பரித்பூர் மாவட்டம்

வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்திலுள்ள மாவட்டம்


பரித்பூர் மாவட்டம் (Faridpur District) (வங்காள மொழி: ফরিদপুর জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பரித்பூர் நகரம் ஆகும். [1]

வங்காளதேசத்தில் பரித்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள் தொகு

பரித்பூர் மாவட்டத்தின் வடக்கில் மணிகஞ்ச் மாவட்டம் மற்றும் ராஜ்பாரி மாவட்டங்களும், தெற்கில் கோபால்கஞ்ச் மாவட்டமும், கிழக்கில் முன்சிகஞ்ச் மாவட்டம், மதாரிபூர் மாவட்டம் மற்றும் டாக்கா மாவட்டத்தின் சில பகுதிகளையும், மேற்கில் மகுரா மாவட்டம், நராய்ல் மாவட்டம் மற்றும் ராஜ்பாரி மாவட்டமும் எல்லைகளாக கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

2052.86 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பரித்பூர் சதர், மதுகாளி, போல்மாரி, அல்பாந்கா, சால்தா, நகர்கந்தா, வங்கா, சர்வத்திரசன், சர்தார்பூர் என ஒன்பது துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் பரித்பூர், போல்மாரி, நகர்கந்தா மற்றும் வங்கா என நான்கு நகராட்சி மன்றங்களையும், அறுபத்தி ஏழு கிராம ஒன்றியக் குழுக்களையும், 564 வருவாய் கிராமங்களையும், 919 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7800 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0631 ஆகும். இம்மாவட்டம் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

பொருளாதாரம் தொகு

இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. இங்கு பாயும் தாலேஷ்வரி ஆறு, பத்மா ஆறு, மெக்னா ஆறு, இசாமதி ஆறு, குமார் ஆறு, கோராய் ஆறு, சந்தனா ஆறுகளால் நீர் வளமும், மண் வளமும் மிகுந்துள்ளதால், நெல், சணல், பேரீச்சம் மரம், தென்னை, எண்ணெய் வித்துக்கள், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல் தொகு

2052.86 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 19,12,969 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,42,245 ஆகவும், பெண்கள் 9,70,724 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.84% ஆக உள்ளது. பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 932 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 49% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Masud Reza (2012). "Faridpur District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Faridpur District Information
  3. Community Report Faridpur Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரித்பூர்_மாவட்டம்&oldid=3219875" இலிருந்து மீள்விக்கப்பட்டது