பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்
ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும். இக்கால சக்கார்த்தாவைப் போலவே அக்காலத்தில் பத்தேவியா என்பது நகரத்தை மட்டுமோ அல்லது அதனோடிணைந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்த்தோ குறிக்கலாம்.
1619 இல், அக்கால சயகார்த்தா நகரை இடித்து உருவாக்கப்பட்ட பத்தேவியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நவீன இந்தோனீசியா உருவாக வழிகோலியது. பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசிய வணிக வலையமைப்பின் மையமானது.[1]:10 இப்பகுதியில் கம்பனி, சாதிக்காய், கருப்பு மிளகு, கறுவா, கராம்பு ஆகிய பண்டங்களின் வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்ததோடு, மரபு சாராத காசுப் பயிர்களான காப்பி, தேயிலை, கொக்கோ, இறப்பர், சர்க்கரை, கஞ்சா ஆகியவற்றின் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தது. தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியும், 1799 இல் அதை மாற்றீடு செய்த குடியேற்றநாட்டு நிர்வாகமும், படிப்படியாக நகரைச் சுற்றிய பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டன.[1]:10
பத்தேவியா சாவாத் தீவின் வடக்குக் கரையில் பாதுகாப்பான குடாப் பகுதியில், சதுப்பு நிலங்களையும், சிறு குன்றுகளையும் கொண்ட தட்டையான நிலப்பகுதியில் இருந்தது. பத்தேவியா இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று "பழைய பத்தேவியா" அல்லது "கீழ் நகரம்" நகரின் பழைய பகுதி தாழ்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளது. மற்றது "புதிய பத்தேவியா" அல்லது "மேல் நகரம்", ஒப்பீட்டளவில் பிற்காலத்தைச் சேர்ந்தது, தெற்குப் பகுதியில் மேடான நிலப்பகுதியில் அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பத்தேவியா சப்பானியரால் கைப்பற்றப்பட்டது. சப்பானியரின் கீழ் இருந்தபோதும், 1945 ஆகத்து 17 க்குப் பின்னர் தேசியவாதிகள் விடுதலையை அறிவித்த பின்னரும் நகரின் பெயர் சக்கார்த்தா என மாற்றப்பட்டது.[2] போருக்குப் பின்னர், 1949 டிசம்பர் 27 இல் இந்தோனீசியா முழு விடுதலை பெறும்வரை ஒல்லாந்தப் பெயரான "பத்தேவியா" உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராக இருந்துவந்தது. விடுதலைக்குப் பின்னர் சக்கார்த்தா இந்தோனீசியாவின் தேசியத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.[2]
வரலாறு
தொகுபின்னணி
தொகு1595 இல் அம்சுட்டர்டாமில் இருந்து ஒல்லாந்த வணிகர்கள் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டனர். வாசனைப் பொருள் வணிகத்துக்காக கோர்னேலிசு டி ஊத்மன் என்பவன் தலைமையில் இவர்கள் பாந்தென் சுல்தானகத்தின் தலைநகரான பாந்தமுக்கும், சயகார்த்தாவுக்கும் வந்தனர். 1602 இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல் சர் சேம்சு லங்காசுட்டர் தலைமையில் ஆக்கேக்கு வந்து அங்கிருந்து பாந்தமுக்கு வந்தனர். அங்கே ஒரு வணிக நிலையைக் கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தது. இது 1682 வரை ஆங்கிலேயரின் இந்தோனீசியாவுக்கான வணிக மையமாக விளங்கியது.[3]:29
1603 இல், ஒல்லாந்தரின் முதல் நிரந்தரமான வணிக நிலை பாந்தமில் நிறுவப்பட்டது. 1610 இல், இளவரசர் சயவிக்கார்த்தா, சிலிவுங் ஆற்றின் கிழக்குக் கரையில், சயகார்த்தாவுக்கு எதிர்ப்புறம் மரத்தாலான களஞ்சியசாலை ஒன்றையும் வீடுகளையும் கட்டிக்கொள்ள ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கினான்.[4]:29 இது 1611ல் நிறுவப்பட்டது. ஒல்லாந்தரின் வலிமை அதிகரித்தபோது, அதைச் சமப்படுத்துவதற்காக சிலிவுங் ஆற்றின் மேற்குக் கரையில் வீடுகளையும் ஒரு கோட்டையையும் கட்டிக்கொள்ள செயவிக்கார்த்தா பிரித்தானியருக்கு அனுமதி கொடுத்தான்.
1618 டிசம்பரில் செயவிக்கார்த்தாவுக்கும் ஒல்லாந்தருக்குமான உறவுகளில் விரிசல் ஏற்படவே, செயவிக்கார்த்தாவின் படைகள் ஒல்லாந்தரின் கோட்டையைச் சூழ்ந்துகொண்டன. 15 கப்பல்களைக் கொண்ட பிரித்தானியக் கப்பல்படை ஒன்றும் சர் தாமசு டேல் தலைமையில் வந்து சேர்ந்தது. கடற் சண்டை ஒன்றைத் தொடர்ந்து ஒல்லாந்த ஆளுனன் யான் பீட்டர்சூன் கோயென் உதவிக்காக மொலுக்காசுக்குத் தப்பியோடினான். பேச்சுவார்த்தை ஒன்றின்போது ஒல்லாந்தப் படைத்தளபதி பீட்டர் வான் டென் புரூக்கும் வேறு ஐவரும் கைது செய்யப் பட்டனர். இதன் பின்னர் செயவிக்கார்த்தா பிரித்தானியருடன் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டான்.
