Amuthanan Iyer
எனது பெயர், ‘அமுதனன் ஐயர்’ பெயரிலே அமுதினை கொண்டவனாக இருப்பதால், அமுது போன்ற தமிழ் மொழியில் அளவற்ற அன்பு கொண்டவனானேன். தற்போது இருக்கும் இடம் மும்பையாக (பம்பாய்) இருப்பினும், நான் பிறந்த தமிழ்நாட்டின் வாசம் என்றும் என்னைப் பிரிந்ததில்லை. நான் நமது தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்காரச் சென்னையில் பிறந்தவன், தற்போது வசித்து வரும் இடம் மும்பை. வாழும் இடம் வேறொன்றாக இருந்தாலும், பிறந்த இடத்தின் புகழும் பெருமையும் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழ் மொழியின் சிறப்பினை எடுத்துரைக்க தமிழ்நாட்டில் குடியிருப்பவர்களைக் காட்டிலும், என் போன்று பிற இடங்களில் புலம் பெயர்ந்தவர்கள்தான் அதிகம் முன்வருவர். இதற்கு முக்கியக் காரணமும் உண்டு. நமது அருகில் உள்ளவர்களின் அருமையும், புகழும் நமக்கு உடனடியாக தெரிவதில்லை. பிரிந்த பின்புதான் தெரியும். அதுபோன்றுதான் இடங்கள் மற்றும் மொழிகள். நமது மொழியின் பெருமையினை நான் நமது தமிழ்நாட்டில் இருக்கும் வரை அறிந்ததில்லை, அறிய முற்பட்டதுமில்லை. ஆனால், அங்கிருந்த வெளியில் வந்தபிறகுதான் நமது மொழிச் சிறப்புகள் மட்டுமல்லாது, நமது மொழியினைப் பற்றி பிறர் கொண்டிருக்கும் அபிப்ராயங்களும் அவர்களின் எண்ணங்கள், கலாச்சாரங்கள், பண்பாடு நம்மை எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதும் தெரிய வந்தது. இதனால்தான் இந்தியாவினை வேற்றுமையில் ஒற்றுமை என்று அழைக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனது வயது முப்பதைத் தொட்டுவிட்டது, ஆனால் இப்போதுதான் நாம் இருந்த இடத்தினைப் பற்றியும், இருக்கின்ற இடத்தினைப் பற்றியும் தெளிவாக அறிய முடிந்தது.
விருப்பங்கள்
தொகுமருந்தாளுமை எனது தொழிலாக இருந்தபோதிலும், பிற செயல்களான பயணம் செய்தல், தீரச்செயல் புரிதல், யோகா, புத்தகம் படித்தல் போன்றவற்றில் அளவுகடந்த ஆறுதல் உண்டு. அத்துடன் நான் ஒரு உணவுப் பிரியன், விதவிதமான உணவுகளை ரசித்து உண்பதில் மகிழ்ச்சியுறுபவன். அத்துடன் பல்வேறு பயணங்கள் மற்றும் நான் கண்டு ரசித்த இடங்கள் எனக்கு அளப்பறிய மகிழ்ச்சியினை வழங்கியுள்ளன. அவையெல்லாம் என்னுடன் முடிவடைந்திடக் கூடாது. அதற்காக உலகில் உள்ள அனைத்து இடங்கள் மற்றும் அதன் பெருமைகளை என்னால் தொகுக்க முடியாது. இருப்பினும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் உள்ளது. அதற்காகத்தான் இந்த சிறு முயற்சி, ஆங்கிலத்தில் உள்ள பிற விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தமிழ் கட்டுரைகளாக தர முற்பட்டுள்ளேன். இதில் அனைத்து நூறு சதவீதம் உத்தமமான மொழிபெயர்ப்புகளாக இருக்கும் என்று என்னால் உத்ரவாதம் அளிக்க இயலாது. இருப்பினும், என்னால் முடிந்தவரை மொழிபெயர்க்கிறேன். உங்களின் கருத்துக்கள் ஏதேனும் என்னை வந்தடைய வேண்டுமெனில் தாராளமாக என்னை அணுகலாம்.