முப்பொருள் (சைவம்)

(பதி பசு பாசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முப்பொருள் என்பது சைவ சித்தாந்தத்தில் பதி பசு பாசம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். [1] இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது தளைகளையும் குறிக்கிறது.

முப்பொருள்களான பதி பசு பாசம் ஆகியவற்றின் தொடர்பினை விவரிக்கும் படம்

விளக்கம்

 
முப்பொருள் அடிப்படை பிரிவுகள்

முப்பொருள்களில் கடவுள் பேரறிவு உடையது என்றும், உயிர் சிற்றறிவுடையது என்றும் தளை உயிர் அற்றதாகவும் அறியப்படுகிறது.

பதி (எ) கடவுள்

சைவ சித்தாந்தத்தில் கடவுள் எங்கும் இருப்பவராகவும், ஒருவனாய் உலகினை ஆள்பவனாகவும், உலகம் முழுவதும், அதற்கு அ்ப்பாலும் நிறைந்தவனுமாகவும் கூறப்பெறுகிறார். தோற்றமும் அழிவும் இல்லாதவராக கூறப்பெறும் கடவுளுக்கு எட்டு வகை குணங்கள் இருப்பதாகச் சைவ சித்தாந்தம் எடுத்துரைக்கிறது. இத்துடன் கடவுளுக்கு உவமை கூற இயலாது என்றும் சைவ சித்தாந்தம் கூறுகிறது. [2]

பசு (எ) உயிர்

சைவ சித்தாந்தத்தின் படி உயிரானது உடலினைப் பெறும் முன்பு அறிவு, இச்சை, செயல் என்பது இன்றி அறியாமை நிலையில் மூழ்கியிருக்கும். இந்த உயிரானது கடவுளைப் போன்று தோற்றமும் அழிவுமில்லாதாகும். [3]

பாசம் (எ) தளை

சைவ சித்தாந்தத்தின் படி பாசம் அல்லது தளை என்பது உயிர்களை அடிமை செய்யும் பொருள்களாகும். [4] இதனை போகப் பொருள்கள் என்றும் கூறுவர் [5]

வரலாறு

 
இந்து சமவெளி முத்திரைக் காளைகள் (மேய்த்தனவும், ஊர்தியும்
 
இந்து சமவெளிக் களிமண் பொம்மை, காளை, (மேய்த்தனவும், ஊர்தியும்)

சைவ சமயம் இலிங்க வழிபாட்டில் தொடங்கியது. சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரைகளில் இலிங்க வழிபாட்டைக் குறிக்கும் சான்றுகள் உள்ளன. இதனை அம்மையப்பன் வழிபாடு என்பர். இலிங்கம் மக்களின் ஆண் பெண் உறவைக் காட்டுவது தவறான ஆரிய சித்தரிப்பாகும் .

இந்தச் சமயம் தன் வளர்ச்சிப் பாதையில் பல மாறுதல்களைப் பெற்றது. ஆரியர் வருகைக்குப் பின்னர் சைவம் வேதாந்த நிலையைப் பெற்றது. இதனை வேதாந்தம் என்பர். இதில் சிவனைப் பற்றிய கதைகள் தோன்றின. இதனை விடுத்து, சிவத்தை பத்கி, பசு, பாசம் என முக்கோணப் பாங்கில் எண்ணிப் பார்த்தனர். சிந்தித்துக் கண்ட முடிவைச் சித்தாந்தம் என்றனர்.

  • ஞாலத்தைச் சித்தாந்தம் பதி, பசு, பாசம் எனக் கண்டது.
    • சிவம், உயிர், பாசம்
    • அறிவு, ஆன்மா, ஆசை
    • பரமாத்மா, சீவாத்மா, பாசம்
    • வித்து, சித்து, அசித்து(சடம்)

என்றெல்லாம் இதனைப் பாகுபடுத்திப் பார்த்தனர். சிவஞான சித்தியார், சிவஞான போதம் முதலான நூல்கள் இவற்றை விரிவாகப் பேசுகின்றன.

திருமந்திர விளக்கம்

திருமூலர் பாடல் [6]

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே
இப்பாடலுக்கான 16 ஆம் நூற்றாண்டு உரை [7]
பசுவும் பாசமும் பதியினைப் போலவே அனாதி; ஆகையாலே; :"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி" என்னும் சத்தத்துக்கு விபரம்
பசுவாகிய சீவாத்மா சமுசார சக்தியில் விழுந்து வேற்றுமைப் புத்தியைக் கொண்டு பதியினைச் சேராமையினாலே "பதினினைச் சென்று அணுகாப் பசு பாசம்" என்னும் சத்தத்துக்கு விபரம்
பசுவாகிய சீவாத்மா சத்திநிபாத விவேகத்தைக் கொண்டு காரண குரு கை காட்டும்படியே நீரும் நீர்க்குமிழியும் கலந்து ஒன்றானாற் போல, பதியினைச் சேர்ந்து ஐக்கிய பதம் பெற்ற பின் பசுவுடன் பாசம் நட்டமானபடியினாலே "பதி அணுகிற் பாசம் நில்லாவே" என்னும் சத்தத்துக்கு விபரம் என்க.
இப் பாடலுக்கான எளிய விளக்கம்
இறைவன், உயிர், உயிரின ஆசை எனபன பேரண்ட இயக்கத்தின் மூன்று பொருள்கள். இறைவனைப் போலவே உயிரினங்களும், ஆசையும் தாமே தோன்றுபவை. உயிரினங்களும் ஆசையும் உலகியல் வாழ்வில் இறைவனை அணுகுவதில்லை. அணுகினால் நீர் வேறு, நீர்க்குமிழி வேறு என்று இல்லாதது போல ஒன்றாய் இருக்கும்.

அறிவுக் கண்ணோட்டம்

அறிவுதான் பதி. அதுதான் எங்கும் பதிந்திருப்பது. பதிவு உயிர்த்தெழுந்து மூச்சு விடுவது உயிர். இந்த உயிர்ச்சத்து உடலைக் கட்டிக்கொள்கிறது. பாசம் என்பது கயிறாகிய கட்டு. பாசம் என்பது கட்டும், அவிழும், அறுந்து போகும். இதுதான் வாழ்வு. இவ்வாறு பதி பசு பாசங்களை உணர்ந்து பார்த்தனர்.

அடிக்குறிப்பு

  1. சிவவழிபாடு நூல் பக்கம் 12
  2. கி பழநியப்பனார் எழுதிய சிவவழிபாடு நூலின் பக்கம் 13
  3. கி பழநியப்பனார் எழுதிய சிவவழிபாடு நூலின் பக்கம் 14
  4. கி பழநியப்பனார் எழுதிய சிவவழிபாடு நூலின் பக்கம் 13
  5. கி பழநியப்பனார் எழுதிய சிவ வழிபாடு நூலின் பக்கம் 27
  6. திருமந்திரம் 115
  7. திருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பொருள்_(சைவம்)&oldid=4007378" இலிருந்து மீள்விக்கப்பட்டது