நுனித் தொடுப்பு
நுனித் தொடுப்பு என்பது இரண்டு கயிறுகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் எளிமையான தொடுப்பு முடிச்சு ஆகும். ஒருபக்க நுனித் தொடுப்பு, ஐரோப்பிய இறப்பு முடிச்சு போன்ற பெயர்களாலும் இம் முடிச்சு அழைக்கப்படுகிறது. முடிச்சு கயிறுகளின் திசையில் அல்லாமல் ஒரு பக்கமாக விலகி இருப்பதால் "ஒரு பக்க நுனித் தொடுப்பு" என்னும் பெயரும், ஐரோப்பாவில் மலையேறும் முயற்சிகளில் இம் முடிச்சு காரணமாக ஏற்பட்ட தீநேர்ச்சிகளைக் குறித்து "ஐரோப்பிய இறப்பு முடிச்சு" என்னும் பெயரும் ஏற்பட்டது.[1][2][3]
நுனித் தொடுப்பு | |
---|---|
பெயர்கள் | நுனித் தொடுப்பு, ஐரோப்பிய இறப்பு முடிச்சு, ஒருபக்க நுனித் தொடுப்பு, பெருவிரல் முடிச்சு, திறந்தகை முடிச்சு |
வகை | தொடுப்பு |
தொடர்பு | நுனி முடிச்சு, நீர் முடிச்சு |
பொதுப் பயன்பாடு | மலையேற்றம், பாறையிறக்கம். |
ABoK |
|
முடியும் முறை
தொகு1. இரண்டு கயிறுகளினதும் ஒவ்வொரு முனைகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கவேண்டும்.
2. இரண்டையும் சேர்த்து ஒரு தடம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
3. இரண்டு செயல்முனைகளையும் ஒருங்கே சேர்த்துத் தடத்தினூடாகச் செலுத்த வேண்டும்.
4. செயல்முனைகளையும், நிலைமுனைகளையும் இழுத்து இறுக்கிக்கொள்ள வேண்டும்.
கயிறுகள் வெவ்வேறு அளவான விட்டங்கள் கொண்டவையாக இருந்தால், மெல்லிய அல்லது இழுபடக்கூடிய கயிறு படத்தில் காட்டிய பச்சைக் கயிறு இருக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு பாதுகாப்பு நுனி முடிச்சையும் இந்தக் கயிற்றைக்கொண்டே முடியவேண்டும்.
பயன்கள்
தொகுமலையேறுவோர் செங்குத்தான பாறைகளில் இறங்கும் முயற்சிகளின்போது இதனைப் பயன்படுத்துவது உண்டு. இறங்கவேண்டிய தூரம் வழமையான 50-60 மீட்டர் கயிறுகளின் நீளத்திலும் அதிகமாகும்போது கயிறுகளைத் தொடுப்பதற்கு இந்தத் தொடுப்பைப் பயன்படுத்துவர். இந்த முடிச்சின் பெரும்பகுதி கயிற்றுக்கு வெளியில் இருப்பதால், கயிறு இலகுவாக மலைச் சரிவுகளில் வழுக்குவதற்கு உதவியாக உள்ளது. அத்துடன் இம் முடிச்சின் அளவு சிறியதாக உள்ளதால், கயிற்றை இழுத்து எடுக்கும்போது பாறை இடுக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். மேற்படி காரணங்களும் இத் தொடுப்பை இலகுவாக முடியத்தக்கதாக இருப்பதும் மலையேறுவோர் இதனைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Gommers, Mark (2017-12-24). "Analysis of Offset Overhand Bends". Professional Association of Climbing Instructors Pty. Ltd (1.6a ed.). பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.
The persistent use of the term 'flat' or 'one-sided' is incorrect and it is hoped that this paper will assist in correcting the nomenclature.
- ↑ van der Kleij, Gerre (1996), "On Knots and Swamps", in Turner, J.C.; van de Griend, P. (eds.), History and Science of Knots, K&E Series on Knots and Everything, vol. 11, Singapore: World Scientific Publishing, pp. 34–35, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-02-2469-9
- ↑ Ashley, Clifford W. (1944), The Ashley Book of Knots, New York: Doubleday, p. 45
வெளி இணைப்புகள்
தொகு- ஐரோப்பிய இறப்பு முடிச்சுக்கள் பற்றிய கட்டுரை (ஆங்கில மொழியில்)
- ஐரோப்பிய இறப்பு முடிச்சுக்கள் சோதனை முடிவுகள் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்