பிங்கலி வெங்கையா

இந்திய விடுதலை வீரர்

பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.

பிங்கலி வெங்கைய்யா
பிங்கலி வெங்கைய்யா
பிறப்பு(1876-08-02)ஆகத்து 2, 1876
மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா மாவட்டம்
இறப்பு4 சூலை 1963(1963-07-04) (அகவை 86)
விஜயவாடா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்

சுயசரிதை

தொகு

மச்சிலிப்பட்டணத்தில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார். பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், இலாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் சப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.

நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.தென்-ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

தேசியக் கொடி

தொகு
 

1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்திய சுதந்திர இயக்கத்தின் உறுப்பினர்களால் பல்வேறு தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின்பொழுது, மகாத்மா காந்தி இவரிடம் தனிக்கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார். இவரது வடிவைமைப்பு முதலில் இந்திய தேசிய காங்கிரசுக்காக வடிவமைக்கப்பட்டது, பின்னர் 1947 இல் மாற்றப்பட்டது.[2] [3] [4]

முதலில் கொடியின் நடுவில் ஓர் இராட்டை இருந்தது. பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியைப் பருத்தித் துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். [5]

இறப்பு

தொகு

தி இந்து நாளேட்டின் கூற்றுப்படி, "புவியியலாலராகவும், விவசாயியாகவும் இருந்த பிங்கலி வெங்கய்யா, மச்சிலிபட்டணத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்த கல்வியாளர் ஆவார். இருப்பினும், இவர் 1963இல் வறுமையில் இறந்தார். பெரும்பாலும் சமூகத்தால் மறக்கப்பட்டார்." தேசிய கொடியை உருவாக்கிய இவர், அந்த அளவு பிரபலமாகவில்லை. இவர் 1963 ஆம் ஆண்டு தனது 86 வயதில் மறைந்தார். இவர் மறைந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரை நினைவுகூரும் வகையில் 2009இல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இவருக்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. இந்த முன்மொழிவு குறித்து முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.[6][7]

சான்று

தொகு
  1. Archana, K. C. (2 August 2015). "A salute to the man who designed the Tricolour: Pingali Venkayya". India Today. http://indiatoday.intoday.in/story/a-salute-to-the-man-who-designed-the-tricolour-pingali-venkaya/1/455702.html. 
  2. பிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்
  3. "History of Indian Tricolor". Government of India. Archived from the original on 22 May 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  4. "Andhra Chief Minister Seeks Bharat Ratna Award For Designer Of Indian Flag". NDTV.com. 13 March 2021. https://www.ndtv.com/india-news/andhra-pradesh-chief-minister-ys-jagan-mohan-reddy-seeks-bharat-ratna-award-for-designer-of-indian-flag-pingali-venkaiah-2389726?pfrom=home-ndtv_topstories. 
  5. பருத்திச் செடியும் பாரதக் கொடியும்தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016
  6. Mellymaitreyi, M. L. (18 November 2012). "State recommends Bharat Ratna for Pingali Venkayya". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/state-recommends-bharat-ratna-for-pingali-venkayya/article4107399.ece. 
  7. - ராஜலட்சுமி சிவலிங்கம் (2 ஆகத்து 2015). "பிங்கலி வெங்கய்யா 10". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கலி_வெங்கையா&oldid=3577799" இலிருந்து மீள்விக்கப்பட்டது