நோவாவின் பேழை
நோவாவின் பேழை என்பது நோவா, யாவே கடவுளின் கட்டளைப்படி கட்டிய பெரிய ஒரு கப்பலாகும். பெரு வெள்ளப்பெருக்கு ஒன்றிலிலிருந்து நோவாவையும் அவனது குடும்பத்தையும் உலகில் உள்ள விலங்கு இனங்களையும் காக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த சம்பவம் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் நூலில் 6 தொடக்கம் 9 ஆம் அதிகாரங்களில் காணப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், புவியியல், மற்றும் அது சார்ந்த்த துறைகளின் வளர்ச்சி மூலம் ஒரு சில வரலாற்றாய்வாளரால் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஒன்றை நியாயப்படுத்த முடிந்தது. ஆனாலும் பல விவிலிய ஆய்வாளர்கள் நோவாவின் பேழை தரைத்தட்டியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அரராத் மலை[1] (வடகிழக்கு துருக்கி) சார்ந்த பிரதேசங்களில் ஆய்வுகளை தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.
விவிலிய உரை
தொகுவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, கடவுள் மனிதரின் தீய செயல்களைக் கண்டு கோபமுற்றவராக உலகை அழிக்க எண்ணினார். அவர் அம்மனிதரிடையே ஒரே ஒரு நீதிமானாக நோவாவைக் கண்டு, மனித வம்சம் அவர் மூலமாக பூமியில் நிலைக்கும் படியாக, நோவாவைக் காப்பற்ற எண்ணினார். அவர் நோவாவை அழைத்து ஒரு பேழையைச் செய்யச் சொல்லி அதனுள் ,மகன்களான சேம்,ஆம் சாபேத்து என்பவர்களையும் அவர்களின் மனைவியினரையும் உற்பிரவேசிக்க சொன்னார். மேலதிகமாக உலகில் உள்ள எல்லா விலங்குகளிலும் ஒவ்வொரு சோடியையும் விலங்குகளுக்கும் குடும்பத்தாருக்கும் வேண்டிய உணவையும் பேழைக்குள் சேர்க்கச் சொன்னார்.[2]
நோவா கடவுள் கூறியபடியே பேழையைக் கட்டி முடித்த பின்பு அவருடைய குடும்பமும் விலங்குகளும் பேழையுள் சென்றது. ஏழுநாள் சென்றபிறகு, "பாதாளத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன".மழை 40 இரவும் பகலும் மழை தொடர்ந்து பெய்தது. இந்த சம்பவத்துக்கு முன்னதாக பூமியில் மழை பெய்தாக எந்த குறிப்பும் விவிலியத்தில் காணப்படவில்லை. "வானத்தின் மதகுகள்" என்பது ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஆகயத்துக்கு மேல் இருந்த நீர்[3] பூமியை நோக்கி வீழ்ந்ததைக் குறிக்கிறது. வெள்ளம் உலகின் உயர்ந்த மலைகளையும் 20 அடிக்கு மேல் மூடியது. நோவாவையும் அவரோடு பேழையிலிருந்த குடும்பத்தாரையும் விலங்குகளையும் தவிர அனைத்தும் இறந்து போயிற்று.[4]
சுமார் 220 நாட்களுக்குப் பிறகு, பேழை அரராத் மலையில் தங்கிற்று, நீர் மேலும் 40 நாட்களுக்கு வழிந்தோடிய போது மலைச்சிகரங்கள் தென்பட்டது. அப்போது நோவா ஒரு காகத்தை வெளியே விட்டார்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த நீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. பின்பு நோவா, பூமியில் நீர் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டார்.பூமிமீதெங்கும் நீர் இருந்தபடியால், திரும்பிப் பேழையிலே அவரிடத்தில் வந்தது. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டார். அந்தப் புறா சாயங்காலத்தில் அவரிடத்தில் வந்து சேர்ந்தது;அது கொத்திக் கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதன் மூலமாக நோவா பூமியின்மேல் நீர் குறைந்து போயிற்று என்று அறிந்தார். பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவர் புறாவை வெளியே விட்டார்; அது திரும்ப வரவில்லை. அப்பொழுது நோவாவும், அவரின் குமாரரும், அவரின் மனைவியரும், குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டு புறப்பட்டு வந்தார்கள்.பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் இனமினமாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.அப்பொழுது நோவா கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டார். அப்பொழுது கடவுள் இனி நான் மனிதன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல சீவன்களையும் சங்கரிப்பதில்லை என்று நோவாவோடு உடன்படிக்கை பண்ணினார்.[5]
தமது உறுதிமொழியை நினைவுகூறும் வகையில், கடவுள் வானவில்லை முகிலின் மீது வைத்து," பூமிக்கு மேலாக முகில்களைத் தோற்றுவிக்கும் போது இவ்வில் தோன்றும், அப்போது இவ்வுடன்படிக்கையை நினைவுகூறுவேன்" என்றார்.[6]
இவ்வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு விவிலியத்தில் மனிதரின் வயது திடீரெனக குறைந்தது கவனிக்க தக்கதாகும். வெள்ளத்துக்கு முன்னர் மனிதர் சுமார் 900 ஆண்டுகள் வாழ்ந்தாக கூறப்பட்டுள்ளபோதும் வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் மனிதனின் வயது 100 ஆக குறந்தது.
