நோட்டியம் சமர்
நோட்டியம் சமர் அல்லது எபேசஸ் சமர் ( Battle of Notium or Battle of Ephesus) என்பது கிமு 406 இல் பெலோபொன்னேசியப் போரில் எசுபார்த்தன் கடற்படை ஈட்டிய வெற்றியாகும். போருக்கு முன், ஏதெனியன் தளபதி ஆல்சிபியாடீசு தன் படையின் பெரும்பகுதியை நோட்டியம் துறைமுகத்தில் தன் உதவிப் படைத் தளபதியான அந்தியோக்கசின் தலைமையில் இருக்கவைத்து, எவ்விதத்திலும் போர்களில் தலையிடக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டார். பின்னர் ஒரு சிறுபடையுடன் போசியா என்ற இடத்துக்குச் சென்றார். ஆனால் அவரது கட்டளைகளை மீறி, அந்தியோகஸ் எசுபார்த்தன்களை ஒரு சிறிய ஏமாற்றுப் படை மூலம் தூண்டிவிட்டு போருக்கு இழுக்க முயன்றார். அப்போது நடந்த போரில் எசுபார்த்தன் தளபதி லைசாந்தரின் தலைமையிலான படைகள் ஏதெனியன் கடற்படையின் மீது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. இந்த எசுபார்த்தன் வெற்றி ஏதெனிய தளபதி ஆல்சிபியாட்சின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, மேலும் கடலில் ஏதெனியர்களை தோற்கடிக்கக்கூடிய ஒரு தளபதியாக லைசாந்தர் தன்னை நிரூபித்துக்கொண்டார்.
நோட்டியம் சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெலோபொன்னேசியன் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
எசுபார்த்தா | ஏதென்ஸ் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
லைசாந்தர் | Antiochus † | ||||||
பலம் | |||||||
90 கப்பல்கள் | 80 கப்பல்கள் | ||||||
இழப்புகள் | |||||||
உயிர்ச்சேதம் இல்லை | 22 கப்பல்கள்
(15 கைப்பற்றப்பட்டன, 7 மூழ்கடிக்கபட்டன) |
||||||
முன்னுரை
தொகுகிமு 407 இல், இறந்த மைண்டாரசுக்குப் பதிலாக எசுபார்த்தன் கடற்படையின் தளபதியாக லைசாந்தர் நியமிக்கப்பட்டார். அவர் ஒரு கடற்படையைத் திரட்டி எசுபார்த்தாலிருந்து ஏஜியன் கடல் வழியாக கிழக்கு நோக்கிப் பயணம் செய்து, இறுதியில் எபேச்சை அடைந்தார். அங்கு அவர் 70 கப்பல்களுடன் ஒரு தளத்தை நிறுவினார். மேலும் அவர் எபேச்சில் கப்பல் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதன்வழியாக கப்பல்களின் எண்ணிக்கையை 90 ஆக உயர்த்தினார். எபேச்சில், அவர் பாரசீக இளவரசர் சைரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். லைசாந்தர் சைரசுடன் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டார். மேலும் எசுபார்த்தன் படகோட்டிகளின் ஊதியத்தை ஒரு நாளைக்கு 3ல் இருந்து 4 ஓபோல்களாக [1] அதிகரிக்க இளவரசர் தனது சொந்த பணத்தை நிதியாக வழங்க ஒப்புக்கொண்டார். இந்த கூடுதல் சம்பளம் மூலம், எசுபார்த்தன் கடற்படை ஏதெனியன் கடற்படையில் இருந்து அனுபவம் வாய்ந்த படகோட்டிகளை ஈர்த்தது.
ஏதெனிய கடற்படை தளபதி ஆல்சிபியாட்சுக்கு, லைசாந்தருடன் போர் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் தனது கடற்படையை நோட்டியத்திற்கு செலுத்தி வந்தடைந்தார். அங்கு இருந்து அவர் கடலில் எசுபார்த்தன் கடற்படையை உன்னிப்பாகக் கவனிக்க முடிந்தது. இருப்பினும், நோட்டியத்தில் காத்திருந்தும், லைசாந்தரை சண்டைக்காக வெளியே கொண்டு வர முடியவில்லை. அதனால், அல்சிபியாட்ஸ் போசியாவின் முற்றுகையில் திராசிபுலசுக்கு உதவ கொஞ்சம் துருப்புக்களுடன் வடக்கே பயணம் செய்தார். தன் கடற்படையின் பெரும்பகுதிக்கு அல்சிபியாடெசின் கைபர்னெட்ஸ் அல்லது ஹெல்ம்ஸ்மேன் தலைமையின் கீழ் வைத்துவிட்டு புறப்பட்டார். இந்த அளவிலான ஒரு கடற்படை (அல்சிபியாட்ஸ் புறப்பட்ட பிறகு நோட்டியத்தில் 80 கப்பல்கள் இருந்தன) பாரம்பரியமாக பல தளபதிகளின் கட்டளையிடப்பட்டிருக்கும், அல்லது குறைந்தபட்சம் ஒரு போர்க்கலத் தலைவரின் தலைமையில் இருக்கும்; அல்சிபியாட்சின் வழக்கத்திற்கு மாறான இந்த முடிவு பண்டைய மற்றும் நவீன எழுத்தாளர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. [2] அந்தியோகஸ் புறப்படும்போது தனது துணைத் தளபதியிடம் "லைசாந்தரின் கப்பல்களைத் தாக்காதே." என்று கட்டளை இட்டுச் சென்றார். [3] ஆனால் சில காரணங்களால், உதவிப் படைத் தளபதியான அந்தியோக்கசின் இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று முடிவு செய்தார். மேலும் ஏதெனியர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று அவர் நினைத்த ஒரு தந்திர செயலை செயல்படுத்த முயன்றார்.
