பத்மா ஆறு

பங்களாதேஷில் ஒரு நதி

பத்மா ஆறு (Padma) (வங்காளம்: পদ্মা பாட்டா) வங்காளதேசம் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கிரியா என்ற நகரத்திற்கு கீழ்நிலையில் இந்த ஆறு பாய்கிறது. கங்கை ஆற்றின் முக்கிய கிளை ஆறாகவும் இது கருதப்படுகிறது. தென்கிழக்கில் 120 கி.மீ. தூரத்திற்கு பயணித்து வங்காள விரிகுடாவிற்கு[1] அருகில் மேக்னா ஆற்றுடன் சங்கமிக்கிறது. ராச்சாகி நகரம் பத்மா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது [2]. இருப்பினும் 1966 ஆம் ஆண்டு முதல் பத்மா ஆற்றின் அரிப்பு காரணமாக கிட்டத்தட்ட சிகாகோ நகரத்தைப் போன்ற 256 சதுர மைல்களுக்கு மேற்பட்ட நிலப்பகுதி இழக்கப்பட்டுள்ளது [3].

பத்மா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
நீளம்120 கிலோமீட்டர்கள் (75 mi)[1]
பத்மா உட்பட வங்காள விரிகுடாவிற்குள் செல்லும் முக்கிய ஆறுகளை காட்டும் ஒரு வரைபடம்.
பத்மா ஆறு

சொற்பிறப்பு

தொகு

சமசுகிருத மொழியில் தாமரை மலருக்கு பத்மா என்பது பெயராகும். இந்து புராணங்களில் லட்சுமி தேவியின் புனைப்பெயராகவும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

கங்கை ஆற்றின் போக்கிலுள்ள கீழ்ப் பகுதிக்கு பத்மா ஆறு என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பகிரதி ஆறு எனப்படும் கங்கையின் மற்றொரு கிளை ஆறான ஊக்ளி ஆறு தோன்றும் இடத்திற்குக் கீழே இப்பகுதி அமைந்துள்ளது. பத்மா ஆறு பல கால்வாய்கள் வழியாக வெவ்வேறு காலங்களில் ஓடிய ஒரு ஆறாகும். டெல்டா பகுதியிலுள்ள கங்கையின் ஒவ்வொரு கிளை ஆறும் அதன் பழைய ஆற்றுப்பாதையின் ஓர் எச்சமாகும் என்று சில ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மேற்கு கோடியிலிருந்து தொடங்கும் பாகீரதி ஆறும், கிழக்கை நோக்கி ஓடும் ஒவ்வொரு கிளை ஆறும் அவற்றின் மேற்கில் உள்ள ஆற்றைக் காட்டிலும் ஒரு புதிய கால்வாயாகத் தோன்றுகிறது எனவும் குறிக்கிறார்கள்.

புவியியல் விளைவுகள்

தொகு
 
பத்மா நதியும் படகுகளும் (1860)

பதினெட்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் யேம்சு ரென்னெல் தற்போதைய கங்கை ஆற்றின் போக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: கங்கை ஆற்றின் முன்னாள் ஆற்றுப்படுகைப் பாதையை நடோர் மற்றும் யாப்பியர்கஞ்சு இடையேயான ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமித்துள்ளன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

பிரிங்கிபசார் அருகே பர்ரம்பூட்டர் அல்லது மெக்னாவின் சந்திப்புக்குச் செல்லும் பவுலியா இவ்வாற்றின் தற்போதைய போக்கிலிருந்து விலகிச் செல்கிறது. இங்கு இதுபோன்ற இரண்டு வலிமைமிக்க நீரோடைகள் மெக்னாவின் தற்போதைய அற்புதமான படுகையை வெளியேற்றுகின்றன [5]

புவியியல்

தொகு

பத்மா ஆறு இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்குள் யபாய் நபாப்கஞ்சுக்கு அருகில் நுழைந்து அரிச்சா என்னுமிடத்தில் யமுனை நதியுடன் கலக்கிறது. அவ்விடத்தில் அது யமுனையின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இறுதியாக வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன்னர் சந்த்பூர் அருகில் மெக்னா ஆற்றுடன் கலந்து மெக்னா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மேற்கு பங்களாதேசத்தின் ஒரு முக்கிய நகரமான ராச்சாகி பத்மா ஆற்றில் வடக்குக் கடற்கரையின் மீது அமைந்துள்ளது. கங்கை ஆறு இமயமலையிலுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கங்கோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்த ஆறு இந்தியா, வங்காளதேசத்தைக் கடந்து வங்காள விரிகுடாவை அடைகிறது. கங்கை ஆறு யபாய் நபாப்காஞ்ச் மாவட்டத்தில் சிப்கஞ்சு நகருக்கு அருகில் வங்காளதேசத்தில் நுழைகிறது. இங்கு இந்த நதியானது ஊக்ளி எனப்படும் பாகிரிதி ஆறு மற்றும் பத்மா ஆறு ஆகிய இரு கிளை நதிகளாகப் பிரிகிறது. தொடர்ந்து இந்தியாவில் தெற்கு நோக்கிப் பாயும் ஊக்ளி ஆறு கங்கா மற்றும் பாகிரதி என்ற பெயர்களால் அறியப்படுகிறது.

