பஞ்சவன்மாதேவீச்சரம்

பஞ்சவன்மாதேவீச்சரம் (பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும். பட்டீஸ்வரத்திலிருந்து திருமேற்றளிக்குச் செல்லும் சாலையில் இப்பள்ளிப்படை அமைந்துள்ளது. இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரமசாமி கோயில் என அழைக்கின்றனர்

நுழைவாயில்

வரலாறு

தொகு

இந்த பள்ளிப்படை முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் இராசேந்திரனால் அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பள்ளிப்படை கோயிலாகும். இராசேந்திர சோழனுக்கு பஞ்சவன் மாதேவி சிற்றன்னை ஆவார். பஞ்சவன் மாதேவியின் உடலைப் புதைத்து அதன்மேல் லிங்கத்தைப் பிரதிட்டை செய்து கட்டப்பட்ட பள்ளிப்படை என்பது இதன் சிறப்பு. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயில் பழுவேட்டரைர்ய கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை. இராஜேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது[1]

அமைப்பு

தொகு

கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் அதனுடன் இணைந்த அம்மன் கோயில்கள் பரிவாராலயமாக சண்டீசர் கோயில், கிழக்குக் கோபுர வாயில் ஆகியவற்றோடு பஞ்சவன்மாதேவீச்சரம் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்திலுள்ள ரிஷபமும், அங்குள்ள சிம்மத்தூண் ஒன்றும் பழுவேட்டரையர்களின் கலை அமைதியோடு விளங்குகின்றன.[1]

தாய்-மகன் அன்பு

தொகு

பழுவேட்டரையர் மரபில் வந்த பஞ்சவன்மாதேவி, ராஜேந்திரனை தன் சொந்த மகனாகவே எண்ணி அன்பு பாராட்டினார். அதனால், இந்த இறையுணர்வு மிக்க சீமாட்டி இயற்கை எய்தியபோது அந்தப் பிரிவைத் தாங்கமாட்டாத அரசர், அன்னையின் நினைவாக, பேரரசி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படைக்கோயிலான பஞ்சவன்மாதேவீச்சரத்தைக் கட்டினார். இப்பள்ளிப்படை, தாயின்மீது அவர் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த கட்டப்பட்ட கலைக்கோயிலாகும்.[2]

சீரமைப்பு, தற்போதைய நிலை

தொகு

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் செல்வதென்றால் ஒரு தோப்பிற்குள் செடிகொடிகள் மண்டிக்கிடக்கும் இடத்தில் புதர்கள் நிறைந்த சூழலில் பார்க்கவேண்டிய அவல நிலை இருந்தது. அனைத்தையும் கடந்து கோயிலுக்குள் சென்றால் அதிக எண்ணிக்கையிலான வவ்வால்கள் நம் முன் சுற்றி வந்து பயமுறுத்தி மூலவரைப் பார்க்க அனுமதிக்காது. பராமரிப்பின்றி அழிவின் நிலையில் இருந்த இந்தப் பள்ளிப்படைக் கோயில் பார்க்கவே இயலாதவாறு புதர் மண்டிப்போய் பாழ்பட்டு போனது. என்றாலும், இக்கோயில் 1978 இல் தமிழ்நாட்டு தொல்லியல்துறையால் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது கட்டுமானத்தில் சில இடங்களில் மீண்டும் செடிகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  2. தேவமணி ரஃபேல், அன்னைக்கு ஓர் ஆலயம், கல்கி தீபாவளி மலர் 2002
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சவன்மாதேவீச்சரம்&oldid=4041630" இலிருந்து மீள்விக்கப்பட்டது