பாண்டில் என்னும் சொல் வெண்ணிறத்தைக் குறிக்கும். [1] வெண்ணிற மூடாக்கு வண்டி, வெண்ணிற விரிப்புள்ள கட்டில், வெண்ணிறமுள்ள சங்கு, வெண்ணிறத் தோலால் போர்த்தப்பட்ட யாழ்ப்பெட்டி, மகளிர் இடுப்பில் அணிந்துகொள்ளும் வெண்ணிற ஒட்டியாணம், வெள்ளி-விளக்கு முதலான பொருள்களை உணர்த்தும். பாண்டில் என்னும் பெயர் கொண்ட ஓர் அரசனும் இருந்தான்.

வெண்ணிற மூடாக்கு வண்டி
  • பாண்டில் என்பது குதிரைவண்டி. இதனை நல்லியக்கோடன் பாணர்க்கும் [2] செல்வக் கடுங்கோ வாழியாதனும், [3] இளஞ்சேரல் இரும்பொறையும் [4] புலவர்க்கும் வழங்கினர்.
  • போரில் பயன்படுத்தப்படும் வண்டி. [5]
  • மகளிர் ஏறிச் செல்லும் வண்டி. இளம்பாண்டில் தேர் ஊர – கலித்தொகை 109-4
வண்டி வேறுபாடுகள்
வையம் என்பது மாட்டுவண்டி. பாண்டில் என்பது குதிரை பூட்டிய வெள்ளை-வண்டி. தேர் என்பது மணியோசையுடன் செல்லும் வண்டி. [6]
வெண்ணிற விரிப்புள்ள கட்டில்
  • அரசன் அந்தப்புரத்தில் அரசியொடு உறங்கும் கட்டில் [7]
  • அரசனின் முரசு வைக்கும் (வெண்ணிறக்) கட்டில் [8]
வெண்ணிறமுள்ள சங்கு
ஒலி பெருக்கியாக ஊதப்படும் சங்கு. பகர் குரல் பாண்டில் அகவுநர் - பரிபாடல் 15-42
வெண்ணிறத் தோல் போர்த்திய யாழ்ப்பெட்டி
யாழை மூடி வைக்கும் பெட்டி [9] வண்ணிறத் தோல்பெட்டி. [10]
மகளிர் இடுப்பில் அணியும் வெண்ணிற ஒட்டியாணம்
பாண்டில் என்பது மகளிர் வயிற்றுக்குக் கீழ் இடையில் அணியும் பொன்னணி. (ஒட்டியாணம்) [11] [12] [13] [14]
வெள்ளி விளக்கு
பாண்டில் என்பது ஒருவகை விளக்கு. [15]

பாண்டில் அரசன் தொகு

பாண்டில் என்பவன் அரிசில் என்னும் ஊரின் அரசன். இவனை ‘இசைவெங்கிள்ளி’ என்னும் சோழன் வென்றான். [16]

அடிக்குறிப்பு தொகு

  1. பாண்டில் போலப் பகன்றை வெண்ணிறத்தில் பூ மலரும். நற்றிணை 86
  2. மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன்தாள் வான்முகப் பாண்டில் வலவனொடு நல்கி - சிறுபாணாற்றுப்படை 260
  3. பதிற்றுப்பத்து 64
  4. பதிற்றுப்பத்து 90
  5. பொலந் தும்பைக் கழல் பாண்டில் - புறம் 97-15
  6. வையமும் பாண்டிலும், மணித்தேர்க் கொடுஞ்சியும் - சிலப்பதிகாரம் 14-168
  7. பெரும்பெயர்ப் பாண்டில் - நெடுநல்வாடை 121
  8. சிலப்பதிகாரம் 26-194
  9. நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில் - மலைபடுகடாம் அடி 4
  10. பகன்றை ... தோல் எறி பாண்டிலின் வாலிய மலர - அகம் 217
  11. அவ்வயிற்று இளம்பொன் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப - அகம் 376.
  12. பொலம்பசும் பாண்டில் காசுநிறை அல்குல் – ஐங்குறுநாறு 310,
  13. பொன் செய் பாண்டில் பொலங்கலம் – ஐங்குறுநூறு 316.
  14. ஒண் சுடர்ப் பாண்டில் பொன் சுடர் போல – ஐங்குறுநூறு 405
  15. பதிற்றுப்பத்து 52
  16. நற்றிணை 141
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டில்&oldid=1249904" இலிருந்து மீள்விக்கப்பட்டது