பவானி கைத்தறி ஜமக்காளம்

பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இத்தரை விரிப்புகள் (படுக்கை விரிப்புகள்) மிகவும் தடிமனானவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. இது பவானி தரை விரிப்பு என்பது பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம் [சான்று தேவை]. இவ்வகை தரை விரிப்பு பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

தரை விரிப்பு நெசவுத் தொழில்

தொகு

ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழில் புகழ்பெற்றதாகும். இந்த நகரைச் சுற்றி உள்ள குருப்பநாயக்கன் பாளையம், சேத்துநாம்பாளையம், பெரியமோளப்பாளையம், ஜம்பை போன்ற கிராமங்களில் தரை விரிப்பு நெசவு நடைபெறுகிறது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தரை விரிப்பு நெய்யும் கைதறிகள் இயங்குகின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தரை விரிப்பு நெசவுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். தரை விரிப்பு நெசவுக்கு 2க்கு 10, 2க்கு 6 மற்றும் 10ம் எண் நூல் இரகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பருத்தி, அக்ரலின், ஆட்ஸ் சில்க் ஆகிய மூன்று ரகங்களில் தரை விரிப்பு தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 க்கு 20 அங்குலம் முதல் 16 க்கு 30 அடி வரை உள்ள தரை விரிப்பு தினமும் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

தொகு

பவானி தரை விரிப்பு தமிழ் நாட்டில் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராட்டிரம் மற்றும் பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை. இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி தரை விரிப்புகள் பெரிதும் விரும்பப்படுவதோடல்லாமல் அவை மரபின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

உசாத்துணை

தொகு
  1. பவானியில் ஜமுக்காளம் சீஸன் ஆரம்பம்
  2. ஆட்கள் பற்றாக்குறையால் அழியும் பாரம்பரிய தொழில்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_கைத்தறி_ஜமக்காளம்&oldid=3220131" இலிருந்து மீள்விக்கப்பட்டது