பண்பியல் வெளிப்பாட்டியம்

பண்பியல் வெளிப்பாட்டியம் (abstract expressionism) என்பது அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான ஒரு கலை இயக்கமாகும். உலகம் தழுவிய செல்வாக்குப் பெற்ற முதல் அமெரிக்கக் கலை இயக்கம் இதுவாகும். அத்துடன் நியூ யார்க் நகரத்தை கலை உலகத்தின் மையமாக்கியதும் இதுவே.


பண்பியல் வெளிப்பாட்டியம் என்பது அமெரிக்க ஓவியம் தொடர்பில் 1946 ஆம் ஆண்டில் கலைத் திறனாய்வாளரான ராபர்ட் கோட்டெஸ் என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்டது எனினும் இது முன்னரே 1919 ஆம் ஆண்டில் டெர் ஸ்டர்ம் என்னும் ஜெர்மன் சஞ்சிகையில் இடம்பெற்றது.

பாணி தொகு

நுட்ப அடிப்படையில், இப்பாணியின் முக்கியமான முன்னோடிகளுள் ஒன்று, சடுதியான, தானாக அல்லது உள்ளுணர்வின் அடிப்படையிலான படைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அடிமன வெளிப்பாட்டுவாதம் (surrealism) ஆகும். நிலத்தில் வைக்கப்பட்ட வரைதுணியின் மீது நிறங்களைச் சொட்ட விடும் ஜக்சன் பொல்லொக்கின் முறை மக்ஸ் ஏர்ண்ஸ்ட் என்பவரின் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டது. அடிமன வெளிப்பாட்டியத்தின் இன்னொரு தொடக்ககால வெளிப்பாடு அமெரிக்க ஓவியர் மார்க் டோபேயின் படைப்புக்களாகும்.