பண்பாட்டு வள மேலாண்மை

பரந்த நோக்கில் பண்பாட்டு வள மேலாண்மை என்பது, கலை மற்றும் மரபு சார்ந்த வளங்களை மேலாண்மை செய்யும் நடைமுறை ஆகும். இது, மரபுவழி மற்றும் வரலாற்றுப் பண்பாட்டுடன் தொல்லியல் சார்ந்த பொருட் பண்பாட்டையும் கனனத்திற்கொள்ளும் பண்பாட்டு மரபு மேலாண்மையையும் உள்ளடக்குகிறது. மரபுவழிப் பண்பாட்டு வடிவங்களை மட்டும் பாதுகாத்து வழங்குவதன்றி, பண்பாட்டு வள மேலாண்மை என்பது, நகர்ப்புறப் பண்பாடு போன்ற முன்னேற்றம் சார்ந்ததும், புதுமை சார்ந்ததுமான தற்காலப் பண்பாட்டையும் தழுவி நிற்கின்றது.


எனினும் இச்சொல்லின் இவ்வாறான பரந்த பயன்பாடு அண்மைக்காலத்தில் உருவானது ஆகும். இதனால் இது பெரும்பாலும் மரபு மேலாண்மை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவில் இச் சொல்லானது, [தொல்லியலாளர்]]களாலும், கட்டிடக்கலை வரலாற்றாளர்களாலும், வரலாற்றுக் கட்டிடக்கலைஞர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தொல்லியல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இடங்களைச் சூழலியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க மேலாண்மை செய்வதைக் குறிக்கவே இச்சொல்லை அவர்கள் ஆளுகிறார்கள்.


பண்பாட்டு வளங்கள் என்பன, தொல்லியல், கட்டிடக்கலை, ஓவியம், சிற்பம் போன்ற இயற்பியல் சொத்துக்களையும், நாட்டார்வழக்கு, கதை கூறல், நாடகம் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. பண்பாட்டு வள மேலாண்மையர்கள் பெரும்பாலும், அருங்காட்சியகங்கள், ஓவியக் காட்சியகங்கள், நாடக அரங்குகள் போன்றவற்றின் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.


நாடு அல்லது உலக மட்டத்தில், பண்பாட்டு வள மேலாண்மை என்பது பரந்த நோக்கங்களின் அடிப்படையில் அமையலாம். இவை அழிநிலை மொழிகள், பொதுக் கல்வி, பல்பண்பாட்டிய இயக்கம், பண்பாட்டு வளங்களின் அணுக்கங்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சார்ந்தவையாக அமையக்கூடும்.