பிரெஸ்ட் சண்டை

பிரெஸ்ட் சண்டை (Battle for Brest) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் பிரெஸ்ட் நகரை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின.

பிரெஸ்ட் சண்டை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

பிரெஸ்ட் நகர வீதிகளில் ஒரு அமெரிக்க எம்18 ஹெல்கேட் ரக கவச ஊர்தி
நாள் 7 ஆகஸ்ட் 1944 – 19 செப்டம்பர் 1944
இடம் பிரிட்டானி, பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
டிராய் மிட்டில்டன்
(அமெரிக்க 8வது கோர் தளபதி)
ஹெர்மான் - பெர்னார்ட் ராம்கே (கைதி)
(பிரெஸ்ட் கோட்டைத் தளபதி
பலம்
அமெரிக்க 8வது கொர்) 40,000 (2வது வான்குடை டிவிசன், 266 மற்றும் 343வது காலாபடை டிவிசன்கள்)
இழப்புகள்
4,000 ~1,000+ (மாண்டவர்)
4,000 (காயமடைந்தவர்)
38,000 போர்க்கைதிகள்

பிரான்சு மீதான நேசநாட்டுக் கடல்வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ல் நார்மாண்டிப் பகுதியில் துவங்கியது. இரு மாதங்கள் சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகளை முறியடித்து நேசநாட்டுப் படைகள் பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. இந்த முன்னேற்றத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கடல்வழியாக பிரான்சில் இறக்குமதி செய்யத் துறைமுகங்கள் தேவைப்பட்டன. இதற்காக நார்மாண்டியின் வடக்கே ஆங்கிலக் கால்வாய் ஓரமாக அமைந்திருந்த பிரெஞ்சு துறைமுக நகரங்களைக் கைப்பற்ற நேச நாட்டுப்படைகள் முயன்றன. அதேபோல தெற்கிலிருந்த பிரெஸ்ட் துறைமுகத்தைக் கைப்பற்றவும் முயன்றன. பிரெஸ்ட் நகரைக் கைப்பற்றினால் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து துறைமுகங்களுக்குச் சரக்குகளை அனுப்பாமல் நேரடியாக அந்நகருக்கு அனுப்பிவிடலாம் என்று நேச நாட்டு உத்தியாளர்கள் நினைத்தனர். இதனால் பிரெஸ்ட் தாக்கப்பட்டது.

ஆகஸ்ட் 7ம் தேதி அமெரிக்க 8வது கோர் பிரெஸ்ட் நகரை அடைந்து அதனைச் சுற்றி வளைத்தது. பிரெஸ்டின் ஜெர்மானியக் காவல் படைகளில் சிறப்பு வான்குடைப் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. போர் அனுபவம் வாய்ந்த இப்படையினர் அமெரிக்க முற்றுகையை சிறப்பான முறையில் சமாளித்தனர். பிரெஸ்ட் நகரின் பலமான அரண்நிலைகளும், அதன் காவல் படைகளுக்கு ஏராளமான இராணுவ தளவாடங்கள் இருந்தமையும் அமெரிக்கத் தாக்குதல் வெற்றி பெறுவதைத் தடுத்தன. கடுமையான வான்வழி மற்றும் பீரங்கி குண்டுவீச்சுத் தாக்குதல்களினூடே அமெரிக்கப் படைகள் பிரெஸ்ட் நகரைச் சிறிது சிறிதாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. இரு தரப்பினரும் ஒவ்வொரு தெருவிலும் சண்டையிட்டதால் பிரெஸ்ட் நகரின் பெரும் பகுதி சேதமடைந்தது. ஒன்றரை மாத சண்டைக்குப் பின்னர், செப்டம்பர் 19ம் தேதி பிரெஸ்ட் நகரம் சரணடைந்தது. ஆனால் அதற்குள் துறைமுகத்தை ஜெர்மானியர்கள் தகர்த்து பயனில்லாது செய்து விட்டனர். இதனால் நேச நாட்டுத் தளவாட இறக்குமதிக்கு பிரெஸ்ட் நகரம் பயன்படாது போனது. இதற்குப் பதில் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றி அதனைச் சரக்குப் போக்குவரத்துக்கு நேச நாட்டுப் படைகள் பயன்படுத்தின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஸ்ட்_சண்டை&oldid=2593930" இலிருந்து மீள்விக்கப்பட்டது