பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்

சபா வளங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட நிறுவனம்

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (ஆங்கிலம்: British North Borneo Company (BNBC) அல்லது பிரித்தானிய வடக்கு போர்னியோ ஒப்பாவண நிறுவனம் (ஆங்கிலம்: British North Borneo Chartered Company (NBCC); மலாய்: Syarikat Berpiagam Borneo Utara British) என்பது வடக்கு போர்னியோ எனும் மலேசியா, சபா மாநிலத்தின் வளங்களை நிர்வகிப்பதற்கும்; பயன்படுத்துக் கொள்வதற்கும்; உருவாக்கப்பட்ட ஒரு பிரித்தானிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1881 நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

நிறுவனத்தின் முத்திரை - குறிக்கோளுரை

1888-ஆம் ஆண்டில் வடக்கு போர்னியோ பகுதி பிரித்தானியப் பேரரசின் பாதுகாப்புப் பகுதியாக மாறியது. ஆனாலும் 1946-ஆம் ஆண்டு வரை வடக்கு போர்னியோவின் நிர்வாகம் முழுவதும், பிரித்தானிய முடியாட்சி அரசாங்கத்தால் (Crown Colony of North Borneo) ஏற்றுக் கொள்ளப்படும் வரையில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனமே கவனித்துக் கொண்டது.[1]

வரலாறு

தொகு
 
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு.

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் 1890-இல் லபுவான் தீவை தற்காலிகமாக நிர்வகித்தது. பின்னர் இந்த லபுவான் பகுதி, நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பகுதியாக மாறியது.

1882-ஆம் ஆண்டில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு, சபாவை ஆட்சி செய்வதற்கான உரிமை கிடைத்து ஓர் ஆண்டு கழித்து, கயா தீவில் (Gaya Island) ஒரு குடியேற்றத்தை நிறுவியது.[2]

மாட் சாலே தாக்குதல்

தொகு
 
சண்டககானில் உள்ள நிறுவன நிர்வாகக் கட்டடம்
 
நிறுவனம் கையகப்படுத்திய வடக்கு போர்னியோ

இருப்பினும், மாட் சாலே (Mat Salleh) என்ற ஓர் உள்ளூர் தலைவரின் தாக்குதலின் போது இந்தக் குடியேற்றப் பகுதி எரிக்கப்பட்டது. அந்த உள்ளூர்த் தலைவர் பஜாவு பழங்குடியினரின் தலைவர் ஆவார். அந்தக் குடியேற்றப் பகுதி மீண்டும் நிறுவப்படவில்லை.

தொடக்கக் காலங்களில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தீவிரமான கவனம் செலுத்தியது. வட இந்தியாவில் இருந்து சீக்கிய காவல்துறை (Sikh Policemen) படையைக் கொண்டு வந்தது.

பொருளாதார நவீனமயமாக்கல்

தொகு

அடுத்ததாக, வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் தண்டனை வழங்கும் முறையை நிறுவுதல்; ஜெசல்டன் (Jesselton) நகரில் இருந்து தெனோம் நகரம் வரையில் இரயில் பாதையை உருவாக்குதல்; உள்ளூர்ப் பயிர் அறுவடை; பண்டமாற்று வர்த்தகத்தை ஊக்குவித்தல்; காபி, மிளகுத் தோட்டங்களை நிறுவுதல்; போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஜெசல்டன் நகரம் தற்போது கோத்தா கினபாலு என்று அழைக்கப்படுகிறது. அந்த நிறுவனம், அதன் பொருளாதார நவீனமயமாக்கல் மற்றும் வரிக் கொள்கைகளுக்கு சில எதிர்ப்புகளையும் சந்தித்தது.[3]

இரண்டாம் உலகப் போர்

தொகு

இரண்டாம் உலகப் போரினால் வட போர்னியோ பெரும் பாதிப்பை அடைந்தது. போரின் முடிவில், நிலம் மற்றும் உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அழிவுகளை அந்த நிறுவனத்தினால் சமாளிக்க இயலவில்லை. எனவே அந்த நிறுவனம் தங்களின் நிர்வாகத்தில் இருந்த வடக்கு போர்னியோவை பிரித்தானிய அரசாங்கத்திடம் (British Colonial Office) வழங்கியது.

1946 சூன் 26-ஆம் தேதி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. 15 ஜூலை 1946 முதல் 16 செப்டம்பர் 1963 வரையில், மலேசியா உருவாகும் வரை, வடக்கு போர்னியோ பிரித்தானிய முடியாட்சியின் நிலப்பகுதியாக இருந்தது.[4]

நிறுவனத்தின் தலைவர்கள் பட்டியல்

தொகு

நிறுவன இயக்குநர் குழுவின் தலைவர் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் தலைவர்கள்
1881–1882 அல்பிரட் டெண்ட்
1882–1893 ருதர்போர்ட் அல்கோக்
1893–1903 சர் ரிச்சர்ட் மார்டின்
1903–1909 சார்லஸ் செசல்
1909 – 14.09.1910 வில்லியம் கோவி
1910–1926 ஜோசப் வெசுட் ரிட்வே
03.10.1926 – 15.07.1946 நீல் மால்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. Treacher, W. H. (1891). British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo. Singapore, Govt. print. dept. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
  2. Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
  3. Great Britain. Foreign Office (1888). British and Foreign State Papers. H.M. Stationery Office.
  4. Renton, Alexander Wood; Robertson, Maxwell Anderson; Pollock, Frederick; Bowstead, William (1908). Encyclopædia of the laws of England with forms and precedents by the most eminent legal authorities. Sweet & Maxwell.

மேலும் காண்க

தொகு