பதினான்காவது தமிழ் இணைய மாநாடு

பதினான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதிவரை நடைபெற்றது. யுனிசிம் எனப்படும் சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகமும், உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் சேர்ந்து நடத்திய இந்த மாநாடு சிம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. ஆய்வுக்கட்டுரை வாசிப்பு, சமுதாய நிகழ்வுகள், கண்காட்சி என்பன இடம்பெற்றன. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து உள்ளிடட் பல்வேறு நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய மாநாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற அரங்குகளுக்குத் தமிழ்க் கணிமை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முன்னோடிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்தன. தொடக்க, நிறைவு நிகழ்வுகளும், முழு அமர்வுகளும் நா. கோவிந்தசாமி அரங்கில் இடம்பெற்றன. ஆய்வுக்கட்டுரை வாசிப்பு ஒரே சமயத்தில் சங்கரப்பிள்ளை அரங்கு, ஆண்டோ பீட்டர் அரங்கு, உமறுப் புலவர் அரங்கு ஆகிய அரங்குகளில் நிகழ்ந்தது.

தொடக்க விழா

தொகு

இசை, நடன நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இவ்விழாவில், சிங்கப்பூரின் பிரதம மந்திரி அலுவலக அமைச்சரும், உள்நாட்டு அலுவல்கள் இரண்டாவது அமைச்சரும், வணிக மற்றும் தொழிற்றுறை இரண்டாவது அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தொடக்க விழாவில் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன், இணைப் பேராசிரியர் டான் டின் வி, முனைவர் பொன்னவைக்கோ ஆகியோருக்கு உத்தமத்தின் முன்னோடிகளுக்கான விருதுகளும், மேலும் சிலருக்குப் பங்களித்தோருக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள்

தொகு

முழு அமர்வு

தொகு

மாநாடு இடம் பெற்ற மூன்று நாட்களிலும் காலையில் முழு அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. முழு அமர்வுகளில் நாளுக்கு ஒன்றாகப் பின்வரும் உரைகள் இடம்பெற்றன:[1]

  • முதல் நாள் - லிசா மூர் - ஒருங்குறியும் தமிழும் (ஆங்கிலத்தில்)
  • இரண்டாம் நாள் - இ. மயூரநாதன் - இணையத்தில் தமிழ்வழி அறிவுத்தேட்டம்: விக்கிப்பீடியா தரும் வாய்ப்புக்கள் (தமிழில்)
  • மூன்றாம் நாள் - பேரா. விஜயன் சுகுமாரன் - Big Data and Tamil Computing (ஆங்கிலத்தில்)

ஆய்வுக் கட்டுரைகள்

தொகு

ஆய்வாளர்களிடமிருந்து கிடைத்த 134 ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு 76 கட்டுரைகள் மாநாட்டில் படைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.[2] இக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக அச்சுருவிலும் வெளியிடப்பட்டன. மேற்படி ஆய்வுக்கட்டுரைகள் மாநாடு இடம்பெற்ற மூன்று நாட்களிலும் பிற்பகலில் ஒரே நேரத்தில் மூன்று அரங்கங்களில்[3] படைக்கப்பட்டுக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தமிழ் கற்பதிலும், கற்பித்தலிலும் கணினி, அலைபேசி ஆகியவற்றின் பங்கு குறித்த கட்டுரைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இது குறித்த ஆசிரியர், மாணவர்களின் விளக்கங்களும் சிறப்பம்சங்களாக அமைந்திருந்தன. மொழிபெயர்ப்புக் கருவிகள், சொற்பிழை திருத்திகள், கைபேசியில் தமிழின் பயன்பாடு, தமிழ் வலைப்பூக்கள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பல கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைக்கப்பட்டன.[4]

சமூக நிகழ்வுகள்

தொகு

மூன்று நாட்களும் முற்பகலிலும், பிற்பகலிலும் மாணவர்களுக்கும், ஏனையோருக்கும் தமிழ்க் கணிமை சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சி வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பின்வருவன தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன:

  • தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்தல்
  • மின்னூல் உருவாக்கம்
  • வலைப்பூக்கள்
  • ஆன்டிரோய்ட் செயலிகள் உருவாக்கம்
  • கணினியில் விளையாட்டுக்கள் உருவாக்கம்

அரும்பு செயலி

தொகு

இந்த மாநாட்டில் குழந்தைகளில் தமிழ் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் அரும்பு[5] என்ற பெயரில் செயலி (app) ஒன்று துவங்கி வைக்கப்பட்டது.

மேற்கோள்

தொகு
  1. 14வது தமிழ் இணைய மாநாடு 2015, சிங்கப்பூர், 30 மே - ஜூன் 1, சிறப்பு மலர், பக். 26, 28, 31.
  2. 14வது தமிழ் இணைய மாநாடு 2015, சிங்கப்பூர், மாநாட்டுக் கட்டுரைகள், பக். XX.
  3. 14வது தமிழ் இணைய மாநாடு 2015, சிங்கப்பூர், 30 மே - ஜூன் 1, சிறப்பு மலர், பக். 26-32.
  4. 14வது தமிழ் இணைய மாநாடு 2015, சிங்கப்பூர், மாநாட்டுக் கட்டுரைகள், பக். 1-7.
  5. ஆர்வத்தைத் தூண்ட செல்போன் ‘ஆப்’: சிங்கப்பூர் அரசு அறிமுகம் தி இந்து தமிழ் ஜூன் 1 2015

வெளியிணைப்புக்கள்

தொகு