நீலப்புட்டி வேதிவினை
நீலப்புட்டி வேதிவினை (Blue bottle experiment ) என்பது ஒரு வகையான வேதியியல் செயல்விளக்கச் சோதனையாகும். குளுக்கோஸ், சோடியம் ஐதராக்சைடு, மெத்திலீன் நீலநிறமி மற்றும் சிறிதளவு காற்று கரைந்துள்ள நீர்மக் கரைசல் ஒரு மூடிய புட்டிக்குள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குடுவையை அசைத்துக் கலக்கும் பொழுது நீலநிறமாக மாறும் கரைசல் சிறிது நேரத்திற்குப்பின் நிறமற்ற கரைசலாக மாறிவிடுகிறது. மறுபடியும் இவ்வாறு குடுவையை அசைத்து அசைத்துக் கலக்கினால் நீலநிறம் தோன்றுவதும் மறைவதும் தொடர்கிறது. ஆய்வகச் சோதனைகள் செய்துகற்க இந்தச்சோதனை ஒரு உன்னதமான வேதியியல் பரிசோதனையாகும்[1]. குளுக்கோசைத் தவிர மற்ற குறைக்கும் சர்க்கரைகள் மற்றும் குறைக்கும் சாயங்களை இச்சோதனைக்குப் பயன்படுத்த முடியும்.
உன்னதமான இவ்வேதிவினையில் ஈடுபடும் கரைசலில் குளுக்கோஸ், சோடியம் ஐதராக்சைடு, மெத்திலீன் நீலநிறமி மற்றும் சிறிதளவு காற்று ஆகியவை கரைந்துள்ளன. முதல்படி நிலையில் குளுக்கோஸ் சோடியம் ஐதராக்சைடு காரத்துடன் வினைபுரிந்து ஈனொலேட்டு அயனி உருவாகிறது. அடுத்த இரண்டாவது நிலையில் ஈனொலேட்டு அயனி மெத்திலீன் நீலநிறமியுடன் ஆக்சிசனேற்ற ஒடுக்கவினையில் ஈடுபடுகிறது. குளுக்கோஸ் குளுக்கோனிக் அமிலமாக ஆக்சிசனேற்றம் அடைந்து அந்தக் காரக் கரைசலில் சோடியம் குளுக்கோனேட் வடிவில் காணப்படுகிறது. மெத்திலீன் நீலமானது குறைக்கப்பட்டு நிறமற்ற லியூக்கோ மெத்திலீன் நீலமாக மாறுகிறது. இங்கு போதுமான அளவுக்கு ஆக்சிசன் இருக்கும் பட்சத்தில் லியூக்கோ மெத்திலீன் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மீண்டும் நீலநிறம் தோன்றுகிறது. குடுவையை அசைப்பதன் மூலமாக அங்கு ஆக்சிசனின் அளவை அதிகரிக்க முடிகிறது. அசைவு இல்லா நிலையில் ஆக்சிசனின் அளவு குறைந்து மீண்டும் ஒடுக்கவினை நிகழ்கிறது. குளுக்கோசில் நிகழும் வினை முதல்நிலை வினை வகையாகவும் மெத்திலீன் நீலம் மற்றும் ஐதராக்சைடுகள் ஆக்சிசனில் சுழிநிலை வினை வகையாகவும் நிகழ்கின்றன.
சோடியம் குளுக்கோனேட் தவிர மற்ற ஆக்சிசனேற்ற குளுக்கோஸ் பொருட்கள் குளூக்கோசொன், குளூக்கோனோனேட்டு போன்றவைகளாகும். குளூக்கோனோனேட்டு இறுதியாக குளூக்கோனோனிக் அமிலமாக மாறுகிறது[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ the blue bottle' reaction By Colin Baker Exhibition chemistry @ rsc.org
- ↑ What Is Happening When the Blue Bottle Bleaches: An Investigation of the Methylene Blue-Catalyzed Air Oxidation of Glucose, Laurens Anderson, Stacy M. Wittkopp, Christopher J. Painter, Jessica J. Liegel, Rodney Schreiner, Jerry A. Bell, and Bassam Z. Shakhashiri Journal of Chemical Education 2012 89 (11), 1425-1431 எஆசு:10.1021/ed200511d
வெளிப்புற இணைப்புகள்
தொகு.