பகுத்தறிவியம்
அறிவாய்வியலிலும் தற்காலப் பொருளிலும் பகுத்தறிவியம் (rationalism) என்பது, பகுத்து அறிதலை, அறிவின் அடிப்படையாக அல்லது நியாயப்படுத்தலுக்கான அடிப்படையாகக் கொள்ளும் ஒரு நோக்கு ஆகும். இன்னொரு வகையில் கூறுவதானால், இது, புலனுணர்வை அன்றி அறிவாற்றலையும் உய்த்துணர்தலையும் உண்மைக்கான அளபுருவாகக் கொள்ளும் ஒரு வழிமுறை அல்லது கோட்பாடு ஆகும். இந்த வழிமுறைக்கு அல்லது கோட்பாட்டுக்குக் கொடுக்கப்படும் வெவ்வேறு அளவிலான அழுத்தம் காரணமாக பலவகையான பகுத்தறிவிய நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவை, அறிவைப் பெற்றுக்கொள்வதற்குப் "பகுத்து அறிவதே பிற வழிமுறைகளிலும் சிறந்தது" எனக்கூறும் மிதமான போக்குடைடைய நிலைப்பாட்டிலிருந்து, அறிவைப் பெறுவதற்குப் "பகுத்து அறிதல் ஒரு தனித்துவமான வழி" எனக்கூறும் தீவிர நிலைப்பாடு வரை வேறுபடுகின்றன.[1][2][3]
பின்னணி
தொகுஅறிவொளிக் காலத்தில் இருந்து பகுத்தறிவியம், மெய்யியலில் கணித வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன் தொடர்புள்ளதாகக் காணப்படுகின்றது. இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு, இசுப்பினோசா போன்றோரை இவ்வாறான அணுகுமுறைகளுக்கு எடுத்துக் காட்டாகக் கொள்லலாம். இது பொதுவாகக் கண்ட ஐரோப்பியப் பகுத்தறிவியம் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில் இது ஐரோப்பாவின் கண்டப் பகுதிகளிலிருந்த சிந்தனைக் குழுக்கள் நடுவிலேயே இது முன்னணிக் கோட்பாடாக இருந்தது. பிரித்தானியாவில், பட்டறிவியக் கோட்பாட்டின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. பகுத்தறிவியம் பெரும்பாலும் பட்டறிவியத்துடன் முரண்பட்டது. பரந்த நோக்கிலிருந்து பார்க்கும்போது இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றையொன்று தவிர்த்து ஒதுக்குவன அல்ல. மெய்யியலாளர் ஒருவர் இரண்டு கோட்பாடுகளையுமே பயன்படுத்துபவராக இருக்க முடியும். தீவிர நிலையில் இருந்து பார்க்கும்போது, பட்டறிவிய நோக்கில், எல்லா எண்ணங்களுமே ஐந்து புலன்களால் ஏற்படுகின்ற அல்லது வலி, மகிழ்ச்சி போன்ற உள்ளுணர்வுகளால் ஏற்படும் பட்டறிவிலிருந்தே உருவாகின்றன. இதனால் அறிவு என்பது பட்டறிவை அடிப்படையாகக் கொண்டது அல்லது பட்டறிவிலிருந்து பெறப்படுகின்றது என்பது பட்டறிவிய வாதம். பிரச்சினை, மனித அறிவின் அடிப்படையான மூலம் சார்ந்ததும், நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பதைச் சரிபார்த்துக் கொள்வதற்கான முறையான நுட்பங்கள் பற்றியதுமாகும்.
சில வகையான பகுத்தறிவியம் சார்ந்தோர், வடிவவியலின் அடிப்படை உண்மைகளைப் போல் பெறத்தக்க அறிவு முழுவதையும் உய்த்தறிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றனர்.
வெளியிணைப்புக்கள்
தொகு- Markie, Peter (2004), "Rationalism vs. Empiricism", Stanford Encyclopedia of Philosophy, Edward N. Zalta (ed.),
- John F. Hurst (1867), History of Rationalism Embracing a Survey of the Present State of Protestant Theology
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalism". Britannica.com. 28 May 2023. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
- ↑ Lacey, A.R. (1996), A Dictionary of Philosophy, 1st edition, Routledge and Kegan Paul, 1976. 2nd edition, 1986. 3rd edition, Routledge, London, 1996. p. 286
- ↑ Bourke, Vernon J., "Rationalism," p. 263 in Runes (1962).