அரசியல் செய்திகள் லோக்சபா தேர்தலில் கூட்டணி! கொங்கு இளைஞர் மாநாட்டில் மாநில அமைப்பாளர் அறிவிப்பு மார்ச் 23,2009,00:00 IST

Latest indian and world political news information


நாமக்கல் : "தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கோரிக்கைகளை யார் ஏற்கிறார்களோ, அவர்களுடன் நமது கூட்டணி அமையும். உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் சமூக இயக்கங்களை ஒன்று திரட்டி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்' என, நாமக்கலில் நடந்த மாநாட்டில் கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு பேசினார்.


தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில்,கொங்கு இன அரசியல் எழுச்சி மாநாடு நாமக்கலில் நடந்தது.


மாநாட்டில் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு பேசியதாவது: திராவிட பாரம்பரியத்துடன் உறவோடு இருந்த கோவை செழியன் பல போராட்டம், மாநாடு நடத்தினார். அவரது கோரிக்கையை கருணாநிதி, ஜெயலலிதா ஏற்கவில்லை. கடந்த 2000ம் ஆண்டு கோவை செழியன் மறைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில், 2001ம் ஆண்டு கொங்கு இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது.கடந்த 8 ஆண்டுகளாக லட்சிய வேட்கையோடு கொங்கு இளைஞர் பேரவை செயல்பட்டு வருகிறது. பெரிய இயக்கங்கள் எல்லாம் திரும்பி பார்க்கும் விதத்தில் பேரவை செயல்படுகிறது. இந்தியா முழுவதும் ஜாதிய அமைப்புகள் வேரூன்றி உள்ளன. ஜாதியை பாதுகாப்பது நாம் இல்லை. நாடு முழுவதும் ஜாதிய இயக்கங்கள் ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து வருகின்றன.கொங்கு சமுதாயத்தினர் சமூக, ஜாதிய பொதுக் கூட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை.

சமூக சமத்துவ கொள்கைகளை கொண்டது கொங்கு இளைஞர் பேரவை. உழைப்புக்கு பேர் போன கொங்கு சமுதாய மக்கள் மத்தியில், அரசியல் பற்றிய விழிப்புணர்வு இல்லை.இந்திய நடாளுமன்றம், சட்டசபையில் ஜாதிய இயக்கங்கள் உள்ளன. மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யார்? மாயாவதி யார்? ஜாதியை பின்னணியாக அவர்கள் கொண்டுள்ளனர். வன்னிய சமுதாய மக்கள் வட மாவட்டங்களில் ஒற்றுமையாக இருந்து இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அந்த சமூக மக்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர்.மக்களின் ஜீவாதாரமான கல்வி வேலை வாய்ப்பு உரிமைக்காக நமது கொங்கு சமுதாய மக்கள் போராடியது இல்லை. உழைக்கும் எண்ணம் கொண்ட இம்மகத்தான மக்கள் அரசியல் நுகர்வு இல்லாத சமூகமாக உள்ளனர்.காடுகளை களைந்து வேளாண் உற்பத்தி செய்யும் கொங்கு வேளாளர்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.


கொங்கு சமுதாய மக்கள் மத்தியில் ஆளுமை இல்லை. சொந்த மண்ணை கூட ஆண்ட பழக்கம் நமது சமூகத்திற்கு இல்லை. நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியபோதும், நம்மையே நாம் ஆள நினைக்கவில்லை, சிந்திக்கவில்லை. பாதிக்கப்படும் கொங்கு சமுதாய மக்கள் அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக வரலாறு இல்லை. இன உணர்வு, போராட்ட உணர்வு இல்லாமல் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகள் பாடுபட்டதன் விளைவு, நமது அமைப்பை அனைத்து கட்சியினரும் மிரட்சியோடு பார்கின்றனர். தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நம்மை கூட்டணியில் சேர்க்க அழைத்த வண்ணம் உள்ளனர்.


வரும் லோக்சபா தேர்தலில் நம் ஆதரவை தி.மு.க.,- அ.தி.மு.க., போன்ற கட்சிகள் எதிர்பார்க்கின்றன. மாநாடு முடிந்தவுடன் பேரவையின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டி, அக்கூட்டத்தில் எடுக்கப்படும் நமது கோரிக்கையை எந்த அரசியல் கட்சியினர் ஏற்கின்றனரோ அவர்களுடன் நமது கூட்டணி அமையும்.இதற்கு முன் கோவையில் நடந்த கூட்டம், அரசியலுக்கு சம்மந்தம் இல்லாத கூட்டம். தென்னங்கள் இறக்க அனுமதி, சாயக்கழிவு ஆற்றில் கலப்பதற்கு எதிரான போராட்டம் போன்றவை அறிவித்து, மேடை பிரிக்கும் முன்பே போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்தனர். நாமக்கலில் கூட்டம் நடத்திய போதும், அக்கூட்டம் முடிந்தவுடன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை போய் சந்தித்தனர் பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும். விஜயகாந்தை சந்திக்கவும் காத்துக்கிடந்தனர்.


அவர்கள் ஜாதிய வியாபாரிகள். அவர்களை தேர்தலில் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.ஒவ்வொரு ஓட்டும் நமது கூட்டணிக்கு வழங்க வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் எட்டு இடம், புதிய தமிழகம் கட்சிக்கு பத்து இடம், மக்கள் தேசம் கட்சிக்கு ஆறு இடம் ஒதுக்கப்பட்டது.நமது ஜாதியினருக்கு எங்கெங்கோ சிபாரிசு செய்தபோதும் சீட் எதுவும் ஒதுக்கப்படவில்லை. பின் ஒரே ஒரு சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது. பெருந்துறையில் போட்டியிட்டு அவரும் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். திரைத் துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓட்டளிக்கும் இழிவான நிலை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.தேர்தலில் கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் சமூக இயக்கங்களை ஒன்று திரட்டி போட்டியிட வேண்டும்.இவ்வாறு தனியரசு பேசினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:உ.தனியரசு&oldid=474767" இலிருந்து மீள்விக்கப்பட்டது