பன்னூல் எடுகோட்பாடும் ஊழிவெள்ளமும்
தொகுபேழையை பற்றிய 87 விவிலிய வசனங்கள் சில சந்தர்ப்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது: "மனிதன் பாவ வழியில் போனான் அவனை அழிக்க வேண்டும், ஆனால் நோவா நீதிமானானபடியாள் அவரை காப்பாற்ற வேண்டும்" என்ற வசனம் ஏன் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது? (ஆதியாகமம்6:5-8,6:11-13) [7] நோவாவுக்கு எத்தனை சோடி விலங்குகள் பேழையில் சேர்க்க கட்டளையிடப்பட்டது, இரண்டு சோடிகளா? அல்லது ஏழு சோடிகளா? [8] மழை எத்தனை நாட்கள் நீடித்தது 40 நாட்களா? 150 நாட்களா? [9] போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை பேழைக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல, மாறாக ஐந்து திருச்சட்ட நூல்களில் உள்ள பல சம்பவங்கள் கேள்விகுட்படுத்தப்பட்டுள்ளன. இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளின் மூலம் முன்வைக்கப்பட்ட கருதுகோள் "பன்னூல் எடுகோட்பாடு " என அழைக்கப்படுகிறது.
இக்கருதுகோளின் பாடி, ஐந்து திருச்சட்ட நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பன கி.மு. ஐந்தாம் நூற்றாணடளவில் நான்கு மூல நூல்களை கொண்டு எழுதப்பட்டவையாகும். பேழையை பற்றிய சம்பவம் இவற்றில் இரண்டான,ஆசாரிய மூலம் (Priestly source) மற்றும் யாவே மூலம் (Jahwist) என்பவற்றை பயன்பாடுத்தி எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்விரண்டு மூலங்களில் முதலாவதான, யாவே மூலம் [10] கி.மு. 920 அளவில் யூத இராச்சியத்தில் எழுதப்பட்டதாகும். யாவே மூலம், ஆசாரிய மூலத்தை விட எளிமையான நடையைக் கொண்டுள்ளது. அதன்படி:கடவுள் 40 நாட்களுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். நோவாவும் அவனது குடும்பத்தாரும், விலங்குகளும் (தூய விலங்குகளில் 7 அல்லது 7 சோடிகள், எபிரேய பதம் குழப்பம்மானது) நோவா பலிப்பீடத்தை கட்டி கடவுளுக்கு தகனப்பலி இடுகிறார். கடவுள் மனிதனை இனி நீரால் அழிப்பதில்லை என உறுதிக்கொள்கிறார். யாவே மூலத்தில் கடவுளுக்கும் நோவாவுக்குமிடையான உடன்படிகைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆசாரிய மூலத்தின் உறை [11] வட இஸ்ரவேல் இராச்சியத்தில் கி.மு.722க்கும் கி.மு. 586 க்குமிடையே எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. ஆசாரிய மூலத்தின் உறை யாவே மூலத்தை விட கூடுதலான தகவல்களை கொண்டிருக்கிறது; உதாரணமாக, பேழையின் பரிமாணங்கள், மேலும் கடவுள் செய்த உடன்படிக்கை என்பவற்றை குறிப்பிடலாம்.
பேழை சம்பவத்தின் அடியான மனிதரின் பொல்லாப்பும், கடவுளின் கோபமும் அதனால் வெள்ளம் மூலம் மக்களை அழித்தல் பின்பு வருந்தி இவ்வாறு இனி செய்யமாட்டேன் என கூறியது போன்றவை யாவே மூலத்தி ஆசிரியர்களுக்குரிய பாணியாகும். இவர்கள் கடவுளை மனிதன் போன்ற இயல்பில் வைத்து நோக்கினார்கள். ஆசாரிய மூலத்தில் கடவுள் ஆசாரியர் (குருக்கள்) மூலமாகவன்றி நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதவராக நோக்கப்படுகிறார்.
அதாரங்கள்
தொகு- ↑ ஆதியாகமம் 8:4
- ↑ ஆதியாகமம் 6:
- ↑ ஆதியாகமம் 1:6-7
- ↑ ஆதியாகமம் 7:
- ↑ ஆதியாகமம் 8:
- ↑ ஆதியாகமம் 9:
- ↑ ஆதியாகமம் 6:5-8, ஆதியாகமம் 6:11-13
- ↑ ஆதியாகமம் 6:19-20 இரண்டு சோடிகளா?, ஆதியாகமம் 7:2-3 ஏழு சோடிகளா?
- ↑ ஆதியாகமம் 7:17 40 நாட்களா?, ஆதியாகமம் 7:24 150 நாட்களா?
- ↑ "யாவே மூலத்தில் வெள்ளப்பெருக்கு (சேம்சு மன்னன் பதிப்பு)". Archived from the original on 2006-11-03. Retrieved 2006-08-05.
- ↑ "ஆசாரிய மூலத்தில் வெள்ளப்பெருக்கு (சேம்சு மன்னன் பதிப்பு)". Archived from the original on 2006-10-16. Retrieved 2006-08-05.