ஒல்லாந்தப் படைகள் பிரித்தானியரிடம் சரணடையும் தறுவாயில் இருந்தபோது, இளவரசன் செயவிக்கார்த்தா பிரித்தானியருடன் செய்துகொண்ட நட்புறவு உடன்படிக்கை தொடர்பில் முன் அனுமதி பெறாததால், செயவிக்கார்த்தாவை அழைத்துச் செல்வதற்காகப் பந்தனில் இருந்து ஒரு தொகுதி படையினர் அனுப்பப்பட்டிருந்தனர். செயவிக்கார்த்தாவுக்கும் பந்தனுக்கும் இருந்த முரண்பாடுகளும், பாந்தனுக்கும், பிரித்தானியருக்கும் இடையிலான பிரச்சினைகளும் ஒல்லாந்தருக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்கின.
1619 மே 28 இல் கூடுதல் படைகளுடன் மொலுக்காசில் இருந்து வந்த கோயென் 1619 மே 30 ஆம் தேதி செயக்கார்த்தாவைத் தரைமட்டமாக்கினான்.[5]:35 செயவிக்கார்த்தா பாந்தனின் உட்பகுதியில் இருந்த தனாரா என்னும் இடத்துக்குப் பின்வாங்கினான். பாந்தனுடன் நெருக்கமான உறவை உருவாக்கிய ஒல்லாந்தர் துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நாளடைவில் இது இப்பகுதியில் ஒல்லாந்தரின் அதிகார மையம் ஆனது.
பத்தாவியாவின் உருவாக்கம்
தொகுபத்தேவியா நகரமாக உருவான இடம் 1619ல் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலில் பழைய ஒல்லாந்தக் கோட்டையின் விரிவாக்கம் ஆகவும், முன்னர் செயக்கார்த்தா இருந்த இடத்தில் சில புதிய கட்டிடங்களாகவும் இது தொடங்கியது. 1619 யூலை 2 ஆம் தேதி கோயென் பழைய கோட்டையைப் பெரிய கோட்டையாகக் கட்ட முடிவு செய்தான். 1619 அக்டோபர் 7 ஆம் தேதி புதிய கோட்டையின் வரைபடம் நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டது. புதிய பத்தேவியாக் கோட்டை பழையதைக் காட்டிலும் மிகவும் பெரியது. கடலில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வடக்கில் இரு கொத்தளங்கள் இருந்தன. இக்கோட்டையில் சப்பான், செருமனி, இசுக்காட்லாந்து, டென்மார்க், பெல்சியம் ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட கூலிப்படைகள் இருந்தன. 1619 மார்ச்சில் களஞ்சியங்களும், துறைமுகமும் தளபதி வான் ராயின் மேற்பார்வையில் விரிவாக்கப்பட்டன.
புதிய குடியேற்றத்துக்கும் கோட்டைக்கும் தான் பிறந்த ஊரின் பெயரைத் தழுவி "புதிய ஊர்ண்" (Nieuw-Hoorn) என்று பெயரிட கோயென் விரும்பினான். அதை ஏற்றுக்கொள்ளாத ஒல்லாந்தத் திழக்கிந்தியக் கம்பனியின் சபை "பத்தேவியா" என்னும் பெயரைத் தெரிவு செய்தது. 1621 சனவரி 18 இல் பெயர் சூட்டும் விழாவும் நடைபெற்றது. ஒல்லாந்த மக்களின் மூதாதையர்களாக அப்போது கருதப்பட்ட "பத்தாவி" பழங்குடியினரின் பெயரைத் தழுவியே இப்பெயர் வைக்கப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேல் இப்பெயர் நிலைத்திருந்தது.
ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான மையமாகவே பத்தேவியா உருவாக்கப்பட்டது. ஒல்லாந்த மக்களின் குடியேற்றமாக இதை உருவாக்க எண்ணியிருக்கவில்லை. நகரில் வாழும் மக்களே உணவு உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு வணிக நிறுவனமாகவே கோயென் பத்தேவியாவை உருவாக்கினான். இதனால், ஒல்லாந்தக் குடும்பங்கள் இங்கே குடியேறவில்லை. ஒரு கலப்புச் சமுதாயம் அங்கே உருவானது. ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி தமது வணிகத்தில் தாம் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்பியதால், நகரில் பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளைப் பணிக்கு அமர்த்தியிருந்தனர். தமது சொந்த வணிகத்தை நடத்த விரும்புபவர்களுக்கு பத்தேவியா ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருக்கவில்லை.
1619 இல் பத்தேவியா நிறுவப்பட்ட காலத்திலிருந்தே சாவாத் தீவு மக்கள் அங்கே குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடக்கூடும் என ஒல்லாந்தர் பயந்தனர். இதனால், சீனரையும், பிற இனத்தவரையும் வெளியில் இருந்து கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vickers A. A History of Modern Indonesia Cambridge University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521542626
- ↑ 2.0 2.1 Waworoentoe WJ. Jakarta Encyclopaedia Britannica, Inc; accession date August 30, 2015. [1]
- ↑ Ricklefs MC. A History of Modern Indonesia since c.1200 Palgrave Macmillan, 4th edition, Sep 10, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137149183
- ↑ Ricklefs MC. A History of Modern Indonesia since c.1200. MacMillan, 2nd edition, 1991ISBN 0333576896
- ↑ Ricklefs MC. A History of Modern Indonesia since c.1200 Palgrave Macmillan, 3rd edition, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780804744805