நீரணி மாடம்
நீரணி மாடம் என்பது சங்ககாலத் தமிழக மக்கள் பயன்படுத்திய உல்லாசப் படகு ஆகும். இதைத் தானக மாடம், பள்ளி ஓடம் என்றும் அழைப்பர்.[1][2][3]
அமைப்பு
தொகுஇப்படகு நடுப்பகுதியில் மிகவும் அகன்று இருக்கும். இதன் பின்பக்கம் முன்பக்கத்தை விட உயர்ந்து காணப்படும். அகன்ற நடுப்பகுதியில் ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்போ ஒரு சிறு குடிலோ இருக்கும். சில நீரணி மாடங்களில் மேல் நிலாவின் அழகைக் கண்டு இரசிக்க நிலா முற்றமும் அமைக்கப்பட்டிருந்தது. வாழைத் தண்டுகளை வேண்டும் இடம் எல்லாம் ஊன்றி நாசியும் கபோதமும் ஆகிய மாட உறுப்புகளையும் தோற்றுவித்து இருந்தனர். ஒவ்வொரு தளமும் எட்டுகோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இதைப் போன்று ஏழு தளங்கள் அமைந்த நீரணி மாடமும் இருந்தது.[4]
புனல் விளையாட்டில் நீரணி மாடம்
தொகுஇப்படகு பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் நடந்த புனல் விளையாட்டுகளில் பயன்பட்டது.[5] இப்புனல் விளையாட்டில் நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் போன்றவை அடங்கும்.[6]
அலங்காரம்
தொகுநீரணி மாடம் என்பது ஒரு உல்லாசப் படகு என்பதால் அதில் அலங்கார வேலைப்பாடுகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. அவற்றில் பின்வரும் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.[7][8]
- பனை மட்டைகளையும் சிறு மூங்கில்களையும் கமுகு இலைகளையும் கொண்டு மாடம் அமைக்கப்பட்டிருந்தது.
- நெட்டி மயிலின் பீலி போன்றவற்றைக் கொண்டு மட்டைகளும் மூங்கில்களும் இலைகளும் இணைக்கப்பட்டன.
- வெள்ளை மயிலின் தோகையும் மான்கண், முத்து, பொன் போன்றவற்றால் ஆன சாரளங்களால் தூண்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- அவை மேலும் ஒளிவீசித் திகழும் பொருட்டுப் பொன்னிற ஓவியங்களைத் தீட்டிவைத்தும் இருந்தனர். அந்த ஓவியங்கள் பலகைகளைச் அழகுற அமைத்து வண்ணம் தீட்டிய நுண்ணிய நூலானாலும் கூட வரையப்பட்டிருந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ நீரணி மாட வாவி - சீவகசிந்தாமணி - 2654
- ↑ நிறைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு - பெருங்கதை 1:38:75
- ↑ தானக மாடமொடு தலைமணந் தோங்கிய - பெருங்கதை 1:38:81
- ↑ அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக் கட்டளை நாசியொடு கபோதங் காட்டி எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி ஏரணி யமைந்த வெழுநில நல்வினை நீரணி மாடத்து நிலாநெடு முற்றதநீரணி மாடத்து நிலா முற்றத்து - பெருங்கதை 1:40:01 - 17
- ↑ நீரணி காண்போர் நிறைமாடம் ஊர்குவோர் பேரணி நிற்போர் பெரும்பூசல் தாக்குவோர் - பரிபாடல் 10:27,28
- ↑ கார் அணி பூம்பொழில் காவிரிப்பேர் யாற்று நீரணி மாடத்து நெடுந்துறை போகி மாதரும் கணவரும் மாதவத் தாட்டியும் - சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை 214 - 218
- ↑ அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும் வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் கட்டளை யானையு மத்தக வுவாவும் வையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப் பூத்தூர் நிலையோ டியாப்புற வமைத்துக் காமர் பலகை கதழவைத் தியற்றி வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ மென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி அரிச்சா லேகமு நாசியு முகடும் விருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம் நேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம் சேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த - பெருங்கதை
- ↑ பனையும் வெதிரும் பாசிலைக் கமுகும் இனையன பிறவும் புனைவனர் நாட்டிக் கிடையும் பீலியு மிடைவரித் தழுத்தி மிடைவெண் டுகிலி னிடைநிலங் கோலி அரிச்சா லேகமு மார வள்ளியும் கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக் கட்டளை நாசியொடு கபோதங் காட்டி எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி ஏரணி யமைந்த வெழுநில நல்வினை நீரணி மாடத்து நிலாநெடு முற்றத்து - பெருங்கதை