சமர்
தொகுஎசுபார்த்தன்களை சண்டைக்கு இழுக்க முயன்ற, அந்தியோகஸ் 10 கப்பல்களுடன் எபேசஸ் நோக்கிப் பயணம் மேற்கொண்டார். [4] அவரது சிறிய கடற் படையை விரட்டி பின்தொடர்ந்து வருமாறு பெலோபொன்னேசியர்களை தூண்டி வெளியே இழுப்பது அவரது திட்டமாக இருந்தது. அவ்வாறு வெளியேவரும் எசுபார்த்தன் படைகளை பதுங்கி உள்ள ஏதெனியப் படை தாக்கும் திட்டம் இருந்தது. இந்த திட்டம் சிசிகஸ் சமரில் அதிர்ச்சியூட்டக்கூடியதாக ஏதெனியன் வெற்றியை மிகவும் ஒத்ததாக இருந்தது. ஆனால் நோட்டியமில் இருந்த நிலையானது அந்த போரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. [2] போர்திட்டத்தை நடைமுறைபடுத்தியபோது, எசுபார்த்தன்களின் தாக்குதலால் அந்தியோகசின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அதனால் அவர் கொல்லப்பட்டார். ஏதெனியப் படையில் மீதமுள்ள ஒன்பது கப்பல்கள் எசுபார்த்தன் படைகள் விரட்டிவர அவை நோட்டியம் நோக்கி விரைந்து செலுத்தப்பட்டன. அங்கு முழு எசுபார்த்தன் கடற்படையும் திடீரென்று வந்ததால் முதன்மை ஏதெனியன் படை போருக்கு தயாராக இல்லாமையால் பிடிபட்டது. தொடர்ந்து நடந்த சண்டையில், 15 ஏதெனியன் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன, ஏழு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. எதிர்பாராத வெற்றியைப் பெற்ற எசுபார்த்தன்கள் மீண்டும் எபேச்சுக்குச் சென்றனர். அதே நேரத்தில் ஏதெனியர்கள் மீண்டும் ஒரு குழுவாக நோட்டியத்திற்குத் திரும்பினர்.
பின்விளைவு
தொகுபோரைப் பற்றிய செய்தி கிடைத்ததும், ஆல்சிபியாட்ஸ் போசியாவின் முற்றுகையிலிருந்து நீங்கி தெற்கே திரும்பி நோட்டியத்தில் கடற்படையை வலுப்படுத்தினார். இதனால் இரண்டு கடற்படைகளுக்கு இடையே தோராயமான எண்ணிக்கை சமநிலையை மீட்டெடுக்கபட்டது. லைசாந்தரை போருக்கு இழுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இருப்பினும், இரண்டு கடற்படைகளும் கடலில் ஒருவரையொருவர் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.
நோட்டியத்தில் ஏற்பட்ட தோல்வி ஏதெனிய அரசியலில் ஆல்சிபியாட்சின் செல்வாக்கில் முழுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. சிசிகஸ் வெற்றிக்குப் பிறகு தனக்கான ஆதரவை மீட்டெடுத்த அவர், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தலைமை தளபதியாக நியமிக்கபட்டிருந்தார். ஆனால் இந்தத் தோல்வியினால் இவர் எதற்காக அந்தியோகசின் பொறுப்பில் கடற்படையை ஒப்புவித்து சென்றார் என்ற கேள்வி எழுப்பினர். அவரது அரசியல் எதிரிகள் இந்தத் தோல்வியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவரை பதவியில் இருந்து நீக்கினர். பதவியில் இருந்து விலக்கப்படது தெரிந்ததும் மீண்டும் ஏதென்சுக்குத் திரும்பாத அவர், திரேசியன் செர்சோனீசில் தனக்குச் சொந்தமான நிலத்திற்கு வடக்கே பயணம் செய்தார்; ஈகோஸ்ப்பொட்டாமியில் ஒரு ஆலோசனை சொல்லவந்ததைத் தவிர, போரில் அவரது ஈடுபாடு முடிந்தது.