பாய்ட்டிங்கரின் உலக வரைபடம்

பாய்ட்டிங்கரின் உலக வரைபடம் (Tabula Peutingeriana - Peutinger table - Peutinger Map) என்பது உரோமைப் பேரரசுக் காலத்தில் நிலவிய நெடுஞ்சாலைப் போக்குவரவுத் தொடர்பைச் சித்திர வடிவில் விளக்குகின்ற புகழ்பெற்ற வரைபடம் ஆகும். இது ஆசுத்திரிய நாட்டின் தேசிய நூலகத்தின் விலைமிக்க ஒரு சொத்தாக மதிக்கப்படுகிறது.

பாய்ட்டிங்கரின் உலக வரைபடம் - ஒரு பகுதி —மேலிருந்து கீழாக: டால்மாசியா கடற்கரை; ஆட்ரியாட்டிக் கடல்; தெற்கு இத்தாலி; சிசிலித் தீவு; நடுக்கடல் பகுதியின் ஆப்பிரிக்க கரையோரம்

இந்த உலக வரைபடத்தின் மூலப் படைப்பின் ஒரே பிரதி இப்போது உள்ளது. அது கிபி 4-5 நூற்றாண்டளவில் இற்றைப்படுத்தப்பட்டது.[1]

இந்த உலக வரைபடத்தில் கீழ்க்காணும் உலகப் பகுதிகள் சித்திரமாக விவரிக்கப்படுகின்றன:

  • ஐரோப்பா
  • வடக்கு ஆப்பிரிக்கா
  • நடு ஆசியா
  • பாரசீகம்
  • இந்தியா
  • இலங்கை
  • சீனாவின் ஒரு சிறு முனை

இந்த உலக வரைபடம் "பாய்ட்டிங்கர் உலக வரைபடம்" என்னும் பெயரால் அறியப்படுகிறது. இதைக் கவனமாகப் பாதுகாத்து, வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் 15-16 நூற்றாண்டுகளில் வாழ்ந்த செருமானிய அறிஞர் கோன்ராடு பாய்ட்டிங்கர் (Konrad Peutinger) (காலம்: 1464-1547) என்பவர் ஆவார். இவர் தலைசிறந்த மனிதநல மேம்பாட்டாளரும் தொல்கலை வல்லுநரும் ஆவார். இந்த வரைபடத்தை இவருக்கு வழங்கியவர் அவருடைய நண்பரும் முதலாம் மாக்சிமிலியன் அரசரின் தலைமை நூலகருமாக இருந்த கோன்ராடு கெல்ட்டெசு (Konrad Celtes) என்பவர் ஆவார்.

பாய்ட்டிங்கர் உலக வரைபடத்தின் காலம்

தொகு

இந்த உலக வரைபடத்தின் காலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டு என்று அறிஞர் கணிக்கின்றனர்.[2] மேலும், இந்த வரைபடம் பண்டைய உரோமைப் பேரரசின் நெடுஞ்சாலைகளைக் காட்டினாலும், பிற்பட்ட நூற்றாண்டுகளில் இற்றைப்படுத்தப்பட்டதும் தெரிகிறது.

இந்த உலக வரைபடத்தில் காண்ஸ்டாண்டிநோபுள் காட்டப்பட்டுள்ளது. அந்நகரம் எழுப்பப்பட்டது கிபி 328ஆம் ஆண்டில் ஆகும். ஆனால் அங்கு பொம்பேயி (Pompeii) நகரமும் காட்டப்பட்டுள்ளது. அந்நகரமோ வெசூவியசு (Vesuvius) எரிமலை கிபி 79இல் வெடித்துத் தீப்பிழம்பைக் கக்கியதன் காரணமாக அழிந்துபோன பொம்பேயி மீண்டும் கட்டப்படவில்லை.

