பிரம்ம சமாஜம்

பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சபை கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். 19ஆம் நூற்றாண்டிலேயே பல பிரிவுகளாக பிரம்ம சமாஜம் பிரிந்திருந்தது. 1861 ஆம் ஆண்டு நவீன் சந்திர ராய் தற்போதுள்ள பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தார்.[1]

இராசாராம் மோகன்ராய் - பிரம்ம சபைதொகு

இராசாராம் மோகன்ராய் கி.பி. 1772ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஹீபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கை களுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.

‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். ‘தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்குத் திருப்படையல் செய்ய வேண்டும். "ஒன்றே குலம்,ஒருவனே தேவன்" என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.

தேவேந்திர நாத் தாகூர் -பிரம்ம சமாஜம்தொகு

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.[2]

இந்திய பிரம்ம சமாஜம்தொகு

தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884). ஆங்கிலக் கல்வி பயின்ற இவரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக கிறித்துவ மதத்தில் ஈடுபாடு கொண்டு ஏசுவை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயற்சி செய்தார். இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.[2]

நவவிதானம்தொகு

கேசவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்த பிறகு அவரது கருத்துக்கள் பல மாறின. சமயசமரசம் அவரது முக்கியக் கருத்தாயிற்று. இவையும் பல்வேறு சமய சமரசக் கருத்துக்களும் சேர்ந்து இந்திய பிரம்ம சமாஜம், ’நவவிதானம்’ என்று மாறியது.[2]

சாதாரண பிரம்ம சமாஜம்தொகு

சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.brahmosamaj.in/
  2. 2.0 2.1 2.2 2.3 ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 577-578

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ம_சமாஜம்&oldid=2528420" இருந்து மீள்விக்கப்பட்டது