பிரமசுந்தர முனிவர்

பிரமசுந்தர முனிவர் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவர். [1] காட்டில் தவம் செய்துகொண்டிருந்தவர். சேடக முனிவருக்குத் தலைமைக் குரு. பிரமசுந்தர முனிவரின் மனைவி பரம சுந்தரி. மிருகாபதி காட்டில் பெற்றெடுத்த குழந்தை உதயணனைத் தானும் தன் மனைவியுமாகப் பேணி வளர்த்தவர்.

பிரமசுந்தர முனிவருக்கும் பரமசுந்தரிக்கும் பிறந்த மகன் யூகி. உதயணனும் யூகியும் நண்பர்களாயினர். பிரமசுந்தரரும் சேடக முனிவரும் கற்பித்த கலைகளில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இயற்கை அறிவாலும் கற்பித்த செயற்கை அறிவாலும் அவர்கள் மேம்பட்டு விளங்கினர்.

பிரமசுந்தர முனிவர் யானையின் சினத்தை அடக்கி வயப்படுத்தும் மந்திரம் ஒன்றை உதயணனுக்குச் சொல்லிக் கொடுத்தார். மேலும் உதயணனுக்கு இசைப்பயிற்சி அளித்து, இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசையால் யானைகளை வயப்படுத்த வல்லதுமான கோடபதி என்னும் யாழையும் வழங்கினார். உதயணன் அந்த யாழை மீட்டும்போது அக்காட்டிலிருந்த யானைகளும், பிற விலங்குகளும் பறவைகளும் விரும்பிக் கேட்டு அவன் விருப்பப்படி செயல்பட்டன. இதனைக் கண்ட முனிவன் தன் மகன் யூகியையும் உதயணனிடம் ஒப்படைத்து உதயணனுக்கு உயிர்த்துணையாக விளங்கும்படி அறிவுறுத்தினார்.

அடிக்குறிப்பு தொகு

  1. =கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.  முன்னுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமசுந்தர_முனிவர்&oldid=3320659" இலிருந்து மீள்விக்கப்பட்டது