அதுபோலவே, இத்தாலியின் ரவேன்னா (Ravenna) நகர் இந்த உலகப் படத்தில் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதும் கருதத்தக்கது. ரவேன்னா நகரம் கிபி 402இல் இருந்து மேற்கு உரோமைப் பேரரசின் தலைமையிடமாக விளங்கியது. எனவே இந்த வரைபடம் கிபி 5ஆம் நூற்றாண்டில் இற்றைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தெற்கு செருமனியில் கிபி ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அழிந்துபட்ட சில நகரங்கள் இந்த உலக வரைபடத்தில் உள்ளதால் அது கிபி ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் இற்றைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர் முடிவுசெய்கின்றனர்.

பாய்ட்டிங்கர் உலக வரைபடத்தின் முன்னோடி

தொகு

இந்த உலக வரைபடத்தின் முன்னோடியாக இருந்த வரைபடம் உரோமைப் பேரரசனான அகுஸ்துஸ் (Augustus) என்பவரின் நண்பரும் உறவினருமான மாற்குசு விப்சானியுசு அக்ரிப்பா (Marcus Vipsanius Agrippa) (காலம்: கிமு 64 - கிமு 12) என்பவரின் வழிகாட்டலின் கீழ் வரையப்பட்டது. இந்த அக்ரிப்பா என்பவர்தான் உரோமையில் புகழ்பெற்ற பாந்தியன் (Pantheon) என்னும் அனைத்துக் கடவுளர் கோவிலைக் கட்டியவர். அகுஸ்துஸ் இறந்ததும், அந்த வரைபடம் உரோமை நகரில் அமைதிப் பீடம் (Ara Pacis) என்று அழைக்கப்பட்ட இடத்தின் அருகே விப்சானியுசு நினைவு வாயிலில் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

பண்டைய உரோமையில் உருவாக்கப்பட்ட உலக வரைபடமே பாய்ட்டிங்கர் உலக வரைபடத்திற்கு மூலம் என்பது கிளென் போவர்சாக் போன்ற அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது.[3][4]

வரைபடம் கண்டெடுக்கப்பட்டது

தொகு

இந்த வரைபடத்தை செருமனியின் வோர்ம்சு நகரில் (Worms) ஒரு நூலகத்தில் கண்டெடுத்தவர் கோன்ராடு கெல்ட்டெசு (Konrad Celtes) என்பவர் ஆவார். அதை அவர் தம் நண்பரான பாய்ட்டிங்கரிடம் 1508இல் ஒப்படைத்தார். இன்று இந்த உலக வரைபடம் வியன்னா நகரில் ஆசுத்திரிய நாட்டு மைய நுலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.[5]

வரைபடத்தின் விளக்கம்

தொகு

உரோமைப் பேரரசுக் காலத்தில் சாலைத் தொடர்புகள் எவ்வாறு இருந்தன என்பதைக் காட்டுகின்ற ஒரே வரைபடம் இந்த பாய்ட்டிங்கரின் உலக வரைபடம் ஆகும். இதனை 13ஆம் நூற்றாண்டில் மிக்க கவனத்தோடு படி எடுத்தவர் கோல்மார் (Colmar) என்ற பெயர்கொண்ட ஒரு புனித சாமிநாதர் சபைக் கிறித்தவத் துறவி ஆவார். இது தோலில் வரையப்பட்ட ஓர் இணைப்புச் சுருள்சுவடி (parchment scroll) ஆகும். அதன் உயரம் 0.34 மீ., நீளம் 6.75 மீ. இதன் மொத்த பகுதிகள் பதினொன்று. மூலத்தின் முதல் பகுதி கிடைக்கவில்லை. இதற்கு முன் வரையப்பட்டிருந்த ஒரு மூல வரைபடத்தின் பிரதி இது.

