பள்ளித்தனம் லூகா மத்தாய்

இந்திய விவசாய முன்னோடி

பள்ளித்தனம் லூகா மத்தாய் (Pallithanam Luca Matthai) பள்ளித்தனத்து மாதச்சன் என்றும் அழைக்கப்படும் இவர், 1880 இல் பிரிட்டிசு இந்தியாவின் குட்டநாட்டின் கைனாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

குட்டநாட்டில் உள்ள ஏரி சாகுபடியின் ( வேம்பநாட்டு ஏரியிலிருந்து சாகுபடி நிலத்தை மீட்டெடுப்பது) முன்னோடிகளில் இவரது தந்தை மத்தாய் லூகா பள்ளித்தனம் இருந்தார். [1] இவரது தந்தையின் மரணத்திற்கு பின்னர் குடும்பத்தின் நிலங்கள் 18 வயதான லூகா மத்தாய்க்கு வழங்கப்பட்டது.

எரி நில மீட்டெடுப்பு தொகு

மொத்த காயல் நிலத்தின் மூன்றில் ஒரு பங்கின் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தாய் தலைமை தாங்கினார். காயல் சாகுபடியின் இவரது முதல் முயற்சி செறுகரை ஏரி மீட்டெடுப்பதாகும்.

1898-1904 காலப்பகுதியில், இவர் பள்ளித்தனம் மூவாயிரம் ஏரியையும், மடத்தில் ஏரியையும் மீட்டெடுத்தார். ஆனால் 1904 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் ராஜா மீட்புக்கு தடை விதித்ததால் மேலும் முன்னேற முடியவில்லை. இந்த தடை 1914 இல் நீக்கப்பட்டது. அதன் பிறகு மத்தாயும் குட்டநாட்டில் உள்ள சில முக்கிய குடும்பங்களும் , 2,400 ஏக்கர் (970 ஹெக்டேர்) பரப்பளவிலான இப்பகுதி ஏரிகளை மீட்டெடுத்தனர். இது குட்டநாட்டில் மிகப்பெரிய காயல் நிலம். எச் பகுதி காயல் (1917), ஆர் பகுதி காயல் (1921) ஆகியவை இவரது மற்ற முக்கிய மீட்புகளாகும்.

பிரஜா சபை உறுப்பினர் தொகு

மத்தாய், திருவிதாங்கூரின் மூலம் திருநாளின் பிரஜா சபையின் (பிரபல சட்டமன்றம்) உறுப்பினராக பணியாற்றினார். மேலும் குட்டநாட்டில் கூட்டுறவு விவசாய இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். இவரது வாழ்க்கை முதல் தலைமுறை, காயல் ராஜாவின் குட்டநாட்டின் சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. (காயல் ராஜா என்பது குட்டநாடு பிராந்தியத்தில் உள்ள முக்கிய காயல் விவசாயிகளைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்). [2]

போராட்டம் தொகு

1931 ஆம் ஆண்டில், குட்டநாட்டில் விவசாய சமூகத்தை வலுப்படுத்தும் பொருட்டு, குட்டநாடு விவசாயச் சங்கத்தை நிறுவினார். விவசாயக் கடன் நிவாரணச் சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட கடன் நிவாரணப் போராட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.

தொண்டுப் பணி தொகு

கைனாடி கிராமத்தில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயம் இவர் நன்கொடையளித்த நிலத்தில் நிற்கிறது. பிரஜா சபையின் உறுப்பினராக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 1921 இல் கைனாடியில் ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார். ஆரம்ப ஆண்டுகளில் இவர் அதன் மேலாளராக செயல்பட்டார். இந்த பள்ளி பின்னர் ஏ.ஜே. ஜான் நினைவு உயர்நிலைப்பள்ளி என்று பெயரிடப்பட்டது.

அனைத்து கேரள கத்தோலிக்க காங்கிரசின் நிறுவனர்களில் மத்தாய் இருந்தார்.

சமூகச் சீர்த்திருத்தம் தொகு

இவர் ஒரு பிரபுத்துவ மரபுவழி சிரிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கேரள சமுதாயத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான தனது முயற்சிகளில் இவர் தனது சமகாலத்து சிறந்த சமூக சீர்திருத்தவாதியான அய்யன்காளியை தீவிரமாக ஆதரித்தார். இவர் அய்யன்காளியை பள்ளித்தனத்தின் மூதாதையர் வீட்டிற்கு அழைத்தார். ஒரு பெரிய நிகழ்வில், பல படகுகளுடன், அய்யன்காளி, இவரது ஆதரவாளர்களுடன், பள்ளித்தனம் வீட்டை அடைந்தார். அங்கு சாதியத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக 'சமபந்தி போசனம்' செய்தார்.

இறப்பு தொகு

இவர் 1962இல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. G S Unnikrishanan Nair (Sep 2013). "Kuttanad; Our Heritage Our wealth". KERALA CALLING: pp. 16–20 இம் மூலத்தில் இருந்து 27 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927092458/http://www.kerala.gov.in/docs/publication/2013/kc/september_13/16.pdf. பார்த்த நாள்: 26 Sep 2013. 
  2. GOVERNMENT OF KERALA (n.d.). "KLA PROCEEDINGS". pp. NA. http://klaproceedings.niyamasabha.org/index.php?pg=advanced_search_combo. பார்த்த நாள்: 26 Sep 2013.