பங்கர் நாய்

பங்கர் நாய் என்பது கால்நடைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை நாய் ஆகும். இந்நாய் புரியத் இன மக்களால் வளர்க்கப்பட்டது. இவை வெற்றிகரமாக இருந்த காரணத்தினால் புரியாத்தியா, மங்கோலியா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியது. இருந்தும், 20ஆம் நூற்றாண்டின் நடுவில் இவ்வினம் கிட்டத்தட்ட அழிக்கப்படும் நிலைக்குச் சென்றது.[1] இவை அவற்றின் புத்திக் கூர்மைக்காகவும், கடுமையான சூழ்நிலைகளிலும் வாழும் தன்மைக்காகவும் பெரிதும் மதிக்கப்படுகின்றன.[2][3] தங்களை வளர்க்கும் குடும்பங்களுக்கு மிக விசுவாசமாகவும், அன்புடனும் இருக்கக் கூடியவை. ஆனால், ஊடுருவல் செய்யும் மனிதர்கள், ஓநாய்கள், கழுகுகள் மற்றும் பனிச் சிறுத்தைகளுக்கு அச்சமூட்டும்வையாக இவை உள்ளன.[3][4][2]

பங்கர் நாய்
பிற பெயர்கள் கோதோசோ, கோதோசோ நோகோய், பங்கர், பன்ஹர், புர்யத்-மங்கோலிய ஓநாய் வேட்டைநாய்
தனிக்கூறுகள்
எடை 50-60 கிலோகிராம்
உயரம் 75 செ. மீ.
நிறம் சிவப்பு, கருப்பு அல்லது கருப்பு மற்றும் பழுப்பு
வாழ்நாள் 15-18 ஆண்டுகள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

வரலாறு தொகு

 

இவை பண்டைய இனம் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. மரபணு ஆய்வுகளின்படி, இது ஒரு அடிப்படை இனம் ஆகும். உலகின் அனைத்து கல்நடைக் காவல் நாய்களுக்கும் இது முன்னோராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[5][6][7] புரியாத்தியா தொன்மவியலின் படி, மலைகளில் இருந்து இறங்கிய ஒரு இராட்சதருடன் வரும் பெரிய ஆக்ரோசமான நாயக இது காட்டப்படுகிறது. இந்த நாயின் வழித் தோன்றல்கள் தான் பங்கர் நாய்களாகும். செங்கிஸ் கானின் தாக்குதல்களில் பங்கேற்க இந்நாய்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மக்களின் மனதில் அச்சம் ஏற்படுத்தி, கிராமங்கள் மற்றும் நகரங்களைக் கைப்பற்ற இவை உதவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3]

மார்க்கோ போலோ இந்த நாய்களின் மீது நன்மதிப்பு கொண்டிருந்தார். வெனிசில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு பங்கர் நாயை அவர் கொண்டு வந்தார்[8]. எரிச் வான் சால்சுமன் என்பவரின் விளக்கப்படி, இந்த நாயானது ஒரு பெரிய அழகான நாய் ஆகும். இது அளவில் செருமன் செப்பர்டு நாயை ஒத்துள்ளது. இதன் உருவம் அடர் கருப்பு நிறத்தில் இருக்கும். இது மிகவும் ஆக்ரோஷமானதாகும். புரியாத்-மங்கோலியக் காவல் நாய்கள் வெளியாள்களை இரக்கமின்றித் தாக்கக் கூடியவையாகும். வில்லெம் பில்ச்னர் என்பவர் ஒரு காட்டு, பெரிய நாய் இராட்சத உருவத்தைப் பற்றிக் கூறுகிறார். இது கரடியின் அளவை ஒத்துள்ளது. மென்மையான உணர்திறன் உடைய இந்த நாய்களுடன் குழந்தைகள் விளையாட முடியும். ஆனால் இதே நாய்கள் ஓநாய்கள் மற்றும் கரடிகளைக் கண்டு அஞ்சுவதில்லை.[8]