இந்த வரைபடத்தில் பண்டைய உரோமையர் காலத்திய பல குடியேற்றங்களும் நகர்களும் காட்டப்படுகின்றன. அந்நகர்களை இணைக்கின்ற சாலைகள் காட்டப்படுகின்றன. மேலும் அப்பகுதிகளில் ஓடுகின்ற ஆறுகள், அங்குள்ள மலைகள், காடுகள் மற்றும் கடல்கள் போன்றவையும் காட்டப்பட்டுள்ளன. எசுப்பானியா நாட்டிலிருந்து இந்தியா, இலங்கை வரை இந்த வரைபடத்தில் உள்ளன.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த வரைபடத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே உள்ள தூரமும் அங்கு குறிக்கப்படுகிறது. உரோமைப் பேரரசின் மூன்று முக்கிய நகரங்களான உரோமை, காண்ஸ்டாண்டிநோபுள், அந்தியோக்கியா ஆகியவற்றிற்குச் சிறப்பான தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்மூன்று நகரங்களும் தனிப்பட்ட விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ளன.

நவீன கால நில வரைபடங்களுக்கும் இந்த பாய்ட்டிங்கர் உலக வரைபடங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் எளிதில் அடையாளம் காணமுடியும். இந்த வரைபடத்தில் காண்கின்ற பெயர்களும் விளக்கங்களும் இலத்தீன் மொழியில் உள்ளன. ஐரோப்பிய நடுக்காலத்தில் பயன்படுத்திய செருமானியப் பாணி எழுத்துமுறை இங்கே கையாளப்படுவதால் சில எழுத்துக்கள் இன்று அச்சில் காணப்படுகின்ற இலத்தீன் எழுத்துமுறையிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கிறது. ஆனால் அந்த வேறுபாடுகளை எளிதில் கண்டுகொள்ளலாம்.

இந்த வரைபடத் தோற்றத்திலும் மாறுபாடுகள் உண்டு. நிலப்பகுதிகளும் நீர்ப்பகுதிகளும் இயல்பாகக் காட்டப்படாமல் தட்டையாக விரித்துக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மத்தியதரைக் கடல் என்று அழைக்கப்படுகின்ற நடுநிலக் கடல் பார்வைக்கு ஒரு கடலாகத் தோன்றாமல் தட்டையாக்கப்பட்ட ஓர் ஆறு போன்று தோற்றம் அளிக்கிறது.

இந்த வரைபடத்தில் ஆங்காங்கே சில நகரங்களில் படங்கள் உள்ளன. அந்த இடங்களில் தங்கு விடுதிகள், ஓய்விடங்கள், குதிரைகளைப் பாதுகாப்பாக வைக்கும் இடங்கள் உண்டு என்பது பொருள். மேலும், அரசு தரப்பிலோ தனியாகவோ செய்தி கொண்டு செல்வோர் அங்கு தங்கிச் செல்லவும் செய்தியை அளிக்கவும் வசதி உண்டு என்பதும் காட்டப்படுகிறது.

இன்று வழக்கத்திலுள்ள நிலப்படங்களை நாம் பார்க்கும்போது வடக்கு-கிழக்கு என்று வைத்துப் பார்ப்போம். ஆனால் இந்த வரைபடத்தில் மேற்கு-கிழக்கு என்று உள்ளது. இதற்குக் காரணம் இந்த வரைபடத்தை எடுத்துச் செல்லும் பயணி அதை எளிதாக ஒரு பையில் இட்டுச் செல்லும் வகையில் அதை இடப்புறம்-வலப்புறமாகச் சுருட்டி வைத்துக்கொள்ளலாம். எனவே இந்த வரைபடத்தின் உயரம் 34 செ.மீ. மட்டுமே. ஆனால் அதன் நீளம் சுமார் 7 மீட்டர்.

