பிரிகன்டைன்

பிரிகன்டைன் (Brigantine) என்பது, இரண்டு பாய்மரங்களைக் கொண்ட ஒரு வகைப் பாய்க்கப்பல். இதன் முன் பாய்மரம் முழுதும் குறுக்குப் பாயமைப்புக் கொண்டது. முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய் முன்-பின் பாயமைப்பிலும், மேற்பாயும், பெரும்பாலும் உச்சிப் பாயும் குறுக்குப் பாயமைப்பிலும் இருக்கும்.

பிரிகன்டைன்
நியூபரிபோர்ட்டின் பிரிகன்டைன் எக்ஸ்பெரிமென்ட், 114 தொன்கள், 1803ல் அமெசுபரியில் கட்டப்பட்டது.
வகைபாயமைப்பு
அமைக்கப்பட்ட நாடுநடுநிலக்கடல்

நடுநிலக்கடல் பிரிகன்டைன்கள் தொகு

13ம் நூற்றாண்டு நடுநிலக்கடற் பகுதியில், பிரிகன்டைன் என அழைக்கப்பட்ட[1] பாய், துடுப்பு இரண்டினாலும் இயக்கப்படும் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.[2] இது இரண்டு பாய்மரங்களில் "லன்டீன்" பாயமைப்புக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு பக்கத்திலும் எட்டுத் தொடக்கம் பன்னிரண்டு வரையான துடுப்புக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இதன் வேகம், திசை மாற்றக்கூடிய தன்மை, இலகுவான கையாள்கை என்பன இதை நடுநிலக்கடற்பகுதிக் கடற் கொள்ளையர்களின் விருப்பத்துக்குரிய கப்பலாக இருந்தது. இதன் பெயர் "கடற் கொள்ளையன்" எனப் பொருள்படும் பிரிகன்டீனோ (brigantino) என்னும் இத்தாலியச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் பெயரைத் தவிர இதற்கும் வடக்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட பிந்திய பிரிகன்டைன்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.[3]

17ம் நூற்றாண்டும் அதற்குப் பின்னரும் தொகு

17ம் நூற்றாண்டளவில் அத்திலாந்திக் கடல்சார் நாடுகள் இப்பெயரை வேறு வகைக் கப்பலுக்குப் பயன்படுத்தினர். இக்கப்பலில் லட்டீன் பாயமைப்புக் கிடையாது. பதிலாக, முன் பாய்மரத்தில் குறுக்குப் பாயமைப்பும், முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய்க்கு காஃப் பாயமைப்பும், அதற்குமேல் குறுக்குப் பாயமைப்பும் இருக்கும்.[4] பிரிகன்டைனில் பின் பாய்மரமே முதன்மைப் பாய்மரமாகும்.

18ம் நூற்றாண்டின் முதல் பாதியளவில் இச்சொல் ஒரு வகைக் கப்பலையன்றி குறிப்பிட்ட வகைப் பாயமைப்பைக் குறிக்கப் பயன்பட்டது. இவ்வமைப்பு முன்னர் கூறியபடி முன் பாய்மரத்தில் முழு குறுக்குப் பாயமைப்பும், முதன்மைப் பாய்மரத்தில் முன்-பின் பாயமைப்பும் (முதன்மைப் பாய்), குறுக்குப் பாயமைப்பும் (மேற்பாய், உச்சிப்பாய்) கொண்டிருந்தது.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகன்டைன்&oldid=3563589" இருந்து மீள்விக்கப்பட்டது