மங்கோலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரே நாய் இனம் இதுதான். புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால், இவை தமது மரபணுத் தூய்மையைப் பெற்றிருந்தன.[7] உட்கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் பயணங்கள் ஆகியவை பங்கர் நாய்களின் பூர்வீகப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதை எளிதாக்கின. இதன் காரணமாக மங்கோலியப் பூர்வீகமில்லாத நாய்கள் பங்கர் நாய்களுடன் கலக்க ஆரம்பித்தன.[7] மங்கோலியாவின் பொதுவுடமைச் சகாப்தத்தின் போது, பங்கர் நாய்கள் அவிழ்த்து விடப்பட்டன அல்லது பொதுவுடமைவாதப் பாணியிலான குடியிருப்புகளில் நாடோடி குழுக்களைக் கட்டாயப்படுத்திக் குடியிருக்க வைப்பதற்காக அழிக்கப்பட்டன. நவ நாகரிக உருசிய மேற்சட்டைகளுக்குப் பயன்படுத்த பங்கர் நாய் தோல்கள் பயன்படுத்தப்பட்டன. வளர்ந்து வந்த நாய்த் தோல் தொழில்துறைக்குப் பயன்படுத்தப்படுவதற்காகப் பெரிய நாய்கள் கொல்லப்பட்டன.[7] 1980களில் இந்த நாய் இனமானது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.

உருசியா மற்றும் மங்கோலியாவில் இந்த நாய் இனத்தைப் பாதுகாக்க அன்றிலிருந்து புதுப்பிக்கப்பட்ட ஆர்வமானது காணப்படுகிறது. எனினும், இந்த இனமானது அழிந்து விடும் நிலையில் உள்ளதாகவே இன்னும் கருதப்படுகிறது.[4][7] கால்நடைகளைக் காவல்காக்கும் நாய்களின் எண்ணிக்கை வீழ்ச்சி காரணமாக, தங்களது மந்தைகளை நோக்கி அச்சுறுத்தலாக விளங்கும் எதையும் சுடவும், விடம் வைத்துக் கொல்லவும் நாடோடி மந்தயாளர்கள் ஆரம்பித்தனர். இதன் காரணமாக இப்பகுதிகளில் சாம்பல் ஓநாய்கள் மற்றும் பனிச் சிறுத்தைகளின் தொகையில் குறிப்பிடத்தக்க அளவிலான குறைவு காணப்படுகிறது.[9][2][10]

 
விரும்பப்படும் "நான்கு கண் நாய்" அடையாளத்தைக் கொண்டுள்ள ஒரு பங்கர் நாய்

உருவ அமைப்பு தொகு

பங்கர் நாய்கள் பெரிய மற்றும் அச்சமூட்டுகிற நாய்கள் ஆகும். இவை குட்டையான அல்லது நீண்ட உரோமங்களைச் சிவப்பு, கருப்பு, மற்றும் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் கொண்டிருக்கும். கருப்பு நிறமும் கண்களுக்கு மேல் வெளிரிய புள்ளிகளைக் கொண்ட நாய்களும் பொதுவாக விரும்பப்படுகின்றன. இந்நாய்கள் மங்கோலிய நான்கு கண் நாய்கள் என்றும் அறியப்படுகின்றன. இந்தத் தனித்துவமான அடையாளங்கள் மங்கலான ஒளியுடைய சூழ்நிலைகளில் ஓநாய்களிலிருந்து நாய்களை வேறுபடுத்தி அறியப் பயன்படுகின்றன. மங்கோலியத் தொன்மவியலின்படி, இந்த நாய்களால் ஆன்மா உலகத்தைக் காண முடியும் என நம்பப்படுகிறது.[7] இவை அளவில் பெரியதாக இருந்த போதும், உடல் திறம், வேகம், மகிழ்ச்சி, ஆற்றல், மன உரம் மற்றும் சோர்ந்துவிடாத நாய்களாக உள்ளன. புரியாத்திய மொழியில் இவை "கோதோசோ" என்று அழைக்கப்படுகின்றன. இதன் பொருள் "முற்ற ஓநாய்" ஆகும். மொங்கோலிய மொழியில் இவை பங்கர் என்று அழைக்கப்படுகின்றன. இதன் பொருள் "உருண்டு திரண்ட, கொழுத்த, மென்மயிர்க் கற்றை போத்தியுள்ள" என்பதாகும். இவற்றின் பெயர் இவ்வாறாக உள்ள போதிலும், பங்கர் நாய்கள் கொழுத்த இனம் கிடையாது. 50 முதல் 60 கிலோ கிராம் எடையுடன் சற்றே பெரிய நாய்களாக உள்ளன. இவற்றின் உயரம் 75 சென்டி மீட்டர் வரை இருக்கும்.[1] இவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் இவற்றிற்குக் குறைந்த அளவே கலோரி உணவுகள் தேவைப்படுகின்றன.[7] இவை பெரிய திபெத்திய மசுதீபு நாய்களைப் போலவே உருவத் தோற்றத்தில் இருந்தாலும், இந்த இரு இனங்களும் தொலைதூர உறவினர்கள் மட்டுமே ஆகும்.[7]

