பல்லவர் காலத் தூண்கள்
தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையில் பல்லவர் காலத் தூண்கள் என்பன கிபி 6ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை நிலவிய பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில், குறிப்பாகக் கோயில் கட்டிடங்களில் அமைக்கப்பட்ட தூண்களைக் குறிக்கும். தமிழ் நாட்டில் கல்லாலான கட்டிடங்கள் முதன் முதலில் பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டன. தொடக்ககாலக் கட்டிடங்கள் குடைவரைக் கோயில்களே. குடைவரைகளைத் தொடர்ந்து பல்லவர் காலத்தில் கற்றளிகளும் அமைக்கப்பட்டன. இக்காலத்தைச் சேர்ந்த முந்திய தூண்கள் எளிமையானவை. இக்காலத்துக்கு முந்திய மரத் தூண்களின் வடிவமைப்பைத் தழுவியவை. காலப்போக்கில் இவற்றின் சிக்கல் தன்மை அதிகரித்துச் செல்வதைக் காணலாம்.[1]
அமைப்பு
தொகுபல்லவர் காலத் தூண்களின் முதல் வளர்ச்சிக் கட்டத்தைச் சேர்ந்த தூண்களின் தண்டு மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. கீழ்ப்பகுதியும், மேற்பகுதியும் சதுரமான வெட்டுமுகம் கொண்டவை. இவற்றுக்கிடையே அமைந்த நடுப்பகுதி எண்கோண வெட்டுமுகம் கொண்டது. இது எண்கோணச் சதுரத் தூண் என அழைக்கப்படுகிறது.[2] தண்டுக்கு மேல் போதிகை உள்ளது. செவ்வகக் குற்றிபோல் அமைந்த இப்போதிகையின் கீழ் மூலைப் பகுதி வளைவான வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த மாமல்லபுரக் குடைவரைகள் சிலவற்றில் இவ்வைகைத் தூண்கள் உள்ளன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் தூணின் தண்டின் மேற்பகுதியில் மேலும் சில உறுப்புக்கள் சேர்க்கப்பட்டன. அடுத்த கட்டத்தில் தூணின் அடிப்பகுதி இருந்த நிலைச் சிங்கமாகச் செதுக்கப்பட்டு அது தூணைத் தாங்கியிருப்பது போல் செய்யப்பட்டது. இது சிம்மத்தூண் எனப்படுகிறது.[3] அதற்கு மேல் தூண் வட்டமான வெட்டுமுகம் கொண்டிருந்தது. இறுதிக் கட்டத்தில் தூணின் அடிப்பகுதி இரண்டு கால்களில் எழுந்து நிற்கும் சிங்கமாகச் செதுக்கப்பட்டது.