இந்த வரைபடத்தின் நோக்கம் இதைப் பயணிகள் எளிதாகப் பயன்படுத்த வழிசெய்வதாகும். இதில் அக்கால உரோமைப் பேரரசின்போது இருந்த பயணப்பாதைகளும் சாலைகளும் சிவப்பு நிறத்தில் காட்டப்படுகின்றன. அவ்வப்போது அந்த சிவப்புக் கோடுகளின் ஊடே சிறு வளைவுகளைக் காணலாம். அவை பயணிகள் ஓய்வெடுக்கும் இடங்களைக் குறிக்கின்றன. ஒரு வளைவுக்கும் அடுத்த வளைவுக்கும் இடையே உள்ள தூரம் ஒரு நாளைய பயணத் தூரம் ஆகும். ஆங்காங்கே வழிநெடுக கட்டடங்கள் படமாகத் தரப்படுகின்றன. அந்த இடங்கள் இன்றைய சுற்றுலாப் பயணியர் இல்லம் போன்றவை. அங்கு பயணிகள் இரவு தங்கவும், வெந்நீரில் குளித்து ஓய்வெடுக்கவும் வசதி இருந்தது. இக்குறிப்புகள் எல்லாம் இந்த வரைபடத்தில் இலத்தீன் மொழியில் உள்ளன. அரசு ஊழியர்கள், செய்தி கொண்டு செல்வோர் மற்றும் பயணிகளுக்கு அங்கு வசதிகள் இருந்தன.

இப்படத்தில் காட்டப்படுகின்ற சில நகர்களில் உள்ள கட்டடங்களில் சில விரிந்த முற்றங்கள் கொண்டுள்ளன. அவை இக்காலத்திய சொகுசு தங்குமிடங்களுக்கு இணையானவை.

வரைபடத்தின் நடுவில் உரோமை நகர்

தொகு

இந்த வரைபடத்தின் நடுவில் உரோமை நகர் அரச மாட்சியோடு வீற்றிருக்கக் காணலம். அந்நகரம் ஓர் அரசிபோல உருவகிக்கப்பட்டு, தலையில் முடிசூடி, அரியணையில் வீற்றிருக்கிறது. அப்படத்திலிருந்து பல திசைகளிலும் சாலைகள் செல்கின்றன. "எல்லா வழித்தடங்களும் உரோமைக்கு இட்டுச் செல்கின்றன" என்னும் கூற்றை மெய்ப்பிப்பது போல் தோற்றம் ஏற்படுகிறது. அங்கே காட்டப்படுகின்ற நெடுஞ்சாலைகளுள் சில இன்றளவும் செயல்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆப்பியா சாலை (via appia), அவுரேலியா சாலை (via aurelia) ஆகியவற்றைக் கூறலாம்.

பயணிகள் வழிகாட்டி

தொகு

பயணிகளுக்கு வழிகாட்டியாக அமைந்த இந்த வரைபடம் ஒரே சுருளேடாக இருந்தது. பின்னர், அதை நன்முறையில் பாதுகாக்கும் வகையில் அது 1863ஆம் ஆண்டில் 11 பகுதிகளாகக் கிழிக்கப்பட்டது. அப்பகுதிகளுக்கு முந்திய பகுதி ஒன்று இருந்திருக்க வேண்டும் அது கிடைக்கவில்லை. அந்த முதல் பகுதியில் உரோமைப் பேரரசின் பகுதிகள் எசுப்பானியா, பிரித்தானியத் தீவுகள், வட மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப் பகுதி போன்றவற்றை உள்ளடக்கிய வரைபடம் இருந்தது. அது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை 1898இல் பண்டைய வரைபடத்தின் பாணியில் உருவாக்கி இணைத்தார்கள்.

பாய்ட்டிங்கரின் வரைபடம் உரோமைப் பேரரசை மட்டும் காட்டவில்லை. மாறாக ஆசியாவில் இந்தியா, இலங்கை, பர்மா, மாலத்தீவுகள் மற்றும் சீனாவின் ஒரு முனை ஆகியவற்றையும் காட்டுகிறது. அக்கால மக்களுக்குத் தெரிந்த உலகம் அங்கே உள்ளது.