 

ஆரோக்கியம் தொகு

மற்ற நாய்களுடன் ஒப்பிடுகையில், பங்கர் இன நாய்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. சராசரியாக இவை 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இவை ஆண்டிற்கு ஒரு முறை குட்டியிடுகின்றன.[7]

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 Volkova, Olga (2011-05-20). "БМВ — настоящий друг человека" [BMW is a true friend of man]. www.kommersant.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  2. 2.0 2.1 2.2 Parks, Shoshi (2021-02-23). "Can the Mighty Bankhar Dogs of Mongolia Save the Steppe?". Atlas Obscura (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  3. 3.0 3.1 3.2 Vigovskaya, Anna (2020-11-18). "Лохматое счастье фермера Урбагаева" [Shaggy happiness of farmer Urbagaev]. www.ogirk.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  4. 4.0 4.1 Морозова, Татьяна (2017-12-05). "Добрый сторож: Общество: Облгазета" [Kind Watchman]. www.oblgazeta.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  5. Shannon, Laura M.; Boyko, Ryan H.; Castelhano, Marta; Corey, Elizabeth; Hayward, Jessica J.; McLean, Corin; White, Michelle E.; Abi Said, Mounir et al. (2015-10-19). "Genetic structure in village dogs reveals a Central Asian domestication origin". Proceedings of the National Academy of Sciences 112 (44): 13639–13644. doi:10.1073/pnas.1516215112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:26483491. Bibcode: 2015PNAS..11213639S. 
  6. Derr, Mark (2011-10-27) (in en). How the Dog Became the Dog: From Wolves to Our Best Friends. ABRAMS. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59020-991-2. https://books.google.com/books?id=k6iMDwAAQBAJ&pg=PT6. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 "The Bankhar Dog". Mongolian Bankhar Dog Project (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  8. 8.0 8.1 Arakchaa, Tayana (2018). "Reindeer, dogs, and horses among the tozhu reindeer herder-hunters in the siberian taiga.". University of Alaska Fairbanks ProQuest Dissertations Publishing (Fairbanks: University of Alaska). 
  9. Performagene™ DNA collection kits used in genetic study of the Mongolian bankhar dog. 2014-11-01. https://www.bankhar.org/wp-content/uploads/2016/10/DNA-case-studyMK-00440.pdf. 
  10. Lieb, Zoë; Tumurbaatar, Batbaatar; Elfström, Bruce; Bull, Joe (2021-10-01). "Impact of livestock guardian dogs on livestock predation in rural Mongolia" (in en). Conservation Science and Practice 3 (10). doi:10.1111/csp2.509. பன்னாட்டுத் தர தொடர் எண்:2578-4854. https://doi.org/10.1111/csp2.509. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கர்_நாய்&oldid=3508058" இலிருந்து மீள்விக்கப்பட்டது