நைட்ரைட்டு சோதனை

நைட்ரைட்டு சோதனை (Nitrite test) என்பது ஒரு கரைசலில்  நைட்ரைட்டு அயனியின் இருப்பினைச் சோதித்தறிய உதவும் ஒரு வேதிச்சோதனை ஆகும்.

வேதியியல் முறை

தொகு

பொதுவான நைட்ரைட்டுக்கான சோதனையில் 4 M கந்தக அமிலமானது பரிசோதிக்க வேண்டிய மாதிரியுடன் அது அமிலத்தன்மை பெறும் வரை சேர்க்கப்படுகிறது. அதன் பிறகு 0.1 M இரும்பு(II) சல்பேட்டு கரைசலுடன் சேர்க்கப்படுகிறது. கரைசல் அடர் பழுப்பு நிறத்தைப் பெறுதல் நைட்ரைட்டு அயனியின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. இரும்பு-நைட்ரிக் ஆக்சைடு அணைவு அயனி உருவாதலே இந்த நிற மாற்றத்திற்கான காரணமாக உள்ளது.[1]

சிறுநீர் நைட்ரைட்டு சோதனை

தொகு

சிறுநீர் தொடர்பான சோதனைத் தொகுப்பில் இதுவும் ஒன்றாகும். சிறுநீரில் நைட்ரைட்டின் இருப்பு இருந்தால் அது நைட்ரிடூரியா என அழைக்கப்படுகிறது.

இந்த சோதனையானது, பொதுவாக சிறுநீர்த் தடத் தொற்று ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது. சிறுநீர் நைட்ரைட்டு சோதனையில், நைட்ரைட்டின் இருப்பு உறுதிப்படுத்தப்படும் செயலானது, கிராம்-எதிர் பாக்டீரியா என்ற உயிரினம் (பொதுவாக எசரிக்கியா கோலை) சிறுநீர்த் தடத் தொற்றுக்கான காரணமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.  இயற்கையாக மனித உடலுக்குள் காணப்படுகின்ற நைட்ரேட்டுகளை பாக்டீரியாக்களின் செயலானது நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன. ஆக, பாக்டீரியாக்களின் இருப்பே நைட்ரைட்டுகள் தோன்றக் காரணமாயுள்ளது. நைட்ரைட்டின் இருப்பானது, பாக்டீரியாவின் இருப்பையும், அதன் காரணமாக சிறுநீர்த் தடத் தொற்றினையும் கண்டறிய உதவுகிறது. இருப்பினும், லியூக்கோசைட் எஸ்டரேசு, சிறுநீரில் வெள்ளை இரத்த அணுக்கள் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுதல், காய்ச்சல், வலியுடன் கூடிய சிறுநீர் இறக்கம் போன்ற வேறு சில காரணிகளும் சிறுநீர்த் தடத் தொற்றினைக் கண்டறியும் போது இச்சோதனையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டும்.

சிறுநீர்த் தடத் தொற்றுக்கான  நைட்ரைட்டு சோதனைகள் சில நேரங்களில் பொய்த்துப் போவதற்கு கிருமித் தொற்றுகள் குழுச் சேராத, புதிதாகச் சேகரமான சிறுநீர் அல்லது நீர்த்த சிறுநீர் இவை கூடக் காரணமாக அமையலாம்.[2] மேலும், நைட்ரேட்டை நைட்ரைட்டாக மாற்ற இயலாத நுண்ணுயிரிகளான எண்டெரோகாக்கை, இசுடபைலோகாக்கை, அசினிடோபாக்டர் அல்லது அடினோவைரசு ஆகியவை இருப்பினும் நைட்ரைட்டு சோதனையானது சிறுநீர்த் தடத் தொற்றினைக் கண்டறிவதில் தோற்றுப்போகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Holltzclaw, H.; Robinson, W. (1988), "College Chemistry with qualitative analysis", Edition, D. C. Heath and Company:Lexington, MA, 8: 1006
  2. Urinary Tract Infection: Providing the Best Care.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரைட்டு_சோதனை&oldid=2749090" இலிருந்து மீள்விக்கப்பட்டது