பரசிட்டமோல் நச்சுமை

வலிநீக்கி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு பரசிட்டமோல் நச்சுமை எனப்படும். உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல், பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் குறைந்து அமிலத்தன்மையைக் குருதி பெறுதல், இலகுவில் குருதிப்போக்கு ஏற்படக்கூடிய நிலை, கல்லீரல் – மூளை நலிவு. சில வேளைகளில் சுயமாக இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் சிகிச்சை வழங்கப்படாத நிகழ்வுகள் மரணத்தில் முடியலாம். [1]

பரசிட்டமோல் நச்சுமை
பரசிட்டமோல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம், நச்சியல்
ஐ.சி.டி.-10T39.1
ஐ.சி.டி.-9965.4
ஈமெடிசின்ped/7

நச்சுத்தன்மை

தொகு

நச்சுமையை உண்டாக்கவல்ல மருந்தின் அளவு வேறுபடக்கூடும். வயது வந்தோரில் ஏழு தொடக்கம் பத்து கிராமிற்கு மேற்பட்ட ஒருநேரப் பயன்பாடு அல்லது 150-200 மில்லிகிராம்/ கிலோகிராம் உடல் நிறை அளவிலான பயன்பாடு நஞ்சூட்டத்தை ஏற்படுத்தவல்லது. [2] 24 மணிநேரத்தில் வெவ்வேறு சிறிய மருந்தளவுகள் மேற்கூறிய மொத்த அளவைத் தாண்டுமாயினும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

தொகு

மூன்று கட்டங்களாக நச்சுத்தன்மை ஏற்படுவதைப் பிரிக்கலாம்.

  • முதலாவதாக, அளவுமிகைப்பாட்டின் பின்னர் ஒரு சில மணிநேரங்களுக்குள் ஏற்படுவது: குமட்டல், வாந்தி, வெளுப்பு, வியர்வை. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் முதல் 24 மணி நேரங்களில் தென்படுவதில்லை. மிகவும் அரிதாக, மிகவும் அதிகமான மருந்தளவுப் பயன்பாட்டின் பின்னர் ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம் அல்லது கோமா முற்கூட்டியே ஏற்படலாம்.
  • இரண்டாவது கட்டம் 24 தொடக்கம் 72 மணிநேரப் பொழுதில் நிகழ்பவை, இதன்போது கல்லீரல் பாதிப்படைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும், பொதுவாக கல்லீரல் கலங்கள் பாதிப்படைகின்றன. கல்லீரலுக்கு உண்டாகும் பாதிப்பு, பரசிட்டமோலின் வளர்சிதை வினைமாற்றப் பொருளான N-அசெட்டைல்-p-பென்சோகுவினோனிமைன் (NAPQI) எனும் பதார்த்தம் மூலம் நிகழ்கிறது, இதனால் கல்லீரலின் இயற்கை வேதிப்பொருளான குளுட்டாதியோன் சிதைக்கப்பட்டு கல்லீரல் கலங்களும் சேதமடைகின்றன, இதனையடுத்து கல்லீரல் செயலிழக்கின்றது. பாதிப்படைந்தவர் வலது கீழ் விலா என்புப் பகுதியில் வலியை உணருவார். இதன்போது கல்லீரலில் உயிர் வேதியற்பொருட்களின் அளவுகள் வேறுபாடடையத் தொடங்கும். துரித சிறுநீரகச் செயலிழப்பு இந்த நிலையின் போது ஏற்படலாம்.
  • மூன்றாம் கட்டம் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் ஏற்படுகிறது. இதன்போது கல்லீரல் இறப்பினால் ஏற்படக்கூடிய புற விளைவுகள் தென்படத் தொடங்கும். குருதி உறையாமை, குருதி வெல்லம் குறைவு, சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் – மூளை நலிவு, மூளை வீக்கம், குருதியில் நுண்ணுயிர் நச்சேற்றம், பிற அங்கங்கள் செயலிழப்பு இறுதியில் இறப்பு என்பன அவற்றுள் அடங்கும். ஆரம்ப சிகிச்சையின் மூலம் பழைய சாதாரண நிலைக்குத் திரும்ப சாத்தியக்கூறு உள்ளது.

நச்சுமைக்குரிய சூழ் இடர் காரணி

தொகு

மிதமிஞ்சிய நீண்டநாள் மதுபானப் பயன்பாடு, பட்டினி இருத்தல், வேறு சில மருந்துவகைகள் பயன்படுத்துதல், எ.கா: ஐசொனியாசிட் என்பன நச்சுமைக்குரிய சூழ் இடர் காரணியாகத் திகழ்கின்றன.

தடுப்பு

தொகு

சரியான மருந்தளவைத் தெரிந்திருத்தல்; ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15 மில்லிகிராமாகப் பயன்படுத்துதல். ஒரு நாளிற்கான பரசிட்டமோலின் அளவு நான்கு கிராம்களுக்கு மேல் செல்லக்கூடாது.

இத்தகைய விளைவுகளைத் தடுப்பதற்கு பரசிட்டமோல் மெதியோனைனுடன் சேர்த்து விற்கப்படல் உதவி புரியும்; மெதியோனைன் கல்லீரலில் குளுட்டாதியோனாக மாற்றப்படுகிறது.
வேறு வழிகளாவன; வாந்தி உண்டாக்கும் பொருளைச் சேர்த்தல், பரசிட்டமோலுக்குரிய விளம்பரங்களைக் குறைத்தல், மாத்திரைப் பெட்டியில் எச்சரிக்கை இடல். மேலும் ஒரு சிறந்த வழியாக, பரசிட்டமோலை வைத்தியரின் சிபாரிசுடன் மட்டுமே வேண்டக்கூடியவாறு மாற்றுதல். ஏனைய வலிநீக்கு மாத்திரைகளான அசுப்பிரின் அல்லது இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும், இவற்றுடன் ஒப்பிடுகையில் சரியான அளவுடன் பயன்படுத்தும்போது பக்க விளைவை ஏற்படுத்தாத மருந்தாக . பரசிட்டமோல் விளங்குகிறது.

சிகிச்சை

தொகு

சிகிச்சையின் நோக்கம் பரசிட்டமோலை உடலில் இருந்து அகற்றி குளுட்டாதியோனை ஈடுசெய்வதாகும். அளவு மிகைப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர் உடனடியாகக் கொண்டுவரப்பட்டிருந்தால், பரசிட்டமோல் மேலும் அகத்துறிஞ்சப்படுவதைத் தடுப்பதற்கு கிளர்வுற்ற கரி (activated charcoal) பயன்படுத்தலாம், மாற்றுமருந்தாக N-அசெட்டைல்சிஸ்டெய்ன் உபயோகிக்கப்படுகிறது. கல்லீரல் மிகவும் பாதிப்புற்றால் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை அவசியமானதாகும். உடனடி சிகிச்சை நல்ல விளைவைத் தரும் அதேசமயம் தாமதமான சிகிச்சை கல்லீரலைப் பாதிப்பதுடன் இறப்பையும் உண்டாக்க வழிவகுக்கும்.

உசாத்துணைகள்

தொகு
  1. Paracetamol_toxicity. wikipedia english.http://en.wikipedia.org/wiki/Paracetamol_toxicity.
  2. Susan E Farrell, MD,. Toxicity, Acetaminophen. eMedicine. http://emedicine.medscape.com/article/820200-overview.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசிட்டமோல்_நச்சுமை&oldid=1357394" இலிருந்து மீள்விக்கப்பட்டது