பத்திரிசு லுமும்பா
பத்திரிசு எமெரி லுமும்பா (Patrice Émery Lumumba, 2 சூலை 1925 – 17 சனவரி 1961) ஆப்பிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்சியத்திடமிருந்து தமது நாட்டுக்கு சூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
பத்திரிசு லுமும்பா Patrice Lumumba | |
---|---|
கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் 1வது பிரதமர் | |
பதவியில் சூன் 24, 1960 – செப்டம்பர் 14, 1960 | |
Deputy | அன்டோன் கிசெங்கா |
முன்னையவர் | பெல்ஜிய கொங்கோ |
பின்னவர் | யோசப் இலேயோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஒனலூவா, கட்டக்கொக்கொம்பே, பெல்ஜிய கொங்கோ | 2 சூலை 1925
இறப்பு | 17 சனவரி 1961 எலிசபெத்வில், கட்டாங்கா | (அகவை 35)
அரசியல் கட்சி | கொங்கோ தேசிய இயக்கம் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுலுமும்பா பெல்ஜிய கொங்கோவில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். 1955 இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்குப் படிப்பு காரணமாகப் பெல்ஜியம் சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் சூலை 1956 இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி 'கொங்கோ தேசிய இயக்கம்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை 1958 இல் ஆரம்பித்துப் பின்னர் அதன் தலைவரும் ஆனார். திசம்பர் 1958 இல் கானாவில் இடம்பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா கலந்து கொண்டார்.
லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு 1960 சனவரி 18 இல் பிரசல்சில் நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். சனவரி 27 இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே 1960 இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து 1960 சூன் 23 இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை 1960 சூன் 30 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்.[1]
லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல ஐரோப்பியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்[2].
சோவியத் ஆதரவு
தொகுகட்டாங்கா மாகாணம் சூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் பெல்ஜியத்தின் ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. ஐநா படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா சோவியத் ஒன்றியத்தின் உதவியைக் கோரினார்.
கைது
தொகுசெப்டம்பர் 1960 இல் அந்நாட்டின் அதிபர் அதிபர் காசா-வுபு, சட்டத்துக்கு மாறாக லுமும்பாவின் அரசைக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். 1960 செப்டம்பர் 14 இல் சிஐஏஇன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பா அரசைப் பதவியிலிருந்து கலைத்தார்.[2] லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஐநா படைகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலிலிருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் 1960 திசம்பர் 1 இல் 'போர்ட் ஃபிராங்கி' என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஐநா அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கின்ஷாசா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராகச் சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்பட வேண்டும் என ஐநா செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். சோவியத் ஒன்றியம், லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
ஐநா பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாகச் சோவியத் ஒன்றியம் 1960 திசம்பர் 14 இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்குக் கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தைச் சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.
லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
லுமும்பாவின் இறப்பு
தொகு1961 சனவரி 17 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்.[3]. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கேப்டன் யூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்சூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் ஆவர்.[4] கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் 1961 சனவரி 17 இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.
மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் வானொலி தகவல் தந்தது.
லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜியத் தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[1]
நினைவுச் சின்னங்கள்
தொகு- சோவியத் ஒன்றியத்தில் சோவியத் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் 1961 இல் "பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது[5].
- ஆப்பிரிக்காவில் பல குழந்தைகளுக்கு "லுமும்பா" என்ற பெயர் வைக்கப்பட்டது[6].
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Independence Day Speech". Africa Within. பார்க்கப்பட்ட நாள் சூலை 15, 2006.
- ↑ 2.0 2.1 Larry Devlin, Chief of Station Congo, 2007, Public Affairs, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58648-405-2
- ↑ "Correspondent:Who Killed Lumumba-Transcript". BBC. 00.35.38-00.35.49
- ↑ "Correspondent:Who Killed Lumumba-Transcript". BBC.
- ↑ http://www.cnn.com/WORLD/9707/26/russia.university/
- ↑ http://news.bbc.co.uk/1/hi/world/africa/3321575.stm