நோய்ப்பரவலியல்

நோய்ப் பரவல் இயல் (Epidemiology) என்பது எந்த ஒரு மக்கள் தொகுதியிலும் எக்காரணங்களால் எங்கெங்கு, எப்படி எப்படி ஒரு நோய் பரவுகின்றது என்று முறைப்படி அறியும் ஓர் இயல் ஆகும். இதன் அடிப்படையில் அறிவான முறைப்படி நோய் பரவாமல் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், வரும்முன் காப்பதற்கும் வழிகள் அமைக்க இயலுகின்றது. உண்மையான காட்டுகளின் (நிகழ் சாட்சிகளின்) அடிப்படையில் நிறுவும் மருத்துவ முறைகளுக்கு இது இன்றியமையாத அறிவுத்துறையாகும்.

நோய்ப் பரவல் இயலாளர்கள் தொற்றுநோய் பரவலுக்கும், கொள்ளைநோய் (திடீர் என்று மிக விரைந்து பரவும் காலரா போன்ற கொடிய நோய்) தோன்றி பரவுவதற்கும், தொற்று இல்லா நோய்களின் வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படையான செய்திகளை, முறைப்படி தேர்ந்து தொகுத்து, ஆய்வார்கள். இந்த ஆய்வாளர்கள் அணியில், உயிரியல், புள்ளியியல், உயிர்வேதியல் துறை அறிஞர்கள் இருக்ககூடும்.

கலைச்சொல் வரலாறு தொகு

நோய் பரவல் இயல் என்பது ஆங்கிலத்தில் எப்பிடீமியாலஜி (Epidemiology) என்று கூறப்படுகின்றது. இச்சொல் மூன்று கிரேக்க சொற்களில் இருந்து ஆக்கப்பட்டது. எப்பி + ‘டெமோஸ்+ லோகோஸ் = எப்பிடீமியாலஜி. இதில் எப்பி = மேல் (epi = upon, among), ‘டெமோஸ் = மக்கள், தொகுதி (demos = people, district); லோகோஸ் = இயல், கற்கும் துறை, கல்வித்துறை (logos = study, word, discourse)

நோய்ப் பரவல் இயல் வரலாறு தொகு

பழங்காலத்து கிரேக்க மருத்துவர் ஹிப்போக்ராட்டஸ் (Hippocrates) என்பவர்தான் நோய்ப் பரவையலுக்குக் தந்தை என்று கூறுகிறார்கள். இவரே சுற்றுச் சூழல் நிலைக்கும் ஒரு நோய் தோன்றுவதற்கும் உள்ள தொடர்பை முதன்முதல் கண்டு கூறியவர்.

16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத்தாலியில் உள்ள விரேன்சே (விளாரன்ஸ், Florence) நகரத்தைச் சேர்ந்த கிரோலாமோ விராக்காஸ்ட்டொரோ (Girolamo Fracastoro) என்பவர்தான் நோய் தோன்றுவதற்குக் கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய உயிரிகள்தான் காரணம் என்னும் கருத்தை முதன்முதலாக முன்வைத்தார். இந்த மிக மிக நுண்ணிய உயிரிகள் காற்றால் பரவவும், தானே இனப்பெருக்கம் செய்யவும் கூடும் என்றும், இவற்றை நெருப்பால் அழிக்கமுடியும் என்றும் கருதினார்கள். இப்படிக் கூறிப் பழங்காலத்தில் வாழ்ந்த ‘கேலன் (Galen) என்னும் கிரேக்கரின் கொள்கையான நோயுற்றவர்கள் உடலில் நச்சு வளிமம் உள்ளது (Galen's theory of miasms ) என்னும் கருத்தை முறியடித்தார். 1543ல் கிரோலாமா விரக்காஸ்ட்டொரொ தொற்றுநோய்பற்றி “’டி கொண்டாகியோன் எ கொண்டாகியோசிஸ் மார்பிஸ்” ("De contagione et contagiosis morbis") என்னும் நூலை எழுதினார். அதுவே சுற்றுப்புற மற்றும் தன் தூய்மை பற்றி அக்காலத்தில் வலியுறுத்தி எழுதிய முதல் நூலாகும். இவர் கூறிய மிக மிக நுண்ணிய உயிர் பற்றிய கொள்கையானது 1675ல் அன்ட்டொன் வான் லேவனஃக் (அன் ட்டோன் வான் லேவன்ஹக், Anton van Leeuwenhoek ) நுண்நோக்கியைக் கண்டுபிடிக்கும் வரை நிறுவப்படவில்லை.

துணிமணி தொடர்பான பொருள்களின் சிறுவிற்பனையாளரராக இருந்த ஜான் கிரௌண்ட் (John Graunt) என்பவர் தன்னார்வ அறிவியலலளராக. தான் சேர்த்து வந்த நோய்கள் மற்றும் இறப்புகள் பற்றிய குறிப்பகளையும் அதன் தொடர்பான அந்நாளைய புள்ளியியல் குறிப்புகளையும் 1662ல் Natural and Political Observations ... upon the Bills of Mortality என்னும் தலைப்பில் வெளியிட்டார். அதன்வழி அக்காலத்தில் வழங்கிய பல கருத்துக்களை மறுத்தார்.

1854ல் இங்கிலாந்தில் உள்ள இலண்டன் நகரில் திடீர் என்று தோன்றி பரவிய காலரா என்னும் கொள்ளைநோயை மேலும் பரவாமல் தடுத்ததில் டாக்டர். ஜான் ஸ்னோ என்பவர் புகழ் பெற்றவர். அப்பொழுது காலரா பரவுவதற்கு பிராட்வே என்னும் தெருவில் இருந்த பொது கையடி நீரேற்றி (pump) முக்கிய காரணம் என்று கண்டுபிடித்து அந்த நீரேற்றியின் கைப்பிடியை நீக்கச்செய்தார். இதன் பயனாக காலரா நோய் பரவுவது தடுக்கப்பட்டது இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகின்றது. பொது உடல்நலத் துறை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகின்றது. நோய் பரவல் இயல் அறிவியல் துறையின் துவக்க நிகழ்வாக இது கருதப்படுகின்றது.

 
1854ல் காலரா நோயால் ஏற்பட்ட இறப்புகளையும் பொதுப் பயன்பாட்டுக்காக இருந்த கையடி நீர்க்குழாய் பம்பு இருக்கும் இடங்களையும் குறிப்பிட்டுக் காட்டி ஆங்கிலேய மருத்துவர் டாக்டர் ஜான் ஸ்னோ வரைந்த தரைநிலப் படம். நோய் பரவல் இயல் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர்களில் ஒருவர் டாக்டர் ஸ்னோ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்ப்பரவலியல்&oldid=2916516" இலிருந்து மீள்விக்கப்பட்டது