இந்த வரைபடத்தில் நகரங்களும் சாலைகளும் துல்லியமாகத் தரப்படவில்லை. அதன் நோக்கம் பயணிகளுக்குப் பயன்தரும் விவரங்களை அளிப்பது ஆகும். பயணிகளுக்குப் பயனில்லாதவை, எடுத்துக்காட்டாக, கடல்கள், ஆறுகள், பாலைநிலங்கள், மலைத் தொடர்கள் போன்றவை சுருங்கிய வடிவிலேயே தரப்படுகின்றன. மாறாக, நெடுஞ்சாலைகள் விளக்கமாக உள்ளன.

சாலைகளின் தூரங்கள் உரோமைய "மைல்" அளவில் தரப்படுகின்றன. ஆனால் வேல்சு நாட்டிற்கு "லீக்" அளவும், கீழை நாடுகளுக்கு "பாராசங்கு" (Parasang)அளவும் (ஒரு நாள் கால்நடை தூரம், சுமார் 5 முதல் 6.5 கி.மீ) தரப்படுகின்றன. இந்தியப் பகுதியில் "கல்" என்னும் இந்திய மைல் தரப்படுகிறது (சுமார் 3 கி.மீ.).

இந்த வரைபடம் சுமார் 200 ஆயிரம் கி.மீ. தூரத்தை உள்ளடக்கியதாக உள்ளது. எல்லா இடங்களும் அளவுக்கு ஏற்ப வரையப்படவில்லை. எடுத்துக்காட்டாக, உரோமைப் பேரரசின் மையப்பகுதியான இத்தாலி மட்டுமே 5 பகுதிகளை உள்ளடக்குகிறது. எஞ்சிய உலகப் பகுதிகள் அனைத்தும் 7 பகுதிகளுக்குள் அடக்கப்படுகின்றன.

வெவ்வேறு நிறங்கள்

தொகு

பாய்ட்டிங்கரின் உலக வரைபடத்தில் வெவ்வேறு நிறங்கள் பயன்படுத்துவதும் சிறப்பு. கிடைக்காமற்போன முதல் பகுதி மட்டும் கருப்பு வெள்ளையில் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. எஞ்சிய 11 பகுதிகளும் நிறங்கள் கொண்டு வரையப்பட்டன. இவ்வாறு, மஞ்சள் நிறம் நிலத்தைக் காட்டுகிறது; கருப்பு நிறம் பூமியின் எல்லையைக் காட்டுகிறது. மேலும் பெரும்பாலான எழுத்து விவரங்களும் கருப்பில் உள்ளன. சிவப்பு நிறத்தால் நெடுஞ்சாலைகள் குறிக்கப்படுகின்றன. கடல், ஏரி, ஆறு ஆகியவை பச்சை நிறத்தில் காட்டப்படுகின்றன. மஞ்சள் நரை நிறமும் இளஞ்சிவப்பு நிறமும் மலைகளைக் காட்டுகின்றன. இந்த நிறங்கள் மக்கள் வசிக்கும் இடங்கள், சாலைகள் பிரியும் இடங்கள் போன்றவற்றையும் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாய்ட்டிங்கரின் உலக வரைபடம் வெளியிடப்பட்ட வரலாறு

தொகு

இப்படம் முதல் முதல் 1598இல் அச்சிடப்பட்டு வெளியானது. இதன் முதல் பதிப்பாக ஒரு பகுதி மட்டும் பெல்சிய நாட்டு ஆண்ட்வெர்ப் நகரில் 1591இல் அச்சானது. பின்னர் 1598இல் முழுப் படமும் வெளியிடப்பட்டது.

இந்த வரைபடத்தின் மூலம் 1714 வரை பாய்ட்டிங்கரின் குடும்பத்தார் வசம் இருந்தது. பின் அது விற்கப்பட்டது. இவ்வாறே அரச குடும்பங்களும் செல்வர்களும் அதை வாங்கவும் விற்கவும் செய்தனர். ஆசுத்திரியாவின் இளவரசர் யூஜின் என்பவரின் கைவசமிருந்த அப்படம், அவருடைய இறப்புக்குப் பின் அரசு நூலகத்தால் வாங்கப்பட்டு, வியன்னாவில் பாதுகாக்கப்பட்டது. அங்கேயே இப்பொழுது தேசிய கருவூலமாகக் காக்கப்பட்டு வருகிறது.

1753இல் மீண்டும் அச்சிடப்பட்டது. 1872இல் கோன்ராட் மில்லர் என்னும் செருமானியப் பேராசிரியர் அந்த மூல வரைபடத்தின் ஒரு பிரதியை உருவாக்க அனுமதி பெற்றார். மேலும் ஐரோப்பாவின் பல வெளியீட்டு நிறுவனங்களும் பிரதிகள் எடுத்துக்கொண்டன.

1911இல் பண்டைய வரைபடத்தில் காணாமற்போன பகுதி என்று கருதப்படும் பகுதி உருவாக்கப்பட்டு பாய்ட்டிங்கரின் வரைபடத்தோடு சேர்க்கப்பட்டது. அப்புதிய பகுதியில் இங்கிலாந்து, எசுப்பானியா, போர்த்துகல் நாடுகளின் விடுபட்ட பகுதிகள் வரையப்பட்டன.

இவ்வாறு, இன்று கிடைக்கின்ற பாய்ட்டிங்கர் வரைபடத்தில் 12 பகுதிகள் உள்ளன. அவை கீழ்வருமாறு அமைந்துள்ளன:

  • பகுதி 1: எசுப்பானியா, போர்த்துகல், பிரித்தானியத் தீவுகளின் மேற்குப்பகுதி
  • பகுதி 2: பிரித்தானியத் தீவுகளின் கிழக்குப் பகுதி; ஓல்லாந்து, பெல்சியம்; பிரான்சு நாட்டுப் பகுதிகள்; மேற்கு மொரோக்கோ
  • பகுதி 3: பிரான்சு
  • பகுதி 4: இத்தாலி
  • பகுதி 5: இத்தாலி
  • பகுதி 6: இத்தாலி
  • பகுதி 7: இத்தாலி, டால்மாசியா, எப்பீரிசு, தாசியா, மோவேசியா, தார்தானியா
  • பகுதி 8: தாசியா (கிழக்கு), திராசியா
  • பகுதி 9: காண்ஸ்டாண்டிநோபுள்; போசுபோருசு; சின்ன ஆசியா; காக்கசு
  • பகுதி 10: அந்தியோக்கியா; அரேபியா
  • பகுதி 11: கொலேக்கிசு; மெசொபொத்தாமியா
  • பதிதி 12: ஆசிய சீத்தியா; இந்தியா, இலங்கை; பர்மா; மாலத்தீவு; சீனத்தின் ஒரு முனை

வரைபடத்தில் காணப்படும் இந்தியாவும் இலங்கையும்

தொகு

இந்த வரைபடத்தில் ஆசியாவின் பல பகுதிகள் காட்டப்படுகின்றன. மேற்கு ஆசியாவை அடுத்து, இந்தியா காட்டப்படுகிறது. இலங்கைத் தீவும் உள்ளது. அது பண்டைய கிரேக்கர்களாலும் உரோமையர்களாலும் "தப்ரோபானா" என்று அழைக்கப்பட்டது. இந்த வரைபடத்தில் இலத்தீனில் "insula taprobane" என்றுளது. மேலும் சீனாவின் ஒரு சிறு முனையும் காட்டப்படுகிறது.

