பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான்

பறவை துணையினம்

பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus paradiseus paradiseus) என்பது துடுப்பு வால் கரிச்சானின் துணையினம் ஆகும்.[1] இது தென்னிந்தியாவிலிருந்து தெற்கு தாய்லாந்து, வடக்கு மலாய் தீபகற்பம் மற்றும் தெற்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது.

விளக்கம் தொகு

பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான் மைனா அளவில், நீண்ட துடுப்பு வாலுசன் சுமார் 60 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகும் கால்களும் கறுப்பாகவும், விழிப்படலம் செம்பழுப்பாகவும் இருக்கும். இதன் உடல் பளபளப்பான கறுப்பு நிறத் தோற்றம் கொண்டது. இதன் தலையில் சிறிய பின் வளைந்த கொண்டை காணப்படும். வாலின் புற இறகுகள் இரண்டும் மெல்லிய கம்பி போல நீண்டு முடிவில் துடுப்புப் போல் அகன்று திருகிக்கொண்டு முடிந்திருக்கக் காண இயலும்.[2]

பரவலும் வாழிடமும் தொகு

பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான் தென்னிந்தியாவிலிருந்து தெற்கு தாய்லாந்து, வடக்கு மலாய் தீபகற்பம் மற்றும் தெற்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் உள்ள பசுங்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும், சமவெளிகளிலும், மலைகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரையிலும் காணப்படுகிறது. மூங்கில் காடுகள், இரப்பர் தோட்டங்களிலும் காண இயலும்.[2]

நடத்தை தொகு

இது வால்காக்கை, மரங்கொத்தி, ஈப்பிடிப்பான் முதலிய பறவைகளோடு சேர்ந்து இரைதேடி அலையும் பழக்கம் கொண்டது. இப்பறவை பலவகைப் பறவைகளைப் போல குரல் எழுப்பும் திறமை கொண்டது. இனப்பெருக்க காலத்தில் புலர்வதற்கு நெடு நேரம் முன்னதாகவே ஓயாது தொடர்ந்து டுங், டுங், டுங் எனக் கணீர் என்ற குரலில் கத்தியபடி இருக்கும். பூச்சிகள், சிறு வண்ணத்துப் பூச்சிகள், மலர்களில் உள்ள தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும்.

இப்பறவை பெப்ரவரி முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்யும். குச்சிகள், வேர், நார் ஆகியவற்றைக் கொண்டு மரங்களின் பறங்களில் தொங்கும் கிளைகளில் சிலந்தி நூல் கொண்டு கூடு கட்டும். கூடுகளை தரையில் இருந்து ஊந்து முதல் 15 மீட்டர் உயரத்தில் காண இயலும். பாலேட்டு வெண்மையான செம்பழுப்புக் கறைகள் கொண்ட மூன்று முட்டைகளை இடும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Orioles, drongos, fantails". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 359-361.