ இந்த ஓவியத்தின் கருத்தைத் தழுவி வேறு படைப்புகளையும் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கிய ஓர் ஓவியம் "நீங்கா நினைவு கலைதல்" ( The Disintegration of the Persistence of Memory) என்னும் 1954 ஆண்டு சித்திரம் ஆகும்.

அந்த ஓவியத்தில் "நீங்கா நினைவு" ஓவியத்தில் காணும் பொருள்கள் சிதைவதாகவும், அவற்றிற்குக் கீழே அடிமன நிலையில் சதுரப் படிகங்கள் வைக்கப்பட்டு அப்படிகங்களின் இடை வழியே நோக்கும்போது அடிமட்டத்தில் வேறு பொருள்கள் தோன்றுவதாகவும் சித்திரம் உள்ளது. இதிலும் அடிமன வெளிப்பாட்டுக் கொள்கை தெரிகிறது. அந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரக் காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது.

கல்படிம முறையிலும் கல்லோவிய முறையிலும் தாலீ "நீங்கா நினைவு" ஓவியத்தில் உள்ள சட்டைப்பைக் கடிகார நெகிழ்ச்சி உருவகத்திற்கு உருக்கொடுத்து, படைப்புகளை ஆக்கியுள்ளார். அவை "நீங்கா நினைவு கல்லோவியம்" (Persistence of Memory), "காலத்தின் மேன்மை" (Nobility of Time), "காலத்தின் முகத்தோற்றம்" (Profile of Time), "நடனமாடும் மூன்று கடிகாரங்கள்" (Three Dancing Watches) என்பவை ஆகும்.[7]

குறிப்புகள்

தொகு
  1. Staff editor (28 January 1989). "Dali, The Flamboyant Surrealist". The Vindicator. http://news.google.com/newspapers?id=Z2lcAAAAIBAJ&sjid=tVYNAAAAIBAJ&dq=dal%C3%AD%20melting%20watch&pg=4025%2C4123936. பார்த்த நாள்: 20 June 2011. "The death of Salvador Dali evokes the image of his most famous painting, 'Persistence of Memory.'" 
  2. Bradbury, Kirsten (1999). Essential Dalí. Dempsey Parr. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84084-509-9. It includes the first appearance of what is perhaps his most enduring image: the 'soft watch'.
  3. Ades, Dawn. Dalí. Thames and Hudson, 1982.
  4. Salvador Dali.The Dali Dimension: Decoding the Mind of a Genius(DVD).Media 3.14-TVC-FGSD-IRL-AVRO."Surprisingly, Dalí said that his soft watches were not inspired by the theory of relativity, but by the surrealist perception of a Camembert cheese melting in the sun. The painter insisted on this explanation in his reply letter to Prigogine, who took it as Dalí's reaction to Einstein's coldly mathematical theory."
  5. "Dali's dream environments were represented through the exactitude of realist painting techniques, like those found in his Persistence of Memory (1931)." Surrealism and architecture, by Thomas Mical; Psychology Press, 2005
  6. Salvador Dali. Surreal years. Art, paintings, and works. Commentary on 40+ works of art by Salvador Dalí.
  7. "Dalis Sculpture Editions". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-11-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீங்கா_நினைவு&oldid=3583295" இலிருந்து மீள்விக்கப்பட்டது