கங்கை, தமிழகம், முசிறி பற்றிய குறிப்புகள்

தொகு

இந்த வரைபடத்தில் கங்கை, சிந்து போன்ற ஆறுகளோடு அவுரியசு, பலேரிசு என்னும் ஆறுகளும் உள. இவை இவை காவேரி, பாலாறு என்னும் பெயர்களின் திரிபாக இருக்கலாம். பண்டைய தமிழகத்தில் வாணிகத்தில் சிறந்து விளங்கிய முசிறிப்பட்டினம் "முசிரிஸ்" (Muziris) என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத்தில் வருகின்ற கொடுங்களூர். அங்கே அகுஸ்துஸ் மன்னனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் இருந்தது (Templum Augusti) என்ற செய்தியும் இந்த வரைபடத்தில் படமாக உள்ளது.[6]

இந்த வரைபடத்தில் தென்னிந்தியா பகுதியில் "தமிரிசே" (Damirice) என்றொரு பெயர் பெரிய எழுத்துகளில் உள்ளது. இது தமிழகத்தைக் குறிக்கும். மேலும் "Tundis" என்னும் பெயர் "தொண்டி" நகராக இருக்கலாம். தமிழகத்தைக் காட்டும் இன்னொரு பெயர் "Scytia Dymirice" என்றுள்ளது. அதன் அருகே குறிக்கப்படும் நகரங்கள் "Nincildae" ("Nelcynda"), "Pattinae" (பட்டினம்? காவிரிப்பூம்பட்டினம்?), "Parrica" (பொற்கை?),"Colchi" ("கொற்கை")?

இன்னொரு செய்தி என்னவென்றால் இந்தியப் பகுதிகளில் "in his locis elephanti nascuntur" என்னும் தொடரும், "in his locis scorpiones nascuntur" என்னும் தொடரும் உள்ளன. இவை முறையே "இந்தப் பகுதிகளில் யானைகள் தோன்றுகின்றன" என்றும் "இந்தப் பகுதிகளில் தேள்கள் தோன்றுகின்றன" என்றும் பொருள்படும்.

மேலும், மகா அலெக்சாண்டர் இந்தியாவின் வடமேற்கு பகுதிவரை தன் பேரரசை நிறுவிவிட்டு, திரும்பிச் சென்ற செய்தியும் இலத்தீனில் தரப்பட்டுள்ளது. அதாவது, "இங்கே அலெக்சாண்டருக்குக் கிடைத்த செய்தி: இன்னும் எவ்வளவு தூரம் செல்வாய் நீ, அலெக்சாண்டர்?"[7]

பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படல்

தொகு

பாய்ட்டிங்கரின் உலக வரைபடம் எளிதில் சிதைந்து போகும் நிலையீல் இருப்பதால் அது வழக்கமாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. சூரிய ஒளி பட்டால் அது கெடும் வாய்ப்பு உள்ளது. ஆயினும் 2007, நவம்பர் 26ஆம் நாள் அது யுனெஸ்கோவின் "உலக நினைவுக் களஞ்சியங்கள்" (Memory of the World) என்னும் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை முன்னிட்டு அந்நிகழ்ச்சியைக் கொண்டாட மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.[8]

பாய்ட்டிங்கர் உலக வரைபடத்தின் விரிவுத் தோற்றம்

தொகு
பாய்ட்டிங்கர் உலக வரைபடம். மேற்கே ஐபீரியா, கிழக்கே இந்தியா மற்றும் இலங்கை, சீனத்தின் ஒரு பகுதி

குறிப்புகள்

தொகு
  1. Annalina Levi and Mario Levi, Itineraria picta: Contributo allo studio della Tabula Peutingeriana (Rome:Bretschneider) 1967.
  2. History of cartography, Leo Bagrow, R. A. Skelton
  3. G.W.Bowersock (1994), pp.169-170,175,177,178-179,181,182,184
  4. G.W.Bowersock (1994), p.185
  5. இந்த உலக வரைபடத்தின் குறியீட்டு எண், சுவடி 324.
  6. Ball (2000), p. 123.
  7. Talbert, Richard J. A. (2010). Rome's World: The Peutinger Map Reconsidered. Cambridge University Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-76480-3.
  8. Bethany Bell, "Ancient Roman road map unveiled", BBC News, 26 November 2007.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tabula Peutingeriana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.