இவ்வாறு இணைந்த ஆறுகள் பத்மா என்ற பெயருடன் மேலும் கிழக்கு நோக்கி சந்த்பூருக்கு பாய்கிறது. இங்குதான் பங்களாதேசின் அகலமான நதியான மேக்னா ஆறு பத்மாவுடன் இணைகிறது. மேக்னா நதியாகவே கிட்டத்தட்ட தெற்கே ஒரு நேர் கோட்டில் தொடர்ந்து ஓடி இது வங்காள விரிகுடாவில் முடிகிறது.

மூலத்திலிருந்து 2,200 கிலோமீட்டர் (1,400 மைல்) தொலைவுக்கு மேலும் கீழ்நோக்கிப் பாய்ந்து கோலாண்டோ நகரத்திற்கு அருகில் பத்மா ஆறு யமுனை (கீழ் பிரம்மபுத்ரா) ஆற்றுடன் இணைகிறது.

பப்னா மாவட்டம்

தொகு
 
ராச்சாகிக்கு அருகில் ஒரு கோடையில் பத்மா ஆற்றின் தோற்றம்

வங்காள தேசத்தின் ராச்சாகி கோட்டத்திலுள்ள பப்னா மாவட்டத்தின் சுமார் 120 கிலோமீட்டர் தூர தெற்கு எல்லையை பத்மா ஆறு உருவாக்குகிறது.

குசுட்டியா மாவட்டம்

தொகு

வலிமைமிக்க பத்மா ஆறு வடக்கு மூலையில் மாவட்டத்தைத் தொடும் இடத்தில் யலாங்கி ஆறு இதனுடன் கலந்து வடக்கு எல்லையில் சற்றே தென்கிழக்கு திசையில் குசுட்டியாவிற்கு கிழக்கே சில மைல் தொலைவில் மாவட்டத்தை விட்டு வெளியேறும் வரை பாய்கிறது, ஏராளமான நீரைக் கொண்டு செல்லும் இந்த ஆறு அதன் பிரதான தடத்தை மாற்றும் சில இடங்களில் மிகவும் அகலமாக ஓடுகிறது. ஒரு கரையில் பரந்த பகுதிகளை அரித்து பல சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது.

முர்சிதாபாத் மாவட்டம்

தொகு

பத்மா ஆற்றின் மேற்குக் கரையில் முர்சிதாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இது மேற்கு வங்கத்தின் ராச்சாகி மற்றும் முர்சிதாபாத் மாவட்டங்களைப் பிரித்து இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் ஓர் இயற்கையான ஆற்று எல்லையை உருவாக்குகிறது [6][7]. பத்மாவின் ஆற்றின் கரை அரிப்பு காரணமாக மாவட்டத்தின் யலாலங்கி பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது [8].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Allison, Mead A. (Summer 1998). "Geologic Framework and Environmental Status of the Ganges-Brahmaputra Delta". Journal of Coastal Research (Coastal Education & Research Foundation, Inc.) 13 (3): 826–836. 
  2. Hossain ML, Mahmud J, Islam J, Khokon ZH and Islam S (eds.) (2005) Padma, Tatthyakosh Vol. 1 and 2, Dhaka, Bangladesh, p. 182 (in Bengali).
  3. "Over 66,000 hectares lost to Padma since 1967: NASA report". The Daily Star. https://www.thedailystar.net/country/news/over-66000-hectares-lost-padma-1967-nasa-report-1633810. பார்த்த நாள்: September 14, 2018. 
  4. Williams, George M. (2008). Handbook of Hindu Mythology. Oxford University Press. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533261-2. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  5. Rennell, James (January 1783). "Account of the Ganges and Burrampooter Rivers". The Scots Magazine. Vol. 45. p. 62. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
  6. "The Padma River". பார்க்கப்பட்ட நாள் February 11, 2018.
  7. "Ganga-Padma erosion poses security concerns in Bengal". August 19, 2013. பார்க்கப்பட்ட நாள் February 11, 2018.
  8. "River Bank Erosion Induced Human Displacement and Its Consequences - Impact of Ganges River Bank Erosion". Tuhin K. Das, Sushil K. Haldar, Ivy Das Gupta and Sayanti Sen. Living Reviews in Landscape Research. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_ஆறு&oldid=3715415" இலிருந்து மீள்விக